வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

ஆப்கானில் ஜனநாயகம் இருக்காது: ஷரியத் சட்டம்தான் .. தாலிபான் திட்டவட்டம்!

 மின்னம்பலம்  : ஆப்கானிஸ்தானை ஒரு குழு அமைத்து ஆளப் போவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள ஒரு அடையாளம் காட்டப்படாத பகுதியில் வைத்து தாலிபானின் மூத்த கமாண்டர் வஹிதுல்லா ஹாஷ்மி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியின் விவரங்கள் இன்று (ஆகஸ்டு 19) பாகிஸ்தானின் டான் உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.
“"நம் நாட்டில் எந்த அடிப்படை அமைப்பும் இல்லாததால் ஜனநாயக அமைப்பு இருக்காது" என்று அவர் கூறினார். "
ஆப்கானிஸ்தானில் எந்த வகையான அரசியல் அமைப்பை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி நாங்கள் விவாதிக்க மாட்டோம், ஏனெனில் அது தெளிவாக உள்ளது.

அது ஷரியத் சட்டம்தான். இப்போது நாட்டில் எந்த அடிப்படை சிஸ்டமும் இல்லாததால் நிச்சயமாக ஜனநாயக அமைப்பாக இருக்காது. எங்களுடைய மூத்த உறுப்பினர்களால் அமைக்கப்பட்ட குழுதான் இப்போது அரசை இயக்கும். இயக்கத்தின் உச்ச தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருப்பார். அதாவது அதிபர் என்ற அளவில் இருப்பார்” என்று ஹாஷ்மி கூறியிருக்கிறார்.

தாலிபானின் தலைவர் முல்லா யாகூப், முல்லா ஓமரின் மகன் சிராஜுதீன் ஹக்கானி, தோஹாவில் உள்ள தாலிபான்களின் அரசியல் அலுவலகத்திற்கு தலைமை வகிக்கும் அப்துல் கனி பரதர் ஆகியோர் ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் அப்பேட்டியில் ஹாஷ்மி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வார இறுதியில் தாலிபான் தலைமையின் கூட்டம் நடக்க இருப்பதாகவும் ஹாஷ்மி கூறியுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக