வியாழன், 30 டிசம்பர், 2021

கட்டப்பஞ்சாயத்து தடுப்பு .. என்கவுண்டர் எஸ் பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை!

 மின்னம்பலம் : சென்னை புறநகர்ப் பகுதிகளில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளைத் தடுக்கக் கூடுதல் எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண காவல்துறையும் நீதிமன்றங்களும் இருந்தாலும் கட்டப்பஞ்சாயத்துகளும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
சமீப நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து அதிகம் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ரவுடிகள் இடையே நடைபெறும் மோதல் மற்றும் கொலை காரணமாக நிம்மதியாக வெளியில் சென்று வர முடியவில்லை என்று பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.


இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து செயல்களை தடுக்கவும், சிறு நிறுவனங்களிடம் மாமூல் வசூலிப்பதைத் தடுக்கவும் கூடுதல் எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையில், தமிழகக் காவல்துறை சிறப்புப் படையை அமைத்துள்ளது.

இந்த சிறப்புப் படை, கட்டப்பஞ்சாயத்துகளைக் கண்காணித்துத் தடுப்பது மட்டுமின்றி, சென்னை புறநகர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைப் பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்குத் தொல்லை தரும் நபர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கூடுதல் எஸ்பி வெள்ளத்துரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று போலீஸ் வட்டாரத்தில் பெயரெடுத்தவர்.

2003 ஆம் ஆண்டு அயோத்தி குப்பம் வீரமணி என்ற ரவுடியை இவர் என்கவுண்டர் செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டர் செய்த சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக