வெள்ளி, 17 செப்டம்பர், 2021

இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில்... இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் பேச்சு

பயணிகள் கப்பல் - சித்தரிப்புப் படம்.

மீனவர்களுடன் உரையாடல்.

BBC : இந்தியா - இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் சிவகங்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இலங்கை அமைச்சர்களை சந்தித்து, 'இந்திய இலங்கை மக்கள் வேற்றுமை இல்லாமல் உறவாக பழகி வருகிறோம். ஆனால், சமீப காலமாக தமிழக மீனவர்களை எதிரியாக நினைத்து இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுடன், அந்நாட்டு கடற்படையால் பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.
200-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ளன. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை இரு நாட்டு மீனவ பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தி இரு நாட்டு மீனவர்களும் பாரம்பரிய இடத்தில் மீன்பிடித் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான், இலங்கையில் உள்ள இந்திய படகுகளை விடுவிக்க வேண்டும், எதிர்காலத்தில் கடலில் நட்பு பயணம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையில் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்களின் உறவுகளை மேம்படுத்தி அமைதியான முறையில் மீன்பிடி தொழில் நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் குறுகிய கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதால் எல்லை தாண்ட நேரிடுகிறது, இதனால் இரு நாட்டு கடற்படையினரும் நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே இரு நாட்டு கடற்படையினர் பேசி சுமூக தீர்வு ஏற்பட இலங்கை அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் துறைமுகப் பணிகளை சீனா ஏற்று நடத்துவதில் எந்த பாதிப்பும் இல்லை. சீனா துறைமுகம் கட்டவில்லை துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார் செந்தில் தொண்டைமான்.

அதன் பின்னர் பேசிய இலங்கை கிராம அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலங்கை இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து உரையாடினோம். இது குறித்து புதுச்சேரி முதல்வர் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

"காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும்போது நிச்சயமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலாத்துறை, சமய நிகழ்வுகள், மருத்துவத்துறை உள்ளிட்ட உறவுகள் மேம்படும். இரு நாட்டுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்," என்றார் இலங்கை அமைச்சர் வியாழேந்திரன்.

இலங்கை அமைச்சருடனான சந்திப்பு குறித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையின் கடுமையான கெடுபிடியால் தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க முடியவில்லை எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்திட வேண்டும்.

இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக இலங்கை அமைச்சர் உத்தரவாதம் தந்துள்ளார். இதனை தமிழக மீனவர்கள் முழுமையாக நம்புகிறோம்.

ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகளிடம் மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற்று தரவும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மீனவர்களின் பாரம்பரிய தொழிலான மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என ஜேசு ராஜா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக