திங்கள், 20 செப்டம்பர், 2021

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - 20.9.1924. to 20.9.1024 ஆர் பாலகிருஷ்ணன்

May be an image of 1 person
May be an image of text that says 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் ஆர். பாலகிருஷ்ணள்'

Subashini Thf  : Illustrated London News ஆய்விதழில் சர் ஜோன் மார்ஷல் தனது சிந்து வெளி நாகரிக கண்டுபிடிப்பை வெளியிட்ட நாள் 20.9.1924. அதாவது இதே இன்றைய நாள். வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஓரு நாள்.
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - புத்தக விமர்சனம்
நூல் : சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
நூலாசிரியர்:  ஆர் பாலகிருஷ்ணன் இஆப  : தமிழின் தொன்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் இன்று பரவலாகத் தமிழ் மக்கள் சூழலில் எழுந்துள்ளது.
இந்த ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்கள் தற்காலம் வரத்தொடங்கியுள்ளன.
அத்தகைய முயற்சிகளில் சிந்துவெளி பண்பாடு, வரலாறுபற்றியன தொடர்பான ஆய்வுகளை முன்வைத்து வெளிவரும் நூல் முயற்சிகள் மிகக் குறைவாகவே உள்ளன. 

இதற்கு மிக முக்கியக் காரணம்  சிந்துவெளி  ஆய்வுத் தளம் என்பது எளிதான ஒன்றல்ல. இத்துறையில் ஆய்வு செய்வதற்கு மிக ஆழமான ஆய்வின் பின்னணியிலும், கடந்த நூற்றாண்டில் சிந்துவெளி அகழ்வாய்வு பற்றிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த காலம் தொட்டு வெளிவந்துள்ள அறிக்கைகள், ஆய்வுகள், ஆய்வேடுகளில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகள் ஆகியவற்றினை ஆழமாக ஆராய்ந்ததன் பின்னணியில் உருவாக்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அது மட்டுமன்றி சிந்துவெளிப் பண்பாடு குறித்த அகழ்வாய்வுச் சான்றுகளும்,  சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பற்றிய விரிவான ஆய்வுத் தகவல்களும் அதிகமாக இல்லை என்பதும் ஒரு காரணமாகின்றது. எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பண்டைய கிரேக்க எழுத்துக்கள் கொண்ட ரொசெட்டா கல் (Rosetta Stone)  உதவியது போல சிந்து சமவெளி குறியீடுகளை நேரடியாகப் புரிந்து கொள்ள ஒரு சான்று கிட்டவில்லை. இப்படிப் பல பிரச்சனைகள் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் எதிர் நோக்குகின்றனர் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
இந்தச் சூழலில், சிந்துவெளி நாகரிகம், பண்பாடு என்பது திராவிட அடித்தளத்தின் அடிப்படையில் அமைந்தது என்ற கருத்தினை முன்வைத்து வெளிவந்திருக்கும் நூல்தான் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் எனும் இந்நூல்.  இந்த நூல் வெளிவந்த காலம் தொடங்கிச் சிறந்த வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றிருக்கின்றது.  முதல் பதிப்பு முடிந்து இரண்டாம் பதிப்பும் வெளிவந்துவிட்டது.   இந்த நூலில் நூலாசிரியர், முதற்பதிப்பின் முன்னுரையோடு இரண்டாம் பதிப்பிற்கான முன்னுரையையும் இணைத்திருக்கிறார். நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர் சிந்துவெளி ஆய்வில் மிக முக்கியமாகக் கருதப்படும் மறைந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.
இந்த நூலின் அமைப்பைப் பற்றி முதலில் காண்போம். இரண்டு பெரும் பகுதியாக இந்த நூல் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் இடப்பெயர் ஆய்வு பற்றிய தகவல்கள் உள்ளடக்கிய கட்டுரைகள் உள்ளன. இரண்டாம் பகுதியில் சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு, கீழ்- கிழக்கு வடிவமைப்பு பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதி, மேல்-மேற்கு, கீழ்- கிழக்கு எனும் அடிப்படை நகர அமைப்பு,  திராவிட நகர அமைப்பின் அடித்தளத்தை வகுக்கும் தன்மை ஆகியன, விரிவாக அலசப்படுகின்றன.  நூலின் இறுதியில் பின்னிணைப்பாக சான்றாதார பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ, காலிபங்கான், தோலாவிரா, லோத்தல் ஆகிய நகரங்களின் அமைப்பினை காட்டும் வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒரு ஆய்வு நூல் என்பதற்கு அடிப்படை வகுக்கும் வகையில் நூலாசிரியர் தான் இந்த நூலை எழுத எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான உத்தி (methodology) பற்றி ஒரு விளக்கமும் இணைக்கப்பட்டுள்ளது.
நூலில் ஆசிரியர் வழங்கியிருக்கும் இரண்டாம் பதிப்புக்கான முன்னுரையானது நூலின் நோக்கத்திற்குச் சிறப்பு சேர்க்கின்றது." கிழக்கு வெளுக்கிறது  கீழடியில்"  என்ற தலைப்பில் இப்பகுதி அமைகின்றது. சிந்துவெளி நாகரிகம் பண்டைய நகர்ப்புற கட்டுமானத்தைச் சான்று பகரும் விதத்தில் அமைந்துள்ளது போல, இன்றைய தமிழகத்தின் மதுரை கீழடி அகழ்வாய்வு,  தமிழ்நாட்டில் தொன்மையான நகரப் பண்பாடு இருந்தது என்பதற்கு தொல்லியல் சான்றாக அமைகின்றது.  சிந்துவெளியின் நாகரீக தொடர்ச்சியை ஏறக்குறைய ஈராயிரம் கிலோமீட்டர் தூரத்தில் தெற்கே இருக்கும் மதுரையில் காணமுடிகின்றது. சங்க இலக்கியங்கள் புகழ்ந்து பாடிய நகரங்களைப் பற்றிய செய்திகள் வெறும்கற்பனைகள் அல்ல,  அவை உண்மையே -  என்பதைப் பறைசாற்றும் சான்றுகளாகக் கீழடி அகழ்வாய்வு தகவல்கள் நமக்கு இன்று கிடைக்கின்றன. வைகை கரையோரம் முழுதும் குழிகள் தோண்டி அகழ்வாய்வுகள் தொடர்ந்தால்,  மறைந்துபோன சிந்துவெளியின் தொடர்ச்சி இங்கு வைகைக்கரை நாகரிகத்தின் அடித்தளத்தை அமைத்தது என்பதற்கு மேலும் பல சான்றுகள் கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் வண்ணம் நூலாசிரியர் தனது கருத்துக்களை இந்தப் பகுதியில் வழங்குகின்றார்.
இன்றைய பாகிஸ்தான் நிலப்பகுதியில் சிந்துவெளி நாகரிகம் என்ற தொல் நாகரிகம் கண்டறியப்பட்ட செய்தியை உலகிற்குத் தனது கட்டுரையின் வழி ஜோன் மார்ஷல் 1924ம் ஆண்டு அறிவித்தார். அதன் பின்னர், இந்தத் தொல் நாகரீக பண்பாட்டிற்கும் திராவிடப் பண்பாட்டிற்கும் உள்ள ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தொடர்ச்சியான ஆய்வுகள் நிகழ்ந்தாலும் இங்குப் பேசப்பட்ட மொழி எது, என்பது இன்றுவரை உறுதிசெய்யப்படாத சூழ்நிலையே நிலவுகிறது. ஆயினும் மிக உறுதியாகத் திராவிட பண்பாட்டுத் தொடர்ச்சியை சிந்து சமவெளி நாகரிகம் காட்டுவதையே பெரும்பாலான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சிந்துசமவெளி தொடர்பான ஆய்வுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பாதிரியார் ஹீராஸ், ஆய்வாளர் அஸ்கோ பர்போலா, ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் இஆப ஆகியோர் வரிசையில் இன்று ஆர்.பாலகிருஷ்ணன் இஆப அவர்களும் இணைகின்றார். தொடர்ச்சியாக  இவர் நிகழ்த்திய இடப்பெயர் ஆய்வுகள் சிந்து சமவெளி நாகரிகப் பண்பாட்டினைப் புரிந்துகொள்ள முக்கிய தரவுகளாக அமைகின்றன.  இன்றைய இந்திய எல்லை என்பதை மட்டும் ஆய்வுக்களமாக இல்லாமல் இந்த எல்லைகளைக் கடந்து தனது இடப்பெயர் ஆய்வினை நிகழ்த்தி இவர் சேகரித்திருக்கும் தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதோடு தனது ஆய்விற்குத் துணை சான்றாக நூலாசிரியர் முன்வைக்கும் கோழிச்சண்டை தொடர்பான தரவுகளும் சான்றுகளும் மிக முக்கியமானவை என்றே கருதுகிறேன்.  ஒரு நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியின் எச்சங்களாக இன்றும் தமிழர் மரபில் இடம்பெறும் பண்பாட்டு  விழுமியங்களுள் ஒன்றாக கோழிச்சண்டை மரபைக் காண்கின்றோம்.  இப்பகுதிக்குச் சான்றாக ஆசிரியர் வழங்கியிருக்கும் ஊர்ப்பெயர் உதாரணங்கள்,கி.மு 1ம் நூற்றாண்டு சோழர் கால நாணயம் காட்டும் கோழி நகரம் (உறையூர்), கோயில் சிற்பங்களில் யானையுடன் சண்டையிடும் சேவலின் சிற்பம், சண்டைக்கோழிக்காகத் தமிழ்மக்கள் எடுத்த கல்வெட்டுடன் கூடிய கீழ்ச்சேரி, மேல்ச்சேரி  நடுகற்கள் போன்ற தகவல்கள் சிறப்பனவை.  சண்டைக்கோழிகளுக்குச் செல்லப்பெயர் வைத்து அவை வீரமரணம் எய்திய போது  சண்டைக்கோழிகளுக்காக   நடுகல் எழுப்பிச் சிறப்பு செய்த தமிழ் மக்களின் பண்பாட்டுடன் சிந்து சமவெளி கோழிச்சின்னங்களை பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.  சிந்து சமவெளி தொடங்கி, சங்க கால கோழிச்சண்டை சிறப்பின் வெளிப்பாடாக நாணயங்கள், சிற்பங்கள் பின் அதன் தொடர்ச்சியாக நடுகல்  எனத் தொடரும் மரபு இன்று பொதுமக்கள் பண்பாட்டில் திரைப்பட வடிவில் "ஆடுகளம்" என்ற தமிழ்த்திரைப்படத்தின் மையக் கருவாக அமைந்திருப்பதை ஒதுக்கிச் செல்ல முடியாது என்பதை நூலாசிரியர் மிக அழகாக விவரிக்கின்றார்.
நூலின் முதல் கட்டுரையில் மிக விரிவாகவும், ஆழமாகவும் சிந்து சமவெளி நகரங்களின் அமைப்பினைப் பற்றி விவரிக்கும் நூலாசிரியர்,  மேற்கு கிழக்கு என்ற பகுப்பின் தொடர்பினை அதிக கவனத்துடன் கையாண்டிருக்கிறார். மிகத் தெளிவாக இப்பகுதியை விளக்கியிருப்பது வாசிப்போருக்குச் சிந்து சமவெளி நாகரிகத்தின் நகர அமைப்பின் கட்டுமான வரையறையின் இலக்கணத்தை அறிந்து கொள்ள உதவுகின்றது. சிந்துவெளியை ஒட்டிய இன்றைய பலுச்சிஸ்தானிலும், வடகிழக்கு ஈரானிலும் பேசப்படும் பிராகுயி என்ற திராவிட மொழி   பற்றிய செய்தி வியப்பூட்டுகின்றது.  இன்றைய இந்திய எல்லையை மட்டும் வைத்து  திராவிடப்பண்பாட்டுத் தளத்தை ஆராய்வது உதவாது, திராவிடமொழிக்குடும்பத்தின் பரவலாக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு இந்த எல்லையைக் கடந்த வகையிலான ஆய்வுகளும், திராவிடப் பண்பாட்டின் கருத்தாக்க வேர்களின் தொடர்ச்சி பற்றி ஆராய வேண்டியதும் அவசியம் என்பதையும் இந்த நூல் வலியுறுத்துகிறது.
மேல்-கீழ் என்ற கருதுகோள் எவ்வாறு திராவிட பாரம்பரியத்தில், அதிலும் குறிப்பாகத் தமிழ் நிலப்பரப்பில் தமிழ் மக்களிடையே பண்பாட்டு ஆய்வுகளில் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை நூலில் ஆசிரியர் அளித்திருக்கும் பல உதாரணங்களைப் பார்க்கும்போது ஒப்பிட்டு அறிந்து கொள்ள முடிகின்றது. கொற்கை, வஞ்சி, தொண்டி ஆகிய சங்க கால நகர் பெயர்கள் சிந்துவெளி நாகரிகத்திலும் வழக்கில் இருந்தன என்பதை இடப்பெயர் ஆய்வின் வழி நிறுவுகின்றார்.  தமிழகத்தின் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் வழக்கில் உள்ள 97 இடப்பெயர்கள் அப்படியே எந்த மாற்றமுமின்றி சிந்துவெளிப்பண்பாட்டுப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன என்ற தகவல் வியப்பூட்டுகின்றது. சிந்துவெளிப்பண்பாட்டில் மட்டுமன்றி பாகிஸ்தானில் 131 இடங்களிலும், ஆப்கானிஸ்தானில் 24 இடங்களிலும் அப்படியே வழக்கில் உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.  இன்றைய இந்தியாவின் குஜராத். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும்  133 இடங்களில் இந்தத் தமிழக இடப்பெயர்கள் பயன்படுத்தப்படுவதையும் சுட்டிக் காட்டுகின்றார். இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில்  தமிழகத்தின் வைகை கரையோரம் அடையாளம் காணப்பட்ட 200 சொற்களில் 122 ஊர்ப் பெயர்கள் சிந்து சமவெளி பெயர்களோடு தொடர்புடையனவாக  ஒத்துப் போவதையும் சுட்டிக் காட்டுகின்றார்.
இடப்பெயர், மேல்-மேற்கு கீழ்-கிழக்கு, கோழிச்சண்டை மரபு என பண்பாட்டுத் தொடர்ச்சிகளை மையப்படுத்தி சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடப் பண்பாட்டைக் கட்டமைக்க இந்த நூல் மேற்கொண்டிருக்கும் முயற்சி ஆய்வுலகில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆயினும், தொடரும் கேள்விகளும் அவற்றிற்கு விடைகாணும் முயற்சிகளும் அவசியம் என்பதையும் நூல் சுட்டிக் காட்டுகின்றது. குறிப்பாகச் சிந்து வெளி மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள் என்ற கேள்வி, சிந்து வெளி பண்பாடு குறித்த ஆய்வில் சங்கத் தமிழ் இலக்கியம் காட்டும் தொடர்ச்சி, கீழடி போன்ற நகரநாகரிக அகழ்வாய்வுச் செய்திகள், தொடர வேண்டிய வைகைக்கரையோர அகழ்வாய்வுப் பணிகள், நீண்ட மரபின் தொடர்ச்சியாய் நாம் இன்றும் காணும் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்வது ஆகியன தொடர வேண்டும் என்பதை நூல் வலியுறுத்துகின்றது.
இந்த நூலில் ஆர்.பாலகிருஷ்ணன் இஆப அவர்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு கருத்துக்களை இன்றைய வரலாற்று ஆர்வலர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக அவசியம் என்பதால் நூலில் இப்பகுதியைக் கீழே வழங்குகின்றேன்.
"...உணர்ச்சியால் உந்தப்பட்ட பேச்சுக்களும், அறிவியல் பூர்வமாக நிறுவ முடியாத கருத்துக்களை முன்வைத்து நம்பகத்தன்மையை இழப்பதும்,  நிகழ்கால துதிபாடல்களில் நேரத்தைச் செலவிட்டதும் தமிழ்ச்சமூகம் தனக்குத்தானே இழைத்துக் கொண்ட அநீதிகளும், அதன் விளைவாக நேர்ந்த கூட்டுக்காயங்களும் ஆகும்.....
மக்களை மையத்தில் வைக்காத வரலாறு  மன்னர்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, இறந்த கதை பேசும்.  அரண்மனைகளையும் அந்தப்புறங்களையும் மட்டுமே துருவித் துருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும் நாம் மீட்டெடுக்க வேண்டியது மன்னர்களின் கதை அல்ல. இன்னும் சொல்லப்போனால் வெறும் மண்ணின் கதையைக் கூட அல்ல. அதைவிட முக்கியமாய், மொழியை மூச்சில் ஏந்தி முன் நடந்து, பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காலத்தை வென்று நிற்கும் நடைமுறையாக்கிய மனிதர்களின் கதையை..."
-முனைவர்.க.சுபாஷிணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக