ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

அரசியல் தலைவர்களின் யூடியூப் வருமானம் ஒரு பார்வை.

யூடியூப் வருமானம்

Vikatan : சமீபத்தில் நிதின் கட்கரி யூடியூப் தனக்கு மாதம் நான்கு லட்சம் ரூபாய் வருமானம் வரும் என்று தெரிவித்திருந்தார். மற்ற அரசியல் தலைவர்களின் யூடியூப் வருமானம் ஒரு பார்வை.
சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது கொரோனா கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், கொரோனா பொது முடக்க காலத்தில் நான் இரண்டு விஷயங்களைச் செய்தேன். ஒன்று வீட்டில் சமையல் செய்யத் தொடங்கினேன். இரண்டாவது கருத்தரங்கங்களை இணையவழியில் நடத்தினேன் என்றார்.
அந்த அனைத்து இணையவழி கருத்தரங்கங்களின் வீடியோக்களையும் எனது யூடியூப் சேனலில் வெளியிட்டேன்.
அந்த வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதிகளவிலானப் பார்வையாளர்கள் அந்த வீடியோக்களைப் பார்த்தனர்.
இதனால் யூடியூப்பில் இருந்து வருமானம் வரத் தொடங்கியது. தற்போது ஒவ்வொரு மாதமும் யூடியூப்பில் இருந்து நான்கு லட்சம் ரூபாய் வரை பணம் வருகிறது என்று பேசியிருந்தார்.

 நிதின் கட்கரியைத் தொடர்ந்து அரசியல் தலைவர்களின் யூடியூப் வருமானம் என்ன என்பதை அலசினோம்.
யூடியூப்பை பொறுத்தவரை பல்வேறு விதிமுறைகளின் கீழ் வருமானம் வழங்கப்படும். Social Blade என்னும் இணையதளம் மூலம் ஒரு யூடியூப் சேனலின் வருமானம் எவ்வளவு என்பதை ஆராய்ந்து எழுதியுள்ளோம்.

சேனலின் வருமான மதிப்பு அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டதுதான். இதுவே உறுதியான வருமானம் அல்ல.

இந்த இணையதளத்தின் படி அதிகபட்சமாக நிதின்கட்கரியின் மாத வருமானம் ஐந்து லட்சத்திற்கும் மேல் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் யூடியூப் சேனலுக்கு 1.98 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். தொடர்ச்சியாக முதல்வரின் செயல்பாடுகள் குறித்த வீடியோ அந்த சேனலில் பதிவிடப்படுகிறது.

இந்த சேனல் மூலம் மட்டும் அதிகபட்சமாக மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானம் வரும் என்று Social Blade இணையதள விவரம் கூறுகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் யூடியூப் வருமானம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யூடியூப் சேனலுக்கு மொத்தம் ஐந்து லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

அவரின் செயல்பாடுகள், கருத்தரங்கப் பேச்சுகள் போன்ற வீடியோக்கள் அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இந்த சேனல் மூலம் அதிகபட்சமாக மாதம் 1.47 லட்சம் ரூபாய் வருமானம் வரக்கூடும். ஆம் ஆத்மி கட்சியின் யூடியூப் சேனலுக்கு 14 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். அந்தக் கட்சியின் செயல்பாடுகள், கூட்டங்கள், கட்சித் தலைவர்களின் உரைகள் குறித்த வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன.

இந்த யூடியூப் சேனலின் மூலம் தோராயமாக மாதம் 1.21 கோடி ரூபாய் வருமானம் வரும் என்று கூறப்படுகிறது.

 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனலில் 16.1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இந்தச் சேனலில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் செயல்பாடுகள், பத்திரிகையாளர் சந்திப்பு, பேட்டி போன்றவை வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இந்த சேனல் மூலம் தோராயமாக மாதம் 22 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் வரலாம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை வகிக்கும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் யூடியூப் சேனலுக்கு 3.91 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

இந்த சேனலில் அந்தக் கட்சித் தலைவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு, மம்தாவின் உரைகள் போன்ற வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன.

இந்தச் சேனல் மூலம் தோராயமாக மாதம் 4.4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கலாம். நாம் தமிழர் கட்சியின் யூடியூப் சேனலுக்கு 3.72 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளார்.

இந்த பக்கத்தில் அந்த கட்சியின் செயல்பாடுகள், சீமானின் உரை, பேட்டி போன்ற வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன. இந்த சேனல் மூலமாகத் தோராயமாக மாதம் 1.62 லட்சம் ரூபாய் வருமானம் வரலாம்.

பிரதமர் மோடியின் யூடியூப் வருமானம்

பாஜக-வின் யூடியூப் சேனலுக்கு 38.5 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இந்த சேனலில் பாஜக-வின் செயல்பாடு, பிரதமர் மோடி கலந்துகொள்ளும் கூட்டங்களின் உரையாடல், அரசியல் தலைவர்களின் உரை போன்ற பல்வேறு வீடியோக்கள் தொடர்ச்சியாகப் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இந்த சேனல் மூலம் தோராயமாக மாதம் 22 லட்சம் ரூபாய்க்கும் அதிகமா வருமானம் கிடைக்கலாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனலுக்கு 91.7 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர்.

இந்த பக்கத்தில் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ச்சியாகப் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

இந்த சேனல் மூலம் தோராயமாக மாதம் 1.2 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கலாம். இவர்கள் மட்டுமில்லாது இந்தியாவில் இன்னும் பல்வேறு அரசியல் தலைவர்கள் யூடியூப் சேனல் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் யூடியூப் வருமானம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக