வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

கந்தகார் விமான கடத்தல் Flashback 26 Aug 2014 - 178 பயணிகள், இரு விமான ஓட்டிகள், ஏர் ஹோஸ்டஸ்கள், 15 ஏர்லைன்ஸ் ஊழியர்கள். மொத்தம் 193 பேர்.

 hindutamil.in  -  : டீல்: தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை!
டிசம்பர் 24, 1999. மாலை மணி 4.25. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஐ.சி. 184 நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து தில்லிக்கு வந்துகொண்டிருக்கிறது. 178 பயணிகள், இரு விமான ஓட்டிகள், ஏர் ஹோஸ்டஸ்கள், பிற உதவியாளர்கள் என 15 ஏர்லைன்ஸ் ஊழியர்கள். மொத்தம் 193 பேர்.
மணி ஐந்து ஐந்து. ஐந்து பயணிகள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்திருக்கிறார்கள். இருவர் விமான ஓட்டி அறை அருகே போகிறார்கள்: மற்ற மூவரும், விமானத்தின் முன், நடு, பின்பகுதிகளில். அவர்கள் கைகளில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்திகள். பயணிகள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது – விமானம் கடத்தல்காரர்கள் கையில். தீவிரவாதிகள் என்ன செய்யப்போகிறார்கள்? பயணிகள் எல்லோரின் லப் டப்பும் எகிறுகிறது.
கடத்தல்காரர்கள் தங்களைக் காஷ்மீரில் இருக்கும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் என்னும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தொண்டர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தலைவன் சீஃப் என்று தன் சகாக்களால் அழைக்கப்படுகிறான். விமானத்தைப் பாகிஸ்தானில் லாகூர் விமான நிலையத்தில் இறக்கச் சொல்கிறான். லாகூர் விமான அதிகாரிகள் அனுமதி தர மறுக்கிறார்கள்.

பாகிஸ்தானில் வேறு ஏதாவது விமான நிலையத்தில் இறக்குமாறு சீஃப் கட்டளையிடுகிறான். அதுவரை பயணிக்க எரிபொருள் இல்லை. அருகில் இருப்பது இந்தியாவின் அமிர்தசரஸ். தயக்கத்தோடு அங்கே போக சீஃப் அனுமதிக்கிறான். அவனுக்குத் தெரியா தபடி, தாங்கள் கடத்தப்பட்ட சேதியை தில்லிக்குத் தெரிவித்து விடுகிறார் விமானி. கடத்தல்காரர்கள் தங்கள் கோரிக் கைகளை முன் வைக்கிறார்கள்.

இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் தரவேண்டும். இந்தியச் சிறைகளில் இருக்கும் 36 பாகிஸ்தானியத் தீவிரவாதிகளை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் விடுதலை செய்யவேண்டும். இந்திய ராணுவத்தால் ஜம்முவில் கொல்லப்பட்ட ஸஜத் ஆ கானி என்னும் பாகிஸ்தான் தீவிரவாதியின் உடலைச் சகல மரியாதைகளுடன் ஒப்படைக்க வேண்டும்.

“இவற்றுக்குச் சம்மதிக்காவிட்டால், விமானத்தில் இருக்கும் அனைத்து பயணிகளையும் கொன்றுவிடுவோம்.”

மத்தியில் அப்போது பதவியில் இருந்த வாஜ்பாய் அரசு அதிர்ந்துபோகிறது. நடவடிக்கைகளில் இறங்குகிறது. தீவிரவாதிகளோடு பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வாஜ்பாய் அரசு விமானி மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கிறது.

அதே சமயம், அதிரடி நடவடிக் கைகளுக்கும் இந்தியா ஆயத்தம் செய்துகொள்கிறது. தில்லியிலிருந்து தேசியப் பாதுகாப்புப் படை வீரர்கள் அமிர்தசரஸ் நோக்கி விரைகிறார்கள்.

அமிர்தசரஸில் எரிபொருள் போடவேண்டும். தேசியப் பாதுகாப்புப் படை விமான நிலையம் வந்து சேருவதுவரை, விமானத்தை ஏதாவது காரணம் காட்டித் தாமதம் செய்யுமாறு தில்லியிலிருந்து அமிர்தசரஸ் விமான அதிகாரிகளுக்கு உத்தரவு பறக்கிறது.

அமிர்தசரஸில் அரை மணி நேரம் தாண்டிவிட்டது. தங்களுக்கு ஏதோ பொறி வைக்கிறார்கள் என்று சீஃப் மனதில் சந்தேகம். விமானத்தை எடுக்குமாறு பைலட்டை மிரட்டுகிறான். அவர் மறுக்கிறார். தேனிலவிலிருந்து திரும்பும் ரூபின் கட்யால் அருகே சீஃப் வருகிறான். அவர் உடலில் அவன் கத்தி “சதக்.” ரத்தம் பீறிடுகிறது. ரூபினின் இளம் மனைவி கதறுகிறார். விமானம் வானில் உயர்கிறது.

பாகிஸ்தான் லாகூர் நிலையம் விமானம் தரை இறங்க அனுமதிக்கிறது. ஒரே ஒரு நிபந்தனை – யாரும் கீழே இறங்கிவரக்கூடாது. லாகூரில், ராணுவப் பாதுகாப்புடன் எரிபொருள் நிரப்பப்படுகிறது. விமானத்தை லாகூரை விட்டுப் போக அனுமதிக்காதீர்கள் என்று இந்தியா பாகிஸ்தானிடம் வேண்டுகிறது. மறுக்கிறார்கள்.

கடத்தல்காரர்களின் இலக்கு துபாய். அங்கும், அதிகாரிகள் கடத்தல் விமானத் துக்குத் தடை விதிக்கிறார்கள். 188 பயணிகள், ஒருவர் காயம் பட்டவர். எனவே, மனிதாபிமான அடிப்படையில் விமானம் தரை இறங்க அனுமதிக்குமாறு இந்தியாவும், அமெரிக்காவும் கேட்டுக் கொள்கின்றன. துபாய் சம்மதிக்கிறது. அதே சமயம், தீவிரவாதிகளை அடக்க, இந்திய பாதுகாப்புப் படைக்கு ஒப்புதல் தர துபாய் சம்மதிக்கவில்லை.

இரவு மணி 12, விமானத்தில் உணவும், தண்ணீரும் தீர்ந்துவிட்டது. தீவிரவாதிகள் சப்ளை கேட்கிறார்கள். பெண்களையும், குழந்தைகளையும் விடுதலை செய்தால் மட்டுமே உணவும் தண்ணீரும் தர முடியும் என்கிறார்கள் துபாய் அதிகாரிகள். 25 பயணிகள், பெண்களும், குழந்தைகளுமாக இறங்குகிறார்கள். 26 – வது ஒருவர், இல்லை, ஒரு சடலம். கத்தியால் குத்தப்பட்ட 25 வயது புது மாப்பிள்ளை ரூபின் கட்யால் மரணமடைந்துவிட்டார். ஐ.சி. 184 – இல் தீவிரவாதத்துக்கு முதல் பலி!

விமானம் துபாயை விட்டுக் கிளம்புகிறது. போகும் இடம் எதுவென்று சீஃப் ஆணையிடுகிறான். ஆப்கானிஸ்தானில், தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் காந்தஹார்!

டிசம்பர் 25. காலை மணி 8. 30. விமானம் காந்தஹாரில். தாலிபான் அரசோடு இந்தியாவுக்குத் தூதரக உறவு கிடையாது. ஆகவே, பாகிஸ் தான் இஸ்லாமாபாத் நகரில் இருக்கும் ஆப்கான் நாட்டுத் தூதரகம் வழியா கத்தான் தீவிரவாதிகளோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம். இதனால், இந்தியத் தூதுக் குழு காந்தஹாருக்கு டிசம்பர் 27 அன்றுதான் வந்துசேர முடிந்தது.

தீவிரவாதிகளை அடக்க, இந்தியப் பாதுகாப்பு வீரர்கள் ஆப்கானிஸ்தான் வர தாலிபான் சம்மதிக்கவில்லை. இது மட்டுமா? இன்னும் ஒரு படி மேலே போனார்கள். கடத்தல்காரர்களுக்குப் பாதுகாப்பாக, பீரங்கிகளையும், ராக்கெட் லாஞ்சர்களையும் விமானத்தைச் சுற்றி நிறுத்தினார்கள்.

இந்தியாவுக்குத் தெரியாதா இந்த ஆடு புலி ஆட்டம்? தூதர் குழுவில், சாதாரண உடையில், சில கறுப்புப் பூனைகள்!

தீவிரவாதிகளுக்கும், இந்தியத் தூதுக் குழுவுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் நான்கு நாட்கள் தொடர்ந்தன. இழுபறி. விட்டுக் கொடுத்தால், தீவிரவாதிகள் தொந்தரவு தொடரும், இந்திய இறையாண்மையே களங்கப்படும் என்று உணர்ந்த இந்திய அரசு, ஒரு கோரிக்கையைக்கூட ஏற்கமாட்டோம் என்று உறுதி காட்டினார்கள். இதற்குள் விமானத்தில் நிலைமை சீரழிந்துகொண்டிருந்தது. சாப்பாடும், தண்ணீரும் தீர்ந்துவிட்டன: கழிவறைகள் நிரம்பி வழிந்தன: பயணிகள் வியர்வை வெள்ளத்தில், பயத்தில்.

எப்படியாவது பயணிகளைக் காப்பாற்றுங்கள், விட்டுக் கொடுங்கள் என்று பயணிகளின் குடும்பங்கள், உறவினர்கள், நண்பர்கள், சமூக அமைப்புகள், மனித நேய ஆர்வலர்கள் இந்திய அரசிடம் மன்றாடினார்கள். தன் உறுதியைத் தளர்த்த இந்தியா முடிவு செய்தது.

டிசம்பர் 31. இருட்டில் ஒரு வெளிச்சம். சிறையில் இருந்த மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை விடுதலை செய்ய இந்தியா சம்மதித்தது. பதிலாக, எல்லாப் பயணிகளையும், ஏர்லைன்ஸ் ஊழியர்களையும் விடுவிக்கத் தீவிரவாதிகள் சம்மதித்தார்கள்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், விடுதலை செய்யப்பட்ட மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழைத்துக்கொண்டு, தனி விமானத்தில் காந்தஹார் சென்றார். பரிமாற்றம் நடந்தது. பயணிகள் அமைச்சரின் விமானத்தில் ஏறினார்கள். ஒரு வாரத்துக்குப் பின், பிறந்த மண் நோக்கி, நிம்மதியாகப் பயணம்!

தீவிரவாதிகளின் பிடியில் மாட்டிக் கொண்டால், இரண்டே வழிகள்தாம் – ஒண்டிக்கு ஒண்டி அல்லது ஜூட். அதாவது, அவர்களோடு தடாலடியாக மோதவேண்டும் அல்லது அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டுத் தப்பி ஓடிவிடவேண்டும்.

இந்தக் கொள்கைக்கு, ஹங்கேரி நாட்டு மருத்துவ மேதை ஹான்ஸ் ஸெல்யே (Hans Selye) வைத்திருக்கும் பெயர், போராடு அல்லது ஓடு (Fight or Flight Response).

slvmoorthy@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக