வெள்ளி, 24 செப்டம்பர், 2021

கடலூர் எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு? இறப்பு விசாரணை அறிக்கை!

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மின்னம்பலம் : திமுகவின் கடலூர் எம்.பி.யான ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனியில் வேலை செய்த தொழிலாளியின் மரண விவகாரத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும் என்று பாமக போராடி வருகிறது.
பிரேதப் பரிசோதனை வரட்டும், நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை. .
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா பணிக்கன்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது திமுக எம்.பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி கம்பெனி. அங்கே மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் முந்திரியை ஹீட் செய்து உடைக்க பதப்படுத்திக் கொடுக்கும் வேலையைச் செய்து வந்தார். எம்.பிக்கும் நம்பிக்கையானவராக இருந்துவந்தார்.
இந்த நிலையில் கோவிந்தராஜ் கம்பெனியில் இருந்து முந்திரியைத் திருடி வெளியில் விற்பனை செய்துவந்ததாக தகவல் கேள்விப்பட்ட எம்.பி ரமேஷ், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மாலையில் கம்பெனிக்கு வந்து கோவிந்தராஜை அழைத்து விசாரித்துத் தாக்கியுள்ளார்.

அப்போது அவருடன் இருந்த மேனேஜர் மற்றும் ஊழியர்களும் கோவிந்தராஜைத் தாக்கியுள்ளார்கள். அதன் பிறகு கோவிந்தராஜை ரத்தக்காயத்துடன் காடம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்துப் போய் அவர் மீது திருட்டு புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கச் சொல்லியுள்ளார்கள் எம்.பி ஆதரவாளர்கள். அப்போது பணியிலிருந்த போலீஸார் ரத்தக்காயத்துடன் இருந்த கோவிந்தராஜைப் பார்த்துவிட்டு, ’இவரைக் காவல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது, காலையில் அழைத்து வாருங்கள்’ என்று அனுப்பி வைத்துவிட்டார்கள். அவரை அழைத்துப் போய் இரவு நேரத்தில் என்ன செய்தார்களோ... அவர் இறந்துவிட்டார்.

செப்டம்பர் 20ஆம் தேதி, இறந்துபோன கோவிந்தராஜ் மகன் செந்தில்வேல் சென்னையிலிருந்து ஊருக்கு வந்து காடம்புலியூர் காவல் நிலையத்துக்குச் சென்றார். “எம்.பி உட்பட ஐந்து பேர் பெயர் தெரிந்தவர்களும் மற்றும் பலர் சேர்ந்து எனது தந்தையைக் கொலை செய்துவிட்டார்கள்” என்று செந்தில்வேல் புகார் கொடுத்திருக்கிறார். இந்தச் செய்தியைப் புலனாய்வு செய்து மின்னம்பலம்.காம் பத்திரிகையில் 22ஆம் தேதி திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? என்ற தலைப்பிலும், இதே விவகாரத்தில் 23ஆம் தேதி, தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்பி? என்ற தலைப்பிலும் விரிவாக வெளியிட்டிருந்தோம்.

இந்தப் பின்னணியில் எம்.பி.யை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், நீதி வேண்டும் என்று பாமகவினரும், ஊர் மக்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் ட்விட்டரில் கண்டனத்தைப் பதிவு செய்தவர், “இறந்தவர் உடலை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். எம்.பி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை பாமகவினர் 21ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாகக் கொடுத்தனர்.

அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவர் பாமகவினருக்கு ஆலோசனைகளும் கொடுத்துள்ளார். “உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காகத் தொடர்ந்து ஆர்டர் வாங்குங்கள். அப்போதுதான் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையும் நடத்தப்படும், நீதியும் கிடைக்கும்” என்பதுதான் அவர் சொல்லிய ஆலோசனை.

அதேபோல் பாமக மூத்த வழக்கறிஞர் பாலு இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 21ஆம் தேதி அவசர வழக்காக எடுத்துச் சென்றார். அந்த வழக்கு மறுநாள் செப்டம்பர் 22ஆம் தேதி, நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வாதி மற்றும் பிரதிவாதி தரப்பினர் கருத்துகளைக் கேட்டு, “இறந்தவர் உடலை ஜிப்மர் டாக்டர்கள் மூவர் கொண்ட குழு பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கோவிந்தராஜ் மரணம் தொடர்பாக காடம்புலியூர் காவல் துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்திவரும் நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்க முடியாது. இருந்தாலும் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணையை பண்ருட்டி டிஎஸ்பி கண்காணிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து கடலூர் எஸ்.பி சக்தி கணேசன் செப்டம்பர் 23ஆம் தேதி, காலையிலேயே ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று மூன்று டாக்டர்களுக்குப் பதிலாகக் கூடுதலாக இரண்டு டாக்டர்களைக் கேட்டு ஐந்து டாக்டர்களை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

ஜிப்மர் டாக்டர்கள் சித்தார்த் தாஸ், நிர்மல்குமார், அஷோக், கிருத்திகா, அனுபன் குமார் ஐந்து பேரும் காலை 10.00 மணிக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு வந்தனர். முதல் வேலையாக 10.30 மணியிலிருந்து 12.00 மணி வரையில் இறந்துபோன கோவிந்தராஜ் உடல் முழுவதையும் பார்ட் பார்ட்டாக எக்ஸ்ரே எடுத்தார்கள். அதன் பிறகு 12.30 மணி முதல் 2.30 மணி வரையில் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை ரிப்போர்ட் பற்றி ஒரு டாக்டரிடம் கேட்டோம்.

“தலையின் பின் பகுதியில் அடிபட்டு ஸ்கல் ஓப்பனாகியுள்ளது. இடது கண் பகுதியில் அடிபட்டுள்ளது. காது பக்கத்தில் எலும்பு உடைந்துள்ளது. வயிற்றுப் பகுதியில் அடிபட்டுள்ளது. இறப்பிற்கு காரணம் தலையின் பின் பகுதியில் ஸ்கல் (பின் மண்டையில் இருக்கும் உள் எலும்பு) ஓப்பனாகியுள்ளதுதான். நெஞ்சு மற்றும் குடல் பகுதியில் மஞ்சள் நிற ரசாயனம் படிந்துள்ளது. அதை டெஸ்ட்டுக்கு அனுப்பியுள்ளோம். அதன் ரிப்போர்ட் வந்த பிறகுதான், இறந்த பிறகு அவருக்கு விஷம் ஊற்றப்பட்டதா, இறப்பிற்கு முன்பு விஷம் உள்ளே சென்றதா என்று தெரியும்” என்றார்.

பிரேதப் பரிசோதனை முடிந்து ஊர்தி வேனில் ஏற்றியபிறகு, “உடலை வாங்க மாட்டோம், எம்.பி மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஒரு கோடி நிதி வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும்” என்று கோவிந்தராஜின் குடும்பத்தினரும் பாமகவினரும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி, “பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வேலையும், நிதியைப் பற்றியும் மேலிடத்தில் கேட்டுச் சொல்கிறேன்” என்று கூறி உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்கள்.

அதன் பிறகு கோவிந்தராஜ் உடலை நேற்று செப்டம்பர் 23 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு மேல்மாம்பட்டு கிராமத்திற்கு எடுத்துவந்தார்கள். உடனடியாக அடக்கம் செய்த பிறகுதான் போலீஸார் பெரும் மூச்சு விட்டனர்.

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “எங்கள் எஸ்.பி சக்தி கணேசன் நிச்சயம் விடமாட்டார். இந்த வழக்கில் மிகவும் அக்கறையாகவும் உண்மையாகவும் செயல்பட்டு அந்த குடும்பத்துக்கு நீதி வாங்கிக் கொடுப்பார். கோவிந்தராஜைத் தாக்கிய நடராஜன், கந்தவேல், அல்லா பிச்சை, வினோத் நான்கு பேரையும் நெய்வேலி அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தில்தான் கடந்த மூன்று நாட்களாக போலீஸ் கஸ்டடியில் வைத்திருக்கிறோம். அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்கிறார்கள்.

பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்கள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, பின் மண்டையில் கடுமையாகத் தாக்கி அதனால் ஸ்கல் ஓப்பன் ஆனதால்தான் மரணம் நேர்ந்திருக்கிறது என்கிறார்கள். இந்த ரிப்போர்ட் வருவதற்காக காத்திருக்கிறார்கள் போலீஸார். வந்தவுடன் கடலூர் திமுக எம்.பி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்கள்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக