செவ்வாய், 14 செப்டம்பர், 2021

தமிழ்நாட்டில் மற்றுமொரு NEET தேர்வு தற்கொலை: பள்ளியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவி கனிமொழி மரணம்

அரியலூர் மாணவி கனிமொழி
மாணவர் தனுஷுக்கு வைக்கப்பட்டுள்ள அஞ்சலி பதாகை

BBC : நீட் தேர்வு சரியாக எழுதவில்லையோ என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் 12ஆம்  வகுப்பில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.
அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயலட்சுமி - கருணாநிதி தம்பதியினர். இருவரும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிவருகின்றனர்.

இவர்களுக்கு  கனிமொழி, கயல்விழி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அரியலூரில் உள்ள
துளாரங்குறிச்சியில் வசித்துவந்தனர்.
முதல் மகள் கயல்விழி பள்ளிப்படிப்பை முடித்து செவிலியருக்கான படிப்பை படித்து  வருகிறார். இரண்டாவது மகள் கனிமொழி ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார்  பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். அதற்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள க்ரீன் கார்டன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் படித்து, 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28  மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இதையடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய கனிமொழி, கடந்த 12ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார். ஆனால், அந்தத் தேர்வை சரியாக எழுதவில்லையோ என கனிமொழி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.கனிமொழியை பெற்றோர் தொடர்ந்து தேற்றிவந்தனர். திங்கட்கிழமையன்று பெற்றோர் இருவரும்
உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றனர். இரவு எட்டு மணியளவில்
வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, மாணவி கனிமொழி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதற்குப்  பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்போது மாணவியில் உடல் அவரது சொந்த ஊரான சாத்தம்பாடிக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று  சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், இந்த முறை அந்தத் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

திங்கட்க்கிழமையன்று  நீட் தேர்வு இல்லாமல், 12 வகுப்புத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களை மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையை நடத்துவதற்கான சட்டத்தை
தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது.
இந்தச் சட்டம் தற்போது ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே இந்தச் சட்டம் அமலுக்கு வரும்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கான நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக