வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

திருச்சி ராமஜெயம் (நேருவின் தம்பி) கொலை வழக்கு: சிபிசிஐடி - டிஜிபி - ஷகில் அக்தர் ஐபிஎஸ்ஸிடம்

ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு விசாரணை அதிகாரி இவர்தான்!

மின்னம்பலம் : திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ஆம் தேதி அதிகாலை வாக்கிங் செய்ய சென்றவர் வீடு திரும்பவே இல்லை. அதற்கு பிறகுதான் அவர் மர்மமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட தகவல் தமிழகத்தை அதிர வைத்தது.
அந்த சம்பவம் நடந்து மிகச் சரியாக பத்து வருடங்கள் முடிய போகிற நிலையில், அவரை கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.


சுமார் ஐந்து வருடங்களாக இந்த வழக்கை அப்போதைய அதிமுக ஆட்சியில் போலீஸார் விசாரித்தபோது சரியான வகையில் துப்பு துலங்கவில்லை என்பதால் ராமஜெயத்தின் மனைவி லதா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அதன்படி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டாலும், பல வருடங்கள் ஆகியும் சிபிஐ விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில்தான் கொல்லப்பட்ட ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில், "சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் மீண்டும் இந்த வழக்கை தமிழ்நாடு போலீஸாரிடமே விசாரணைக்கு அளிக்க வேண்டும். இதற்கென சிறப்பு புலனாய்வுக் குழுவை உருவாக்க வேண்டும்" என்று புதிய கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, "முதலில் இந்த வழக்கை மாநில போலீஸார் விசாரித்து வந்தார்கள். பிறகு ராமஜெயம் குடும்பத்தினர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை கேட்டுப் பெற்றார்கள். மீண்டும் போலீஸார் விசாரிக்க வேண்டும் என்கிறீர்களே?" என நீதிபதி கேட்க...

மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான என்.ஆர்.இளங்கோ, "சிபிஐ விசாரணையில் ஐந்து வருடங்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த பத்து வருடங்களாக அதிமுக ஆட்சி நடந்த நிலையில் அவர்கள் இந்த வழக்கை சரியாக கவனிக்கவில்லை. இப்போது ஆட்சி மாறி இருக்கும் நிலையில் மீண்டும் இந்த வழக்கை மாநில போலீஸின் சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரித்தால் சரியாக இருக்கும் என்று கருதுகிறோம்" எனக் கூறினார்.

அப்போது நீதிபதி, "ஆட்சிகள் மாறினாலும் காவல் துறையும் நிர்வாகமும் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று கூற முடியுமா?" என்று கேட்டார்.

சிபிஐ தரப்பில் இதுபற்றி அளித்த பதிலில், "இந்த விசாரணைக்கு அவர்களின் குடும்பத்தில் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர் ரவிச்சந்திரன் தரப்பில், பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் சுட்டி காட்டப்பட்டது. அந்த வழக்கு முதலில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை சரியான முறையில் நடக்கவில்லை என்ற கோரிக்கையின் அடிப்படையில் மீண்டும் அந்த வழக்கை

சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் நடந்தது கொலை என்று கண்டறிந்து தெரிவித்த பின், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல இந்த வழக்கிலும்

சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் இது குறித்து பதிலளித்த தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய முறையில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து பிப்ரவரி 2 ஆம் தேதி, இந்த வழக்கை விசாரணை செய்ய உகந்த காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை நீதிமன்றத்துக்கு வழங்குமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் உயர் போலீஸ் அதிகாரி யார் என்று ஆலோசனை முதல்வர் தரப்பில் நடத்தப்பட்டிருக்கிறது.

அதில் தற்போது சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஷகில் அக்தர் ஐபிஎஸ்ஸிடம் இந்த விசாரணை பொறுப்பை அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன.

ஷகில் அக்தர் தலைமையிலான இந்த விசாரணைக் குழு மூலமாகவாவது ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேந்தன்
ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு விசாரணை அதிகாரி இவர்தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக