திங்கள், 17 ஜனவரி, 2022

நீட் விலக்கு! அமித்ஷாவை சந்திக்கவிருக்கும் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு

 நக்கீரன் செய்திப்பிரிவு : நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக எம்.பி.க்கள் குழு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்திக்கின்றனர்.
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்தது. இக்குழுவும் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தது.
சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி தமிழக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய குழு, கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மனுவை குடியரசு தலைவரிடம் அளித்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து கட்சிக் குழு 29ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க காத்திருந்தனர். ஆனால், அமித்ஷா தமிழ்நாடு அனைத்து கட்சிக் குழுவினரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இது அப்போது பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து, கடந்த 5ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. டி.ஆர். பாலு, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது” என்று கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இன்று, தமிழ்நாடு அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு அமித்ஷாவைச் சந்திக்கவுள்ளனர். அப்போது நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக