செவ்வாய், 5 அக்டோபர், 2021

போராடிய விவசாயிகள் மீது கார் ஏறிய அதிர்ச்சி வீடியோ!

 கலைஞர் செய்திகள் : உத்தர பிரதேச மாநிலம், லட்சுமிபூர் கேரி என்ற பகுதியில் ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அதேபகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அம்மாநில துணை முதல்வர் கேசவ் மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொள்ளச் சென்றனர்.
இவர்களின் வருகையை அறிந்த விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒன்றிய அமைச்சரை வரவேற்பதற்காக சென்ற கார் ஒன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வேகமாக மோதி நிற்காமல் சென்று தடுமாறி விழுந்தது.
இந்த சம்பவத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மேலும் ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதையடுத்து ஒன்றிய அமைச்சர் அஜஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 14 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் மீது கார் மோதும் வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் விவசாயிகள் சாலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது அவர்களுக்குப் பின்புறம் வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் செல்கிறது. பிறகு இந்த காருக்கு பின்னால் வந்த காரும் விவசாயிகள் மீது மோதிவிட்டுச் செல்கிறது. தற்போது இந்த பதறவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக