செவ்வாய், 5 அக்டோபர், 2021

வள்ளலார் பிறந்தநாள்: தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

 மாலைமலர் :  வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என கடைப்பிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823-ல் பிறந்தார்.
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார்.
‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய இவர், மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

திருவருட்பா ஆறாம் திருமுறையில், எந்தச் சமயத்தின் நிலைப்பாட்டையும் எல்லா மதநெறிகளையும் சம்மதம் ஆக்கி கொள்கிறேன் என்றார். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர், சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டு தோறும் “தனிப்பெருங்கருணை நாள்” என கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக