திங்கள், 17 ஜனவரி, 2022

புதிய படங்களை ஓரங்கட்டிய Digital நினைத்ததை முடிப்பவன் - எம்.ஜி.ஆர்

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

மின்னம்பலம் : பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி எதுவாகினும் அது ரிலீஸ் படங்களோடு என்கிற அளவிற்கு தலைமுறை மாற்றம் ஏற்பட்டுவிட்டது. கொரோனா பிரச்சினைக்கு பின் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு ரிலீஸ் படங்கள் என்கிற திட்டமிடல் தமிழ்நாட்டில் இல்லாமல் போய்விட்டது.
வலிமை, ராதேஷ்யாம், ஆர்ஆர்ஆர் போன்ற பிரம்மாண்ட படங்கள் பொங்கல் ரேஸில் இருந்து ஒதுங்கியதால் பிரபுதேவா நடிப்பில் தேள், விதார்த் நடித்துள்ள கார்பன், சசிகுமார் நடிப்பில் கொம்புவச்ச சிங்கம், அஸ்வின் நடிப்பில் என்ன சொல்லப்போகிறாய், மற்றும் நாய் சேகர் என ஐந்து புதிய படங்கள் ஜனவரி 13, 14 அன்று வெளியானது.

அரசு அனுமதி வழங்கியுள்ள 50 சதவீதம் இருக்கை நிறைந்தாலே போதும் என்கிற மனநிலையில் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. அவற்றின் வசூல் என்ன? தேறுமா தேறாதா என்பதற்கு இல்லை என்பது தெரிந்துதான் படத்தை ரீலீஸ் செய்திருக்கிறார்கள் என்கிறது தியேட்டர் வட்டாரம். இந்த படங்கள் வெளியான முதல்நாள் முதல் காட்சியில் ஆட்கள் வராத சூழ்நிலையில் காட்சிகள் பல ஊர்களில் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இப்படி ஒரு சூழ்நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர் நடித்து வெளியான நினைத்ததை முடிப்பவன் திரைப்படம் இன்றைய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்குகளில் அவ்வப்போது திரையிடப்படுகிறது. மதுரை நகரத்தின் மையப்பகுதியில் மீனாட்சி அம்மன் கோயில் அருகில் இருக்கிறது சென்ட்ரல் சினிமா.

மதுரையில் 75 ஆண்டுகளை கடந்து எஞ்சி நிற்கும் ஒரே திரையரங்கு இதுமட்டுமே. பொங்கலை முன்னிட்டு நினைத்ததை முடிப்பவன் படம் இங்குதிரையிடப்பட்டது. பொங்கல் அன்று வெளியான கோடிகளில் சம்பளம் வாங்கும் கதாநாயகர்கள் நடித்த படங்களுக்கு மூன்று இலக்கத்தில் டிக்கெட் விற்பனை ஆவதே மதுரை நகர திரையரங்குகளில் போராட்டமாக இருந்தது என்கிறது தியேட்டர் வட்டார தகவல்.

நினைத்ததை முடிப்பவன் முதல் நாள் மொத்த வசூல் 25,000 ரூபாய் ஆகியுள்ளது. போட்டி போட்டு டிவி சேனல்கள் புதிய படங்களை திரையிட்டன, ஓடிடியில் புதிய படங்கள்... ஆனால் இவை அனைத்தையும் கடந்து முதல் நாளில் 25 ஆயிரம் ரூபாய் வசூல் ஆகியுள்ளது .

நினைத்ததை முடிப்பவன் படத்திற்கு முதல்நாள் மாலை காட்சியில் மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வசூல் ஆகியுள்ளது, பொங்கலுக்கு வெளியான புதிய படங்களின் வசூல் நிலவரங்கள், படம் பார்க்க வந்த பார்வையாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது சென்ட்ரல் தியேட்டரில் டிக்கெட் விலை 40 ரூபாய் தான். அதன் அடிப்படையில் முதல்நாள் வசூல் அடிப்படையில் சுமார் 650 பேர் நினைத்ததை முடிப்பவன் படத்தை பார்த்துள்ளனர். அதாவது ஒரு காட்சிக்கு 160 பேர் வீதம் சராசரியாக அந்தபடத்தை பார்த்துள்ளனர்.

பொங்கல் அன்று வெளியான நாய் சேகர், கொம்புவச்ச சிங்கம், தேள், கார்பன், என்ன சொல்லப்போகிறாய் படங்கள் இது போன்ற டிக்கெட் விற்பனையை எட்ட முடியவில்லை அனைத்து படங்களும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து, பிரம்மாண்டமான விளம்பரங்கள் செய்யப்பட்ட படங்கள். வெளியான முதல் நாள் முதல் காட்சிக்கு படம் பார்க்க மக்கள் வராததால் பல இடங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதை கேட்கும்போது 47 வருடங்கள் மூன்று தலைமுறை கடந்தும் நினைத்ததை முடிப்பவன் படத்தை முதல் காட்சியில் 160 பேர் பார்த்தது சாதனைதானே.

-இராமானுஜம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக