விகடன் : ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறி நடிகை ஜாக்குலினிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது தெரிய வந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடியை பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகேஷ் சந்திரசேகரும், அவரின் மனைவி லீனாவுடன் கூட்டாளிகள் சிலர் இணைந்து ஏராளமானோரிடம் சட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரி என்று கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதோடு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் ஏராளமான பொய்களை சொல்லி தனது வலையில் விழ வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதில் சுகேஷ் சந்திரசேகர் எப்படியெல்லாம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் பொய் சொல்லி தனது வலையில் விழ வைத்தார் என்பது குறித்து அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இரண்டு முறை வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
ஜாக்குலினுடன் செஃல்பி எடுக்கும் சுகேஷ்
அவர் கொடுத்த தகவலின் படி, முதன் முதலில் சுகேஷ் தன்னை சந்திரசேகர் ரத்னவாலா என்று ஜாக்குலினிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
அதோடு தான் சன் டிவி உரிமையாளர் என்றும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஜாக்குலினை தொடர்பு கொள்ள சுகேஷ் பல முறை முயற்சி மேற்கொண்டார்.
2020-ம் ஆண்டில் டிசம்பரில் இருந்து 2021ம் ஆண்டு ஜனவரி வரை ஜாக்குலின் நம்பருக்கு பல முறை போன் செய்துள்ளார்.
ஆனால் ஜாக்குலின் தெரியாத நம்பர் என்பதால் போனை எடுத்து பேசவே இல்லை. இதையடுத்து ஜாக்குலின் மேக்கப் கலைஞர் ஷான் என்பவருக்கு அரசு அதிகாரி ஒருவர் போன் செய்து, சந்திரசேகர் மிகவும் முக்கியமான நபர் என்பதால் அவரிடம் ஜாக்குலின் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், சந்திரசேகர் ஜாக்குலினிடம் பேச விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஜாக்குலின் சந்திரசேகரின் போனை எடுத்து பேசினார். அவர் தன்னை சன் டிவி உரிமையாளர் என்றும், தான் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தான் உங்களின் தீவிர ரசிகன் என்றும், தென்னிந்திய மொழியில் உங்களை வைத்து படம் எடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு ஜாக்குலின் மேக்கப் கலைஞருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் பேசுவதாக கூறி ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் சேகர் என்ற சுகேஷ் சந்திரசேகர் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நபர் என்றும், அவரிடம் தொடர்பில் இருக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அமலாக்கத்துறையின் விசாரணையில் அமித் ஷாவின் அலுவலகத்தில் இருந்து வந்த போன் அழைப்பு சுகேஷ் சந்திரசேகர் ஏற்பாட்டில் அவரின் கூட்டாளிதான் போன் செய்திருப்பது தெரிய வந்தது.
அதோடு மூன்று ஆடம்பர பேக், இரண்டு ஜிம் ஆடைகள், 2 ஜோடி ஷு, இரண்டு ஜோடி வைர காதணி, 2 பிரெஸ்லெட் போன்றவற்றையும் ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் பரிசாக கொடுத்திருப்பது ஜாக்குலினிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுகேஷ் கொடுத்த காரை திரும்ப கொடுத்துவிட்டதாகவும் ஜாக்குலின் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் சுகேஷ் கைது செய்யப்படும் வரை அடிக்கடி ஜாக்குலினுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சுகேஷ் சந்திரசேகரிடம் 1.5 லட்சம் டாலர் அளவுக்கு ஜாக்குலின் கடன் பெற்று இருப்பதும், ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, ரூ.9 லட்சம் மதிப்புள்ள இரண்டு பூனைக்குட்டிகளும் சந்திரசேகரிடம் ஜாக்குலின் பரிசாக பெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக