புதன், 5 ஜனவரி, 2022

Rowdy Baby Surya, சிக்காவின் யூடியூப் சேனல்கள் முடக்கம்?.. காவல் துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்!

  Vishnupriya R  -   Oneindia Tamil :  கோவை: இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோரின் யூடியூப் சேனல்களை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கோவை எஸ் பி செல்வ ரத்தினம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் ஸ்பா நடத்தி அதில் விபச்சாரம் செய்வதாக போலீஸ் கைது செய்யப்பட்டதாக சில ஆண்டுக்கு முன் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தனக்கும் அந்த ஸ்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரவுடி பேபி சூர்யா தெரிவித்து வந்தார்.
டிக்டாக் முடக்கப்பட்ட நிலையில் யூடியூப் சேனல் மூலம் தினந்தோறும் லைவ்வாக பேசி லைக்ஸ்களையும் நல்ல, கெட்ட கமெண்ட்களையும் இவர் பெற்று வந்தார்.

யூடியூப், ஷார்ட் பிலிம் இந்த நிலையில் மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த மற்றொரு யூடியூபரான சிக்கந்தர்ஷா என்பவருடன் ரவுடி பேபி சூர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
தவறான பாதைக்கு சென்ற தன்னை நல்வழிப்படுத்தி யூடியூப், ஷார்ட் பிலிம் மூலம் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே சிக்கந்தர்தான் என பல லைவில் ரவுடி பேபி சூர்யா தெரிவித்துள்ளார்.

சிக்காவும் சூர்யாவும் சேர்ந்து வீடியோ இருவரும் ஒன்றாக திருப்பூர் வீட்டில் தங்கியிருந்தனர். இவர்கள் டூயட், ரொமான்ஸ் வீடியோக்களை யூடியூப்களில் போட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் மிகவும் ஆபாசமான உடையணிந்து ஆபாச சைகைகளை செய்தும் இவர்களது வீடியோ வெளியானது.

அப்போது இவர்களது ஆபாச வீடியோக்கள் வருவதாகவும் அது குழந்தைகளை பாதிக்கும் என கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த திலகா மற்றும் அவரது கணவர் முத்துரவி ஆகியோர் தங்களது யூடியூப் சேனலான ஆர்கே முத்துரவி புரொடெக்ஷனில் குறிப்பிட்டிருந்தனர்.
இதனால் இந்த 4 பேருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

கொலை மிரட்டல் விடுத்த ரவுடி பேபி சூர்யா திலகாவை உருவ கேலி செய்தும் அவரை இழிவாகவும் ஆபாசமாகவும் ரவுடி பேபி சூர்யாவும் சிக்காவும் வீடியோவில் பேசியதாக திலகா கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
தங்களுக்கு ரவுடி பேபி சூர்யா லைவ் வீடியோவில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களது செல்போன் எண்ணை சூர்யா தனது எண் என கூறி யூடியூபில் பதிவிட்டதால் அந்த எண்ணுக்கு பலரும் போன் செய்தும் மெசேஜிலும் ஆபாசமாக பேசியதையும் புகாராக கொடுத்தார்.

இதையடுத்து பாலியல் ரீதியாக பேசுதல், பெண்களை இழிவாக பேசுதல், தகவல் தொழில்நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மதுரையில் பதுங்கியிருந்த சுப்புலட்சுமி எனும் ரவுடி பேபி சூர்யாவையும் அவரது காதலன் சிக்காவையும் கோவை சைபர் கிரைம் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரும் கோவை எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்பி செல்வரத்தினம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சமூக வலைதளங்களில் சமூகத்தையும், இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை சூர்யாவும், சிக்கந்தர்ஷாவும் பதிவு செய்து வருகின்றனர்.

சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடும் என்பதால் இவர்களின் யூடியூப் சேனலை முடக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் சமூகநலன்களையும், இளைஞர்களையும் சீர்கெடுக்கும் தவறான கருத்துக்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வோரின் சேனல்கள் முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக