வெள்ளி, 31 டிசம்பர், 2021

கூட்டணியால் காங்கிரசுக்கு ஒரு பயனும் இல்லை: கே.எஸ். அழகிரி

 மின்னம்பலம் :காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்ற முழக்கத்தை நாங்கள் கைவிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் வங்கதேச விடுதலைப் பொன்விழாவும், அன்னை இந்திரா காந்தியும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டிசம்பர் 30 இரவு நாமக்கல்லில் நடந்தது.
இந்தக் கருத்தரங்கத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, “ நானும் தலைவர் அழகிரி அவர்களும் சென்னையிலிருந்து காரில் நாமக்கல் வரும்போது வழி நெடுக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தொழிற்கூடங்கள், பள்ளிச்சாலைகள், கல்லூரிகள், அணைக்கட்டு என்று காலத்தால் அழிக்க முடியாத அடையாள சின்னங்களை பார்த்துக்கொண்டே வந்தோம். 

நமக்கு உள்ள பெருமை வேறு எவருக்கும் கிடையாது. இந்த நாடும் இந்த மாநிலமும் அடைந்துள்ள வளர்ச்சிக்கு நாமே காரணம். நம் கட்சியே காரணம். நம் காங்கிரஸே காரணம். நம் தலைவர்களே காரணம். வேறு எவனுக்கும் இந்தப்பெருமையில் நூலளவு கூட பங்கு கிடையாது.

நம் தலைவர்களைப் போற்றி நாம் பேசினாலே போதும். நாம் ஆர். எஸ்.எஸ். பற்றியோ சாவர்க்கர் பற்றியோ பேசவேண்டிய அவசியமே இல்லை. நாம் காந்தியைப் பற்றி பரப்புரை செய்தாலே காங்கிரஸ் வளரும்.

வங்கதேசப்போர் என்பது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்குள் நடந்த சண்டையால் கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மக்கள் கோடிக்கணக்கானவர்கள் அகதிகளாக இந்தியாவுக்குள் வந்து அடைக்கலமானார்கள். அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு அன்னை இந்திரா காந்திக்கு ஏற்பட்டது. அன்னை இந்திரா உலகநாடுகள் முழுக்க சுற்றுப்பயணம் செய்து நியாயத்தை எடுத்துரைத்து பதின் மூன்றே நாட்களில் போரிட்டு லட்சம் வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து பாகிஸ்தான் பணிந்து வந்தபிறகு வங்கதேசம் என்ற ஒரு நாட்டை உலக வரைபடத்தில் புதிய பூமியாக உதிக்கச்செய்தார்.

இது சாதாரண வெற்றியல்ல. ஆனால் இன்றைக்கு இருக்கும் பாஜக அரசாங்கம் வங்கப்போரின் பொன்விழாவை நடத்துகிறது. அதில் திட்டமிட்டு வங்கப்போரின் கதாநாயகியான அன்னையின் பெயரை இருட்டடிப்பு செய்து ஜனாதிபதியிலிருந்து மோடிவரை உரையாற்றுகிறார்கள் இந்த அநியாயத்தை காங்கிரஸ் சார்பாக கண்டிக்கவேண்டும் என்ற தார்மீக எண்ணத்தோடு தலைவர் அழகிரி மாவட்டம் தோறும் நடத்தவேண்டும் என்ற ஆணைக்கிணங்கவே இந்த கருத்தரங்கம்” என்று பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக பிரிவின் தலைவர் கோபண்ணா.

இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி... அண்மையில் கொண்டாடப்பட்ட வங்கதேச உருவாக்க பொன் விழா தினத்தில் பிரதமர் மோடி வங்க தேசத்தை உருவாக்கிய இந்திரா காந்தியின் பெயரை இருட்டடிப்பு செய்தது நாட்டின் சாபக் கேடு என்று குறிப்பிட்டார். வங்கதேசப் போர் பற்றி விரிவாக எடுத்துக் கூறியவர் நடப்பு அரசியலையும் பேசினார்.

“என்னிடம் ஒரு ஊடக நண்பர் கேட்டார். காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பதையே தற்போது நீங்கள் சொல்வதில்லையே என்று கேட்டார்.

நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள எந்த ஒரு கட்சியாவது கூட்டணி இல்லாமல் நிற்பதற்குத் தயாரா? பாஜக, இடது சாரி கட்சிகள், சிவசேனா, மம்தா பானர்ஜி, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி இல்லாமல் நிற்பதற்குத் தயாரா? ஆனால் காங்கிரஸ் மட்டும் கூட்டணி இல்லாமல் நிற்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்?

கூட்டணி என்பதன் பொருளே அதன் மூலமாக நமக்கு பலன் அடைய வேண்டும் என்பதுதான். ஆனால் துரதிர்ஷ்வசமாக தமிழகத்தில் கடந்த 40 ஆண்டு காலமாக கூட்டணியின் காரணமாக காங்கிரஸ் சரிந்து விழுந்திருக்கிறோம். ஒரு அடி முன்னே வைத்தால் ஒரு அடி பின்னே வைக்கிறோம். பின்னால் ஒரு அடி வைப்பதால் முன்னே அடியெடுத்து வைக்கமாட்டோம் என்று நினைக்காதீர்கள். அதுபோல், காமராஜர் ஆட்சியை கூட்டணியால் மறந்துவிட்டோமென்று நினைக்காதீர்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கூட பிரதமர் வேட்பாளரை விட அறிவிக்கவில்லை. ஆனால் நமது கூட்டணியின் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள், ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் பெரு வெற்றிபெற்றதற்கு இதுவும் காரணம். ராகுல் காந்தி பெயரை சொன்னால் வெற்றிபெறுவோமென்று என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஸ்டாலினுக்கு தெரிந்திருக்கிறது. இந்த நிலையில் ஸ்டாலின் முதல்வர் என்று சொல்வதில் நமக்கு என்ன தயக்கம் இருக்கப் போகிறது. அவர் கொஞ்ச நாட்களுக்கு முதல்வராக இருக்கட்டுமே.

நாம் அதற்குள் காங்கிரஸ் கட்சியை வளர்ப்போம். ஏராளமான அணிகளை உருவாக்குவோம். கிராமம் கிராமமாக காங்கிரஸை பலப்படுத்துவோம். ஒவ்வொரு தெருவிலும் ஐந்தாறு காங்கிரஸ் கொடிகள் பறக்கட்டும். கட்சியை பலப்படுத்திவிட்டு நாம் இந்த நாட்டின் முதலமைச்சர் பதவியை பெறலாம். அதில் ஒன்றும் சிரமமில்லை. காங்கிரஸ் காரர்கள் உழைக்க வேண்டும். உழைத்தால்தான் உயர்வு பெற முடியும்” என்று குறிப்பிட்டார் கே.எஸ். அழகிரி.

காங்கிரஸ் சார்பில் அடர்த்தியான கூட்டங்கள் சமீபத்தில் நடைபெற்று வருகின்றன. அதில் இடம்பெறும் அளவுக்கு நாமக்கல் மாவட்ட தலைவர் சித்திக் ஏற்பாட்டில் இந்த நாமக்கல் நிகழ்ச்சியிலும் அரங்கு நிறைந்த கூட்டம் காங்கிரசுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

-ராகவேந்திரா ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக