வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

மறைந்த புதுக்கோட்டை (எம் எல் ஏ) திரு .பெரியண்ணன் .. இலங்கையில் ஆரம்பித்த திராவிட பயணம்.

திரு ஏ. பெரியண்ணன்
  ராதா மனோகர்  :  1953 ஆம் ஆண்டு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் அழைப்பை ஏற்று  தமிழ்நாட்டில் இருந்து சிந்தனை சிற்பி சி பி சிற்றரசு ,மற்றும் கிளர்ச்சி பத்திரிகையின் ஆசிரியரான இரா. சு.தங்கப்பழம் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர்
இலங்கையில் 30 இற்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கு பற்றி சொற் பொழிவாற்றினார்கள்  
(19 ஏப்பிரல் 1953 ) கொழும்பு மாவட்ட தி மு கழகத்தின் சார்பில் கொழும்பு நகரசபை மண்டபத்தில் தோழர் ஆர் ஆர் கே டெய்லர் தலைமையில் சிந்தனை சிற்பி சிற்றரசுவுக்கும் இரா சு தங்கப்பழம் அவர்களுக்கும் பெரும் வரவேற்பு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
கூட்டம் ஆரம்பிக்க முன்பு ஆயிரக்கணக்கான கழக தொண்டர்கள் கறுப்பு சிவப்பு கொடிகளை உயர்த்தி பிடித்தவண்னம் ஊர்வலமாக சென்றனர்
அவர்களின் பதாகைகளில்
சாதி மதம் ஒழிக்க
கண்மூடி பழக்கம் மண்மூடி போக
சமத்துவம் ஓங்குக


இந்திய வம்சாவளி மக்களுக்கு வாக்குரிமை வழங்குக
போன்ற முழக்கங்கள்  அழகாக எழுதப்பட்டிருந்தன

இந்த வரவேற்பு கூட்டத்தையும்   ஊர்வலத்தையும்  பொறுப்பாக நின்று நடத்தியவர் திரு ஏ.பெரியண்ணன் அவர்களாகும்.
இவர் இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் கொழும்பு கிராண்டபாஸ் கிளையின் செயலாளராக இருந்தார்.
பின்னர்  இவர் தாயகம் திரும்பி திராவிட முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராகவும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் திமுக சட்டமன்ற கொறடாவாகவும் பணியாற்றினார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல பெருந்தலைகள் எல்லாம் வைகோவோடு சென்று மதிமுகவில் ஐக்கியமான வேளையிலும் இவர் திமுகவில் கலைஞரின் போர்வாளாகவே இறுதிவரை இருந்தார்  

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ  பெரியண்ணன்

1989ல் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலாக வென்ற அன்றைய மாவட்டக் கழகச் செயலாளர் திரு அ.பெரியண்ணன் அவர்களின் பதவி காலம் இரண்டாண்டில் ஆட்சி கவிழ்ப்பினால் முடிந்து போயிற்று.
பின்னர் 1991ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவருடைய உடல் நலத்தைக் காரணம் காட்டி வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை
அந்தத் தேர்தலில் மே 21 அன்று நிகழ்ந்த ராஜீவ் மரணம் கழகத்தை தாறுமாறாக்கியது. அப்போது தலைவர் கலைஞர் மட்டுமே துறைமுகம் தொகுதியில் வென்றார்.

1991ல் திரு ஏ பெரியண்ணன் அவர்களே, புதுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர்  N.சுந்தராஜன் அவர்கள் அகால மறைவிற்குப்பின் 1994ல் புதுக்கோட்டை தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக கலைஞரால் அறிவிக்கப்பட்டார். வேட்பு மனுவும் செய்தார் . ஆனால் தேர்தல் தள்ளிப் போயிற்று.அதற்கு பிறகு 1996 பொதுத்தேர்தலில் கழகம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக திரு பெரியண்ணன் அவர்களை அறிவித்தது.
1993ல்  திரு வைகோ அவர்கள் மறுமலர்ச்சி திமுகவை ஆரம்பித்தபோது தமிழகம் முழுதும் மூத்த மாவட்டக் கழக செயலர்கள் அனைவரும் அவர் பின் அணிவகுத்த பின்னரும் பெரியண்ணன் அவர்கள் கலைஞரோடு பயணித்தார்.
தொண்டர்கள் பெரியண்ணன் அவர்களோடு அணிவகுத்தனர். குறிப்பாக 1989ல் அமைச்சரவையில் இடம்பெற்ற க.சந்திரசேகரன் வைகோவோடு பயணப்பட்டார். அன்றைக்கு மந்திரி பதவி தனக்கு வரவில்லை என்று திரு அ. பெரியண்ணன் அவர்கள் சஞ்சலமடையவில்லை. கழக முன்னணியினர் கட்சியை விட்டு சென்ற போதிலும் தொண்டர்களை தனது அன்பால் கட்டிப் போட்டார்.

அதன் பின் 96 ல் வெற்றி பெற்றார்  
திமுகவின் சட்டமன்ற கொறடாவாக பணியாற்றினார்
 அண்ணா விருதையும் கலைஞர் கரங்களால் பெற்றார்
.ஆனால் பதவி ஏற்று 6 மாதங்களுக்குள் காலமானார் திரு ஏ. பெரியண்ணன் அவர்கள்
புதுக்கோட்டை சட்டமன்ற முன்னாள் எம் எல் ஏ பெரியண்ணன் அரசு அவர்கள் இவரின் மகன்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக