வெள்ளி, 17 செப்டம்பர், 2021

நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு! “ஃபேஸ்புக் நண்பர்கள் வழிகாட்டலால் சட்டம் படித்தேன்” :

“ஃபேஸ்புக் நண்பர்கள் வழிகாட்டலால் சட்டம் படித்தேன்” : நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு!

கலைஞர் செய்திகள் - விக்னேஷ் செல்வராஜ் :  நீதிபதி ஆவதே லட்சியம் என நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு தெரிவித்துள்ளார்.
உதகை காந்தல் குருசடி காலனியைச் சேர்ந்த சவுமியா சாசு, நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞராகியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சக திருநங்கைகளோடு ஊட்டிக்கு சுற்றுலா வந்த திருநங்கை சௌமியா சாசுவுக்கு ஊட்டி பிடித்துப்போகவே அங்கேயே சக திருநங்கைகளோடு இணைந்து உழைத்து வாழ்ந்துவந்தார்.
சௌமியா இளங்கலை அறிவியல் பட்டம் முடித்திருந்த நிலையில், சமூக வலைதள நண்பர்களின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு கடந்த 2017-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.
படிப்பை முடித்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவுசெய்துள்ள சௌள்மியா தற்போது வழக்கறிஞராக பயிற்சி பெற உள்ளார். இதன்மூலம் ஊட்டியின் முதல் திருநங்கை வழக்கறிஞராகியிருக்கிறார் சௌமியா சாசு.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பணியாற்ற பதிவு செய்ததைத் தெரிவித்து வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து சௌமியா சாசு கூறும்போது, “நான் சட்டப் படிப்பு மேற்கொள்வதற்கு ஃபேஸ்புக் நண்பர்கள் எனக்கு வழிகாட்டினார்கள். கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாளே எனது சக மாணவிகளிடம் `நான் ஒரு திருநங்கை' எனச் சொல்லிவிட்டேன்.

ஒருசில நாட்களில் எனது வகுப்பில் எல்லாருக்கும் அது தெரிந்துவிட்டது. ஆனாலும் ஒருவர் கூட என்னிடம் மனம் நோகும் வகையில் நடந்துகொண்டதில்லை. படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக ஊட்டிக்கு திரும்பியிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் கர்நாடகாவில் சட்டப் படிப்பு முடித்து, தமிழகத்தில் பதிவு செய்தார். முதல்முறையாக நான் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் பயின்று பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன்.

திருநங்கைகளுக்கு சட்ட வழிகாட்டுதல் செய்வதோடு, அனைத்து மக்களுக்கும் சேவை செய்வேன். நீதிபதி ஆவதே எனது லட்சியம். வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் பங்கேற்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக