ஆட்சி மாறி ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அ.தி.மு.க. தலைமையானது, ஒரு பக்கம் சசிகலா - தினகரன் தரப்பிடம் போராடி வருகிறது. இன்னொரு பக்கமோ, ஆளும் கட்சித் தரப்பிலிருந்து தொடர்ச்சியாகத் தரப்படும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலை!
குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து, வரிசையாக, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸ் மூலம் ரெய்டு, வழக்கு என ஆளும் கட்சி குடைச்சல் கொடுக்கிறது என்கிறார்கள், அ.தி.மு.க.வினர்.
முன்னாள் அமைச்சர்களைவிட முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்குதான் திமுக அரசாங்கம் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது என்பதே கடந்த ஆட்சியில் பலன்பெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொடநாடு கொலை - கொள்ளை வழக்கில் ( சதிவேலையில் ஈடுபட்டதாக) இணைப்பதற்கான முகாந்திரங்களை காவல்துறையினர் கவனமாக ஆய்ந்து வருகின்றனர்.
கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களைப்போல இல்லாமல், கொடநாடு விவகாரத்தில், படிப்படியாக, ஒவ்வொரு நடவடிக்கையாக எடுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டும் காவல்துறை உயரதிகாரிகள், இதுதான் இப்போதைய பாணி என்கிறார்கள். அதாவது, கொடநாடு விவகாரத்தில், இப்படிதான் நடந்திருக்குமோ என கிட்டத்தட்ட பொதுமக்கள் ஊகத்திலேயே மனதில் பதியும்படி இந்த ஆபரேசன் நடத்தப்படுகிறது என்கின்றன தகவல்கள்.
இப்படி இடியாப்பச் சிக்கலில் தவித்துவரும் அதிமுக தலைமைக்கு, மேலும் ஒரு நெருக்கடியைத் தருவதில் தீவிர முனைப்பு காட்டிவருகிறது, தி.மு.க. தலைமை.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ச்சி பணிகளை பார்வையிட நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவிற்கு, எதிரணியில் இருக்கும் 15 எம்.எல்.ஏ.களைக் கவர்ந்து இழுக்கவேண்டும் என அறிவாலயத் தரப்பில் ஆணையிடப்பட்டுள்ளது என்கிறார்கள். இதை நடத்திக்காட்ட வேண்டும் என 'இலக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை’யாக இது அவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது.
வேறு எங்கையும்விட கொங்கு வட்டாரத்தில், மேற்கு, வடமேற்கு தமிழகப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் தேர்தலில் இங்கு திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதைவிட, எதிர்பாராத முடிவு கிடைத்தது என்பது அக்கட்சியினரின் வருத்தம்.
முதலமைச்சரின் மாவட்ட சுற்றுப்பயணங்கள் நான்கு திசைகளிலும் இருந்தாலும், கொங்கு பகுதிகளின் பயணங்களுக்கு ஆட்சியிலும் கட்சியிலும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சியோ கட்சி நிகழ்ச்சியோ எதுவானாலும் மாவட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களும் தவறாமல் கலந்துகொள்கின்றனர். அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகளை அள்ளவேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, அலேக்காகத் தூக்கவேண்டும் என்பதும் அதே அளவு முக்கியத்துவம் கொடுத்து காரியங்கள் தொடங்கியுள்ளன.
அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி
முதல் கட்டமாக, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் வலையில் இரண்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் சிக்கியுள்ளனர் என்பது அறிவாலயத்துக்குக் கிடைத்திருக்கும் கரும்புச் செய்தி.
அதாவது, அமைச்சர் பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி புதன் அன்று தருமபுரி மாவட்டத்துக்குச் சென்றார். அன்று காலை 10. 45 மணிக்கு அரூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்துவைத்தார். அந்த நிகழ்ச்சி முடிந்தபின்னர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தசாமி (வன்னியர்), அதிமுக அரூர் தனித் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் இருவருடனும் அமைச்சர் ஆற அமர பேசிக்கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்குப் பிந்தைய காலம் என்றாலும் அமைச்சருடன் நீண்ட நேரம் கலந்துரையாடும் அளவுக்கு என்ன பெரிய விவகாரம் என எதிர்க்கேள்வியுடன் விவரிக்கிறார்கள், இரு தரப்பிலுமே!
அரூர் தனித் தொகுதி எம்.எல்.ஏ. சம்பத்
தருமபுரி நகரப் பகுதியில் உள்ள அதியமான் ஓட்டலில் தங்கியிருந்தார், அமைச்சர் பன்னீர்செல்வம். நேற்று (டிசம்பர் 16) வியாழனன்று அவரைச் சந்தித்து அரைமணி நேரம் பேசியிருக்கிறார், பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி.
இந்த சந்திப்புகளுக்கு அடுத்து இங்கு நடக்கப்போகும் நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டே இருங்கள்; இந்த ஆட்டத்தின் முழுமையான காட்சியும் தெளிவாகும் என அடித்துச்சொல்கிறார்கள், அறிவாலயத் தரப்பில்.
இவர்கள் இருவரைப் போலவே இன்னும் 13 பேரைக் கவர்ந்திழுத்து தனியாக அணி கட்டவைப்பதுதான் திட்டம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இப்படி சிலரை தனக்குச் சாதகமாக அணிசேர்த்து, அரசியல் செய்தது வரலாறு. இப்போது அவர் தலைமைவகித்த கட்சிக்கே அவர் கையாண்ட உத்தி பாதகமாக வந்துநிற்கிறது.
உருவாக்கப்படும் புதிய அணியை தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் செயல்படவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
- வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக