வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட காவல்துறை சோதனையில் 450 ரவுடிகள் கைது

 BBC : தமிழ்நாடு முழுவதும் காவல்துறை நடத்திய சோதனையில் 450 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை இரவு முதல் காவல் துறையினர் ரவுடிகளைத் தேடும் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் திடீர் சோதனையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யவும், கண்டுபிடித்து விசாரிக்கவும், அவர்களை கண்காணிக்கவும், நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றவும் மற்றும் வாகனத் தணிக்கைகள் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.
இதற்கென ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய பல சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் 870 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 450 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட 450 பேரில் 181 பேர் மீது நீதிமன்ற பிடியாணைகள் நிலுவையில் உள்ளன. இவர்களிடமிருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 250 கத்திகள், கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்படாத ரவுடிகளிடமிருந்து நன்னடத்தைக்கான பிணை உத்தரவாதத்தை காவல்துறை பெற்றுள்ளது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 716 ரவுடிகள் தணிக்கை செய்யப்பட்டு 70 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர். கத்தி அரிவாள் உட்பட 20 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக