செவ்வாய், 14 செப்டம்பர், 2021

ஆப்கன்., - பாக்., - இலங்கை போதை பொருள் பாதை: தமிழகம், கேரளாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை

dhinalar : ''பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுகிறது. அதனால், தமிழகம், கேரளாவில் தீவிரவாதம் தலையெடுக்க வாய்ப்பு உள்ளது,'' என, எச்சரிக்கை மணி அடிக்கிறார், மேஜர் மதன்குமார்.வர் கூறியதாவது:சர்வதேச கடல் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வந்த மீன்பிடி கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டது. அதில் 290 கிலோ ஹெராயின் இருந்தது. மீன் பிடி கப்பலில் இருந்தவர்கள், 'பாகிஸ்தான் மக்ரான் துறைமுகத்தில் இருந்து ஒரு கப்பல், ஹெராயின் ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. 'இலங்கையில் இருந்து 1,370 கி.மீ., தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் அந்த கப்பல் நிற்கிறது. அந்த கப்பலில் இருந்து தான், 290 கிலோ ஹெராயினை, கொழும்பு துறைமுகத்துக்கு எடுத்து செல்கிறோம்' என, கூறியுள்ளனர்.

உடனே இலங்கை கடற்படையினர் அந்த கப்பலை நோட்டமிட்டனர். செப்., 6ல், அதிரடி சோதனை நடத்தி 600 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் கிடைத்த போதை பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 2,000 கோடி ரூபாய். இதுபோல், கப்பல்களில் இருந்து போதை பொருளை பறிமுதல் செய்வது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 நவ., மாதத்தில் இருந்து தொடர்கிறது. 

தமிழகத்தின் துாத்துக்குடிக்கு அருகே, சர்வதேச கடல் பகுதியில், இலங்கை கப்பல் ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் வழிமறித்து சோதனையிட்டனர். அதில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ ஹெராயின், 20 'மெட்டாமார்பின்' மற்றும் ஐந்து கை துப்பாக்கிகள் சிக்கின.மும்பை துறைமுகத்தில் இருந்து, முகத்துக்கு பூசும் பவுடர் டப்பாக்கள் இருக்கும் கன்டெய்னர் மூலம் ஹெராயின் கடத்தப்படுவதாக இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனகரத்துக்கு தகவல் கிடைத்தது. அந்த கன்டெய்னரை அதிகாரிகள் தனையிட்டனர். வெளி நாட்டுக்கு கடத்த இருந்த ஹெராயின் பிடிபட்டது; பலர் கைது செய்யப்பட்டனர்.


'கேரள மாநிலம், விழிஞ்சம் துறைமுகத்துக்கு, சர்வதேச கடல் பகுதியில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பல் வருகிறது. அதில் ஹெராயின் கடத்தப்படுகிறது' என்ற தகவல், இந்திய கடலோர காவல் படைக்கு கிடைத்தது. அந்த கப்பலை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர். அதில், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கேரள மாநிலம், கொச்சி அருகே சந்தேகத்துக்குரிய கப்பலில், இந்திய கடற்படையினர் சோதனையிட்டனர். அதில் 337 கிலோ ஹெராயின் பிடிபட்டது. இந்த தொடர் சம்பவங்கள் மூலம், ஆப்கானிஸ்தானில் சாலை மார்க்கமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து, அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று, சிறிய படகுகள் மூலம் இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுவது ஊர்ஜிதமாகி உள்ளது.

இந்த போதை பொருள் தமிழகத்தின் துாத்துக்குடி, வேதாரண்யம், கோடிக்கரை, மண்டபம்; கேரளாவின் விழிஞ்சம், கொச்சி துறைமுகங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது. பிறகு, சூடான், காங்கோ, கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. ஆப்கானிஸ்தானில், ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்படும் 1 கிலோ ஹெராயின், சாலை மார்க்கமாக பாகிஸ்தானுக்கு வந்ததும், 2 கோடி ரூபாயாகிறது. பிறகு, இலங்கை வழியாக இந்தியாவுக்கு வரும்போது, அதன் மதிப்பு 3 அல்லது 3.5 கோடி ரூபாய் என உயர்கிறது. போதை பொருள் கடத்தலை போலீஸ், ராணுவம் மற்றும் உளவுத்துறை கட்டமைப்புகளால் இந்தியா முன் கூட்டியே கண்டறிந்து விடுகிறது.


இந்த தகவல் இலங்கைக்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசும்விரைந்து செயல்பட்டு போதை பொருளை பறிமுதல் செய்கிறது. தமிழகம் மற்றும் கேரளா வழியாக பிற நாடுகளுக்கு போதை பொருள் கடத்தப்படும் போது, பல ஆயிரம் கோடி ரூபாய் தீவிரவாதிகளுக்கு கிடைக்கிறது என்பதையும் இந்திய உளவு அமைப்புகள் கண்டறிந்திருக்கின்றன. போதை பொருளுடன் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் சேர்ந்து வருவது தான் இதற்கு ஆதாரமாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, தமிழகம், கர்நாடகா, கேரள எல்லையில் இருந்த தீவிரவாதிகள் அகற்றப்பட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் தலையெடுக்கின்றனர். சந்தன கடத்தல் வீரப்பன் நடமாடிய மேற்கு தொடர்ச்சி மலையை மையமாக வைத்து தான் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் தங்கள் செயல்பாடுகளை துவக்கி உள்ளனர்.

இதையடுத்து, அல் உம்மா, இந்தியன் முஜாஹிதீன், ஐ.எஸ்., ஐ.எஸ்., அமைப்புகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு முகமை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடக்கக்கூடும் என என்.ஐ.ஏ., கருதுகிறது. எனவே இரு மாநில எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவை நம்பி...

பல விஷயங்களில் சீனாவுடன் தொடர்பில் இருக்கும் இலங்கை, பாதுகாப்பு விஷயத்தில் இந்திய உளவு அமைப்புகளையே நம்பியே உள்ளது. அவர்கள் கூறுவதை இலங்கை அரசு முழுமையாக கவனத்தில் எடுத்து கொள்கிறது. அதில் ஒரு பகுதியாக தான், பாகிஸ்தானில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படும் போதை பொருளை கட்டுப்படுத்த, சோதனை மேல் சோதனை நடத்துகிறது. இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுப்பது போல, தமிழக மற்றும் கேரள மாநில அரசுகள் கவனத்துடன் செயல்பட்டால், தீவிரவாத செயல்கள் கட்டுக்குள் இருக்கும். இவ்வாறு மதன் குமார் கூறினார்.

லட்சத்தீவிலும் கண்காணிப்பு

கேரளாவை ஒட்டி உள்ள லட்சத் தீவுகள் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகி, கடுமையான விதிகளை அறிவித்து, மீன் பிடி கப்பல்களுக்கும், படகுகளின் சுதந்திரமான செயல்பாட்டுக்கும் கடிவாளம் போட்டார். இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மீன் பிடி படகுகள் மூலம், போதை பொருட்கள், ஆயுதங்கள் உள்ளே வந்துவிட கூடாது என்பதில் அந்த நிர்வாகி உறுதியாக உள்ளார்.


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மதன்குமார். இந்திய ராணுவ காலாட்படையில் தன் பணியை 2003ல் துவக்கியவர். காஷ்மீர் எல்லை பகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர். ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையில் பணியாற்றிய நிலையில் 2009ல் ஓய்வு பெற்றார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் குறித்த தகவல்களை அறிந்தவர். இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் ராணுவம் தொடர்பான நிகழ்வுகளை, பல்வேறு நாடுகளிலும் இருக்கும் தன் நண்பர்கள் மூலம் தொடர்ந்து சேகரிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக