திங்கள், 20 செப்டம்பர், 2021

சிறையில் உள்ள இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு! ஐ நாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

BBC :  'இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட செயற்பாடுகள் முடிவடைந்ததன் பின்னர், அவர்களை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தாம் தயங்கப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, ஐநா தலைமையகத்தில், பொதுச் செயலாளரை நேற்றைய தினம் (செப்டம்பர் 19) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.



இந்த சந்திப்பின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்கள் பலரை, தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
அவ்வாறு விடுவிக்க முடியாதவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் உள்ளகப் பிரச்னைகள், நாட்டுக்குள்ளேயே உள்ளக பொறிமுறையினுடாக தீர்க்கப்பட வேண்டும் எனவும், புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தைக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே தனது இலக்கு என, ஐநா பொதுச் செயலாளரிடம், ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, போராட்டக்காரர்கள் மீது முன்னரைப் போன்று நீர்த்தாரை பிரயோகம், தடியடி போன்றவற்றை மேற்கொள்ள தனது ஆட்சியில் ஒருபோதும் அனுமதி இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனது அலுவலகத்திற்கு முன்பாக போராட்டங்களை நடத்துவதற்கான தனி இடமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தான் பொது அமைப்புக்களுடன் இணைந்து, நாட்டிற்குள் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இலங்கை போன்ற நாடொன்று, கோவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் முகங்கொடுத்துள்ள சவால்கள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , ஐ.நா பொதுச் செயலாளருக்கு எடுத்துரைத்துள்ளார்.

கோவிட் தொற்றுப் பரவலுக்கு மத்தியில், இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் தீர்க்கமான முறையில் எடுத்துரைத்த ஜனாதிபதி, தொற்றுப்பரவலை வெற்றிகரமாக எதிர்கொள்ள, உலக சுகாதார அமைப்பு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும், பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதுவரையில், இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகச் கூறிய ஜனாதிபதி, எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள், 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி வழங்கியு;ளளார்.

இதன்போது, தடுப்பூசி ஏற்றலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு, பொதுச் செயலாளர், தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகத் தெரிவான தாம், பொதுமக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அவ்வாறே நிறைவேற்றுவதில், கோவிட் தொற்றுப் பரவலானது பெரும் தடையாக இருக்கின்றதெனத் தெரிவித்த ஜனாதிபதி, இருப்பினும், 30 வருட காலமாக நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் ஏற்பட்ட இடைநிலைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகத் தெளிவுபடுத்தினார்.
இலங்கை தேசிய கொடி
பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கல், காணிகளை மீளக் கையளித்தல் மற்றும் 2009ஆம் ஆண்டில், மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகள் மற்றும் வடக்கு மாகாண சபைக்கான உறுப்பினர்களை, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுப்பதற்காக ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பு தொடர்பிலும், ஜனாதிபதி ஐநா பொதுச் செயலாளரிடம் எடுத்துரைத்துள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும், பொதுச் செயலாளரிடம், ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன், எப்போதும் மிக நெருக்கமாகப் பணியாற்றத் தயாரென மீண்டுமொருமுறை எடுத்துரைத்த ஜனாதிபதி, நாட்டுக்குள் மீண்டும் பிரிவினைவாதம் ஏற்படப்போவதில்லை என்பதைத் தன்னால் உறுதிப்படத் தெரிவிக்க முடியுமென்ற போதிலும், மதவாதத் தீவிரவாதம் தொடர்பில், அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை போன்று ஏனைய நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்திக் கொண்டு, முன்னோக்கி நகர்வதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயார் என ஐநா பொதுச் செயலாளர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக