வியாழன், 30 டிசம்பர், 2021

Chennai Rain:சென்னையில் கனமழை! .. செம்பரப்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது

 

 tamil.asianetnews.com - Thanalakshmi V :  தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
சென்னை பெருநகரில் முற்பகல் முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில், இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 3ம் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சென்னை மற்றும் டெல்டா மாட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னையைப் பொறுத்தவரை தாழ்வான பகுதியில் மழை நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.


டிசம்பர் மாதத்தில் மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்குக் கடலோர மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, தி.நகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் திடீர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக