ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

நீட் தற்கொலை: வேலூர் செளந்தர்யாவின் கலைந்து போன கனவு - இதுவரை 16 மாணவர்கள் பலி

நீட் மரணங்கள்

நடராஜன் சுந்தர்  -      பிபிசி தமிழுக்காக  :  நான்கு பெண் பிள்ளைகளில் முதல் மூவரும் படிக்கவில்லை, கடைசி பிள்ளையின் மருத்துவ கனவை நிஜமாக்கும் முயற்சியில் பெற்றோர் இருவரும் தினக்கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.
ஆனால் யாருக்காக அவர்கள் கஷ்டப்பட்டார்களோ அந்த மகள் உயிரை மாய்த்துக்கொண்டார். வேலூரில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சௌந்தர்யாவின் குடும்பம், அவர்கள் கண்ட கனவு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெறும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த ஞாயிறு (செப்டம்பர் 12) அன்று நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பிருந்து, தேர்வு நடைபெற்ற அடுத்தடுத்த நாட்களில் மூன்று மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தீவிரமான எதிர்ப்பலை நிலவி வரும் சூழலில் மாணவர்களின் தொடர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், வியாழனன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளந்தர்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொன்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் நான்காவது மகள் செளந்தர்யா. 17 வயதாகும் இவர் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். சௌந்தர்யா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12) அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வெழுதி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் நீட் தேர்வில் மதிப்பெண்‌ குறைவாக பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவருமே தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். அன்றைய தினம் தந்தை வேலைக்கு சென்ற பிறகு, தனது தாயாரை அவர் வேலை செய்யும் பகுதிக்கு விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் சௌந்தர்யா. இதையடுத்து நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவோம் என்ற அச்சத்தினால் மிகுந்த மன வேதனையில் இருந்த மாணவி சௌந்தர்யா அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். ....

 நீட் மரணங்கள்

இந்த சூழலில், குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோம் என்ற அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி சௌந்தர்யாவின் குடும்பத்தை பிபிசி தமிழ் சந்தித்தது.

"எங்கள் அப்பா உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். அம்மா 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்கிறார். இப்படி தினக்கூலி சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கடுமையான சூழலில்தான் தங்கையை பெற்றோர் படிக்க வைத்தனர்" என்று சௌந்தர்யாவின் இரண்டாவது அக்கா கோடீஸ்வரி பகிர்ந்து கொண்டார்.

"பெற்றோருக்கு நங்கள் மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். மற்றவர்களைக் காட்டிலும் கடைசி தங்கையான சௌந்தர்யாவை செல்லமாக வளர்த்தனர். எங்கள் அக்கா பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படித்தாள். நான் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். எனக்கு அடுத்து மூன்றாவது சகோதரி பள்ளிக்கு செல்லவில்லை. பெற்றோர் இருவருமே தினக்கூலி தொழிலாளர்கள். எங்கள் மூவரையும் படிக்க வைக்க முடியாத காரணத்தினால் கடைசி பிள்ளையை எப்படிவது நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகதான் கடுமையான சூழ்நிலைக்கு இடையே படிக்க வைத்தனர்," என்றார் அவர்....... 

நீட் மரணங்கள் "நான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமில்லாமல், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இருப்பதால் படிப்பேன். உறுதியாக மருத்துவர் ஆவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள் எனது மகள். நானும் எப்படியாவது கூலி வேலைக்கு சென்றாவது நீ விரும்பியபடி மருத்துவ படிப்பு படிக்க வைக்கிறேன் என்று கூறினேன்," என்றபடி கண்ணீர் மல்க சௌந்தர்யாவின் தயார் ருக்மணி கூறினார்.

தாய் உடல் நிலை கருதியே மருத்துவம் படிக்க நினைத்தார்

"அம்மாவுக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளித்து வந்தோம். குடும்ப வறுமை சூழல் காரணமாக அவ்வப்போது பணம் கொடுத்து சிகிச்சை பெறுவது கஷ்டமாக இருந்தது. இதனால் நாம் மருத்துவ படித்தால் அம்மாவுக்கு நாமே மருத்துவம் பார்க்கலாமே என்ற நோக்கத்தில்தான் சௌந்தர்யா மருத்துவர் ஆகவேண்டும் என்ற கனவை வளர்த்தாள். ஆனால் அந்த கனவு நிறைவேறுவதற்கு முன்பே நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள் எனது தங்கை," என்று வேதனையுடன் பேசினார் சௌந்தர்யாவின் மூத்த அக்கா கீதா.......

 நீட் மரணங்கள்

 நீட் தேர்வு நடைபெற்ற அன்று மாலை வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கூறிய சௌந்தர்யா. ஒருவேளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரடியாக எழுதயிருந்தால் நீட் தேர்வு சுலபமாக இருந்திருக்குமென சகோதரிகளிடம் பகிர்ந்துள்ளார்.

"சௌந்தர்யா எந்த தேர்வு எழுதினாலும் தேர்வு முடிவடைந்த பிறகு, தான் எழுதிய விடைகள் சரியானதா என்று பார்ப்பது வழக்கம். அதேபோன்று கடந்த 14ஆம் தேதியன்று நீட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் எடுப்போம் என்று வினா, விடைகளை ஆராய்ந்துள்ளார். அப்படி விடைகளை பார்த்தபோது நாம் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தாள். நம்முடைய மருத்துவர் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் மற்றும் தோல்வி பயத்தால் இவ்வாறு செய்து கொண்டாள்," என்கிறார் கீதா......

 நீட் மரணங்கள்

 இவர்களை தொடர்ந்து வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சௌந்தர்யாவின் வகுப்பு ஆசிரியர்களை பிபிசி தமிழ் சந்தித்தது.

"சௌந்தர்யா படிப்பின் மீது கொண்ட ஆர்வம், ஈடுபாடு மிகப் பெரியது. எங்கள் பள்ளியில் இருந்து ஒரு மருத்துவர் உருவாகிறார் என்ற எதிர்பார்ப்பு எங்கள் அனைவருக்குமே இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்துவிட்டார். அவசரப்பட்டு இப்படியொரு முடிவு எடுத்துவிட்டார். குறிப்பாக மாணவர்கள் அனைவருமே நல்ல முறையில் தேர்வுக்கு தயாராகிறார்கள். ஆனால் நம்பிக்கையோடு ஒரு முறை தவறிவிட்டால், அடுத்தமுறை முயற்சி செய்யலாம். அரசு பள்ளி மாணவர்கள் என்பதால் அரசு இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது," என்று சௌந்தர்யாவின் இயற்பியல் ஆசிரியர் குமரவேல் தெரிவித்தார்.

5ஆண்டுகளில் 16 மாணவர்கள் பலி

பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தீவிரமான எதிர்ப்பு நிலவுகிறது. மாணவர்கள் தற்கொலைகளும் அதிகமாக நடக்கின்றன. மேலும் தமிழ்நாட்டுக்கு நீட் வந்தபின் 2017ல் நடந்த அனிதா தற்கொலை உள்பட கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

உளவியலாளர் கூறுவது என்ன?

மாணவர்கள் தற்கொலை குறித்து உளவியலாளர் வி.சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 28 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. தற்கொலையை நம்மால் 100 சதவீதம் தடுக்க முடியும். பொதுவாக தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் ஒரு எச்சரிக்கை அறிகுறியை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருப்பார்கள். அப்படி அவர்கள் தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்றால் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் சிலர் தற்கொலையை பற்றி பேசினால் தற்கொலை செய்து கொள்வர்களோ என்றும் நினைப்பதுண்டு. இந்த அச்சம் காரணமாக அதைப்பற்றி உரிய நபரிடம் பேசாமலே இருப்பார்கள். ஆனால் மிகவும் தவறான அணுகுமுறை.

சம்மந்தப்பட்ட நபர் மீது தற்கொலை எண்ணத்தில் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் உடனடியாக அவர்களிடம் அதைப் பற்றி பேசவேண்டும். அவர்கள் மறுகணம் பேசும்போது அதை செவிகொடுத்து கேட்க வேண்டும். அந்த நேரத்தில் அவர்களிடம் புத்திமதி கூறுவது, நீதிக்கதைகள் திணிப்பது போன்றவற்றால் தற்கொலையை தடுக்க முடியாது. அவர்கள் முழுவதுமாக கூறிய பிறகு பெற்றோர் சரியான முறையில் அணுகலாம். ஒருவேளை பெற்றோரால் கையாள முடியாத சூழலில் மனநல ஆலோசகரை அணுகவேண்டும்," என்று உளவியலாளர் வி.சுனில் குமார் கூறுகிறார்.

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

நீட் தேர்வு எதிரொலியாக மாணவர்கள் தொடர் தற்கொலை காரணமாக நீட் தேர்வில் மனநலம் சார்த்த ஆலோசனை பெறுவதற்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அப்போது பேசிய அவர், "இந்த எண்ணை தொடர்பு கொண்டால் மனநல மருத்துவர்களும், மருத்துவ ஆலோசகர்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள். உடல் பலம், மன பலம் கொண்டவர்களாக மாணவர்களை வளர்க்க வேண்டும். பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டாம்," என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தம், தற்கொலை எண்ணம் உடையோர் உளவியல் ஆலோசனைக்கு 24 மணி நேர அரசு உதவி எண் 104-ஐ தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக