வெள்ளி, 17 டிசம்பர், 2021

நீதிக்கட்சி அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இன்று(17-12-1920) .. 101 வருட திராவிட வரலாற்றின் முதல் தினம்

May be an image of 6 people and text that says 'டாக்டர் நடேசனார் பிட்டி. தியாகராயர் டாக்டர் டி.எம்.நாயர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் கே.வி.ரெட்டி பனகல் அரசர்'

 Seshathiri Dhanasekaran  :  101 வருட திராவிட வரலாற்றின் முதல் அத்தியாயம் துவங்கிய தினம் இன்று.
முதல் நீதிக்கட்சி ஆட்சி அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இன்று(17-12-1920)
1919 ஆம் ஆண்டு மாண்டேகு-செம்சுபோர்டு சட்டப்படி அமையப் பெற்ற சட்டமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளும், டிசம்பர் 1, 2 நாள்களிலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு தீவிரப் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டது. காங்கிரஸ், நீதிக் கட்சியை எதிர்த்தது.1919இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டப்படி நடைபெற்றது நீதிக் கட்சி ஆட்சி. அது இரட்டை ஆட்சி முறையாகும். நீதிக் கட்சி ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு முதலமைச்சர், 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர்.

நீதிக்கட்சி மாண்டேகு - செம்சு போர்டு சீர்திருத்தங்களை ஏற்க முடிவு செய்தது. தேர்தல் பிரச்சாரத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்கொண்டு பெருவாரி யான வெற்றியும் பெற்றது. 98 இடங்களில் 63 இடங்களைக் கைப்பற்றியது. நியமன உறுப்பினர்களில் இக்கட்சியின் ஆதரவாளர்கள் 18 பேர் இடம் பெற்றனர். 127 பேர் அடங்கிய அவையில் நீதிக்கட்சியின் வலிமை 81 ஆக இருந்தது. பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு இடங்கள் ஒதுக்கியதால் சட்ட மன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் பெற ஒதுக்கீடு வாய்ப்பாக அமைந்தது.
சென்னை மாநில ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபு சர். பி.டி. தியாகராய செட்டியை அமைச்சரவை அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால், அழைப்பை ஏற்காத தியாகராயர் கடலூர் ஏ. சுப்பராய ரெட்டியாரை பதவி ஏற்கச் செய்தார்.
இது நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை என்பது மட்டுமல்லாது சென்னை மாநிலத்தின் முதல் அமைச்சரவையாகவும் அமைந்தது. 1920 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாள் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அப்போது முதல் அமைச்சர் என்ற பதவி கிடையாது.
ஆனால் அவர் ஆங்கிலத்தில் பிரிமியர் எனவும் அல்லது முதன்மை அமைச்சர் எனவும் அழைக்கப்பட்டார். அவரின் பரிந்துரையின் பேரில் மாற்றப்பட்ட ஒரு பாதி அதிகாரப் பகிர்வுத் துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
கல்வி, பொதுப்பணி, கலால், பதிவுத் துறைக்கு பனகல் அரசர் என்றழைக்கப்பட்ட பி.இராமநாயனிங்கர், கூர்மா வெங்கட்ட ரெட்டி, நாயுடு (கே.வி. ரெட்டி நாயுடு) ஆகிய ஆந்திர மாநிலப் பகுதியினர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
உடல்நலக் குறைவினால் மிகக் குறுகிய காலத்திலேயே சுப்பராயலு ரெட்டியார் பதவி விலகினார். அவரது இடத்திற்கு ஏ.பி.பாத்ரோ நியமிக்கப்பட்டார்.
அமைச்சரவையில் பார்ப்பனரல்லாதவர்களே முழுவதும் இருந்தனர். அதனால் ஆளுநர் பி.இராஜகோபாலாச் சாரி, பி.சீனிவாச ஐயங்கார், சி.பி.இராம சாமி ஐயர் ஆகியோரை மிக முதன்மைப் பொறுப்புகளில் நியமித்தார். 1921 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 12 ஆம் நாள் சென்னை சட்டமன்றம் தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக