வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

பெண் நீதிபதிகள்தான் தாலிபான்களின் முதல் குறியாக இருப்பார்கள்! கடந்த கால தாலிபான் பாலியல் குற்றவாளிகள்..

May be an image of 1 person and standing

Vidhya Suresh   :  இரத்தம் தோயாத ரொட்டித்துண்டு !
          “என்னை நினைத்து வெட்கமாக இருக்கிறது. நான் இப்பொழுது அவர்களுடன் நின்றிருக்க வேண்டும், அவர்களுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றையும் விடுத்து நான் மட்டும் இங்கு சுகமாக இருப்பதை நினைக்கும்போது….” முடிக்குமுன்பே தேம்பி அழத்தொடங்கிவிட்டார் Marzia Babakarkhail- இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம் புகுந்து பிரிட்டிஷ் குடியுரிமைப் பெற்று  வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆஃப்கனின் முன்னாள் பெண் நீதிபதி.
            “பெண் நீதிபதிகள்தான் தாலிபன்களின் முதற்குறியாக இருப்பார்கள். கடந்த காலங்களில் கற்பழிப்பு, வன்புணர்வு, பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக தீர்ப்பு சொன்ன பெண் நீதிபதிகளிடம் இன்னமும் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள் அனைவரும் வீடு, வீடாக மாறி, மாறி ஒளிந்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலர் நகரை விட்டு வெளியே சிறு கிராமங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். ஆஃப்கன் நிலைமை மிகவும் அச்சமூட்டுகிறது. ஏனெனில், நம்பிக்கை என்ற வார்த்தையும், தாலிபனும் ஒன்றுக்கொன்று முரணானவை”


                 தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் பேசுவதே 55 வயதான அந்த பெண்மணிக்கு பெரும் சவாலாக இருக்கிறது. பொங்கி வரும் கண்ணீர், ஏற்கனவே உடைந்து திணறும் குரலை இன்னமும் பலவீனப்படுத்துகிறது. அந்தப் போர் பிரதேசத்தில் 1992 இல் பெண்களுக்கான தனிப் பள்ளியை நிறுவியதோடு நில்லாமல், தொடர்ந்து பெண் கல்விக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் போராடி வந்த Marzia வும் இருமுறை கொலைமுயற்சிக்கு ஆளாகி, அங்கிருந்து தப்பி உயர்பிழைக்க இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தவர்.
             96இல் தாலிபன்கள் கைப்பிடிக்குள் ஆஃப்கன் சென்றபோது, இவர் துவங்கிய பள்ளிகள் மூடப்பட்டன. வீட்டுக்குள் புகுந்து இவரைக்கொல்ல முயன்ற தாலிபன்களிடமிருந்து தப்பிப்பதற்காக பழைய இரும்புகள், தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைக்கும் ஒரு பெரிய குழாயினுள் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் மூச்சுக்காற்று வெளிவராது, பூச்சிகளும், புழுக்களும் மொய்க்க படுத்துக் கிடந்திருக்கிறார். வீடு முழுவதும் அலசியப்பின் அவர் அம்மாவையும், தங்கையையும் மிரட்டிய தாலிபான்களிடமிருந்து தப்பி பாகிஸ்தானில் வாழ்ந்திருக்கிறார். அங்கிருந்தே தன் விழிப்புணர்வு பணிகளையும் விடாமல் தொடர்ந்திருக்கிறார்.
          பாகிஸ்தானிலும் அவரைத் துரத்திய தாலிபான்கள், சாலையில் சென்றுக்கொண்டிரைந்தவர்மேல் காரை ஏற்றி நசுக்கிவிட்டு நல்லவேளையாக அவர் சாகுமுன் அந்த இடத்தைவிட்டு பறந்துவிட, குற்றுயிராகக் கிடந்தவரை காப்பாற்றி கவனித்துக்கொண்ட அவர் அம்மா, தன் மகளை வற்புறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். சமீபமாக, 2019இல்  இவரைப்போன்ற இரு பெண் நீதிபதிகள் சாலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மார்சியாவின் நெருங்கியத் தோழி.
               அச்சம்பவத்தின் ஆறாத ரணங்களுடனும், உடல் உபாதைகளுடனும் இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் மார்சியா, “பெரும் சிதையின் மேல் நின்றுக்கொண்டிருக்கிறார்கள் ஆஃப்கன் பெண்கள்; இருண்ட புகைமூட்டம் அவர்களை கவிந்துள்ளது. முழுவதாக எரிந்து அவியுமுன்,  உலக மக்கள் அவர்களுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுங்கள். அவர்களை காப்பாற்ற உதவி செய்யுங்கள்” என்று தன் அழுகையினூடே வேண்டுகோள் விடுக்கிறார்.
      “நான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவள். எனக்கு என் மதத்தை தெரியும். எனக்கு குரான் இருக்கிறது. என் மதத்தையும், அதன் சட்டங்களையும் புதிதாக போதிக்க எனக்கு கலாச்சார காவலர்கள் தேவையில்லை. தாலிபன்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டுள்ளதாக அறிவிக்கிறார்கள். ஆனால், நான் நம்பவில்லை. சிறுத்தைகளால் தங்கள் புள்ளிகளை மறைத்துக்கொள்ளவோ, அழித்துக்கொள்ளவோ முடியுமா என்ன”?
            மத அடிப்படைவாதம் விடுத்துச் செல்லும் தழும்புகள் எல்லா சமுதாயங்களிலும் மக்கவியலாத குப்பைகள் போல உறைந்து கிடக்கின்றன. வேற்று மதம் என்ற ஒன்றே இல்லாமல் ஆகி, ஒரே மதம், ஒரே நம்பிக்கை என்று இருக்கும் நாட்டில், அம்மதத்தைச் சார்ந்த மதவாதிகளாலேயே மக்களுடைய குறைந்தபட்ச பாதுகாப்பையோ, உரிமைகளையோ உறுதி செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம், ரத்தம் தோயாத ஒற்றை ரொட்டித்துண்டை பசித்த குழந்தையை நோக்கி நீட்ட முடியுமா அவர்களால்?.
Vidhya Suresh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக