புதன், 5 ஜனவரி, 2022

தமிழ் வழி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு... தேர்வுத்துறை உத்தரவு சொல்வது என்ன?

 கலைஞர் செய்திகள் : தமிழைப் பயிற்றுமொழியாக கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அதேபோல, கண்பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளியில் படிக்கும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா அனுப்பி வைத்துள்ள உத்தரவில், “பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை ஜனவரி 20-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும். எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

மேலும், பார்வை மாற்றுத்திறனாளி, செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. இது தவிர, தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக