திங்கள், 17 ஜனவரி, 2022

திமுகவை நோக்கி ஒருவரும் அதிமுக சிலீப்பர் செல்கள் .. வழக்கு பயமாம்

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

மின்னம்பலம் :அதிமுக ஆட்சி முடிந்து திமுக ஆட்சிக்கு வந்து எட்டாவது மாதம் நடந்துகொண்டிருக்கிறது.  அரசியலில் எதிர்க்கட்சிகளில் இருந்தவர்கள் ஆளுங்கட்சிக்கு மாறுவது வழக்கமான காட்சிதான்.
அந்த வகையில் அதிமுக, பாமக போன்ற பல்வேறு கட்சிகளில் இருந்து கட்சிப் புள்ளிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் திமுகவுக்கு மாறி வருகின்றனர். இதற்கு சேலம் மாவட்டமும் விதிவிலக்கல்ல.
சேலம் மாவட்டத்தில் தற்போது அதிமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி ஒன்றிய கவுன்சிலர்களை திமுகவுக்குக் கொண்டுவரும் வேலையில் திமுகவின் ஒன்றிய செயலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எடப்பாடி ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றிபெற்றது. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் பல்வேறு இடங்களிலும் அதிமுகவினர் வெற்றிபெற்றனர். அவர்களை எல்லாம் இப்போது திமுகவில் சேர்த்து ஒன்றிய தலைவர்களாக திமுகவினர் வரும் சூழலை உருவாக்கி வருகிறார்கள் திமுக ஒன்றிய செயலாளர்கள்.

இதுபற்றித்தான் திமுகவின் கீழ் நிலை நிர்வாகிகள் பெருத்த சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். அவர்களிடம் நாம் பேசினோம்.

“இப்போது திமுகவில் இணைவதற்காக வருபவர்களில் பெரும்பாலானோர் அன்று எடப்பாடி ஆட்சியில் இளங்கோவனின் உதவியோடு அதிகாரத்தின் உச்சத்தில் வலம் வந்தார்கள். ஊராட்சி பகுதிகளில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்துள்ளார்கள். எடப்பாடியின் உதவியாளர் மணி, ராஜேந்திரபாலாஜி மீதான புகார்கள் போல இந்த கவுன்சிலர்கள் மீதும் ஆங்காங்கே புகார்கள் பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் அவர்கள் தற்போது தங்கள் மீதான நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன செய்வது என்று இளங்கோவனையே சந்தித்துக் கேட்டுள்ளார்கள். அப்போது இளங்கோவன் சொன்ன பதில், ‘இப்போதைக்கு நீங்கள் திமுகவுக்கு சென்றுவிடுங்கள். அங்கேயே இருங்கள். மத்ததை அப்புறமாக பாத்துக் கொள்ளலாம்’ என்பதுதான்.

தங்கள் மனைவியோ, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களோ ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்றினால் போதும் என்று நினைத்து அதிமுக கவுன்சிலர்களை இழுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் திமுக ஒன்றிய செயலாளர்கள்.

மற்ற மாவட்டங்களைப் போல சேலத்தில் இல்லை. இப்போது அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வரும் கவுன்சிலர்கள் பலரும் இளங்கோவன் அறிவுரைப்படிதான் வருகிறார்கள். அவர்களுக்கு இளங்கோவன் மீதோ, எடப்பாடி மீதோ எந்த கசப்பும் கிடையாது. தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே திமுக பக்கம் வந்திருக்கிறார்கள்.

நாளை நகராட்சித் தேர்தலில் திமுக அமைக்கும் வியூகம் என்ன என்பதை கூட்டங்களில் கலந்துகொண்ட அன்று இரவே அவர்கள் இளங்கோவனுக்கு தெரிவித்துவிடுவார்கள். தெரிவிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று வேதனையோடு கேட்கும் திமுக கீழ் நிலை நிர்வாகிகள் மேலும் தொடர்ந்தனர்.

“இப்படி பிற கட்சியினரை நம் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கு தலைமை ஒரு அளவு கோல் வைக்க வேண்டும் என்று சொல்லியும் யாரும் கேட்கவில்லை. இன்று திமுகவில் சேரும் கவுன்சிலர் மேல் அன்று திமுககாரனை அடித்த வழக்கு இருக்கிறது. இன்னும் சிலர் மேல் ஊழல் புகார் இருக்கிறது. இப்படி ஒவ்வொருவர் மீதும் புகார்கள் இருக்கின்றன. அதையெல்லாம் விசாரித்து சேருங்கள் என்றால் கேட்கமாட்டேன்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை சேர்த்துக் கொண்டால் நாளை ஒரு வேளை அரசியல் சூழல் மாறினால், இதே வேகத்தில் அதிமுகவுக்கு போய்விடுவார்கள். ஆக இன்றைக்கு சேலம் திமுகவே அதிமுகவின் ஸ்லீப்பர் செல்லாக மாறிவிட்டது. திமுகவின் முடிவெடுக்கக் கூடிய ஒவ்வொரு கூட்டத்திலும் இளங்கோவனோடு இன்றைக்கும் தொடர்பில் இருப்பவர்கள் கலந்துகொள்வார்கள். அவர்கள் மூலம் தகவல் இளங்கோவனுக்கும் எடப்பாடிக்கும் போகும்.

திருச்சி மாவட்டத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் திமுகவுக்கு மக்கள் ஆதரவோடு வெற்றியை வாங்கிக் கொடுத்தவர் அமைச்சர் கே.என். நேரு. அவர்தான் இப்போது சேலம் திமுகவுக்குப் பொறுப்பாளர் அப்படிப்பட்டவரையே தவறான தகவல்களைச் சொல்லி திமுக நிர்வாகிகள் ஏமாற்றுகிறார்கள். இதை அமைச்சர் நேருவின் கவனத்துக்கும், முதல்வர் கவனத்துக்கும் எப்படி கொண்டு செல்வது?" என்று நம்மிடம் கேட்கிறார்கள் அந்த திமுக நிர்வாகிகள்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக