திங்கள், 5 ஜூலை, 2021

ஸ்டேன் சுவாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் இரங்கல்

RAVI PRAKASH/ BBC : தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி மருத்துவமனையில் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று காலமானார். இந்த தகவலை ஜார்கண்ட் ஜன அதிகாரி மகாசபையின் சிராஜ் தத்தா பிபிசியின் பங்கேற்பு செய்தியாளரான ரவி பிரகாஷிடம் உறுதிப்படுத்தினார். ஸ்டேன் சுவாமியின் பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்து வந்தது. அப்போது மும்பையின் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மரணம் அடைந்த தகவலை அவருக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர் உறுதிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதனால் எல்கார் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 6ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே, ஸ்டேன் சுவாமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் மிஹிர் தேசாய் கோரியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்புதான் ஸ்டேன் சுவாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆனால், தனக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டபோதே, வேறு எந்த மருத்துவமனையிலும் தன்னை சேர்க்க வேண்டாம் என்றும், தன்னை பிணையில் விடுவிக்குமாறும் ஸ்டேன் சுவாமி தரப்பில் நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனை அல்லாது வேறு தனியார் மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடுவதாக நீதிமன்றம் கூறிய நிலையிலேயே மருத்துவமனையில் சேர ஸ்டேன் சுவாமி தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இவரது கைது நடவடிக்கையின் மூலம், இந்தியாவிலேயே பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அதிக வயதுடைய செயல்பாட்டாளர்களில் முதன்மையானவராக ஸ்டேன் சுவாமி கருதப்பட்டார்.

தலைவர்கள் இரங்கல்

ஸ்டேன் சுவாமி உயிரிழந்த தகவல் அறிந்து பல்வேரு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தங்களுடைய இரங்கலை பகிர்ந்து வருகிறார்கள்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நீதியும் மனிதாபிமானமும் பெறத் தகுதியானவர் அவர் என்று ராகுல் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "விளிம்புநிலை மக்களுக்காக அயராது உழைத்தவர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி. கொடூரமான சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், குற்றம் நிரூபிக்கப்படாமல் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் அவர் மனிதாபிமானமற்று நடத்தப்பட்ட விதத்தால் அவர் இறந்துள்ளார். காவலில் உள்ளபோது அவர் கொல்லப்பட்டிருப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடைமையாக்கப்பட வேண்டும்," என்று கூறியுள்ளார்.

மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி, "பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவரை தேச விரோதி எனக்கூறி பாரதிய ஜனதா கட்சி அரசு கைது செய்தது. அவரது உடல் பிரச்னைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. கோமாவுக்கு சென்ற அவர் காலமாகியுள்ளார். போராளிகள் விதைக்கப்படுகிறார்கள், புதைக்கப்படுவதில்லை," என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல். திருமாவளவன், "பீமா கோரேகான் வழக்கு என்பது கம்ப்யூட்டரில் உளவு நிறுவனங்களே பொய்யான ஆதாரங்களைப் பதியவைத்து போலியாக உருவாக்கப்பட்ட வழக்குதான் என்பதைத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளனர். இந்தச் சூழலில் நீதிமன்றம் தொடர்ந்து இதில் பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கிறது.

ஏற்கனவே சனாதன் சன்ஸ்தா என்ற கொலை அமைப்பின் மூலமாக கோவிந்த் பன்ஸாரே, நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி, ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்குகளில் தொடர்புள்ள சனாதன் சன்ஸ்தா அமைப்பை இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து நடவடிக்கை எடுக்க பாஜக அரசு முன்வரவில்லை. முன்பு சனாதன் சன்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்பு செய்த படுகொலைகளை இப்போது சட்டத்தின் துணையோடு பாஜக அரசு செய்ய முற்பட்டு இருக்கிறது என்பதையே ஸ்டான் சாமி அவர்களுடைய மரணம் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலைக் கண்டிப்பதற்கும், சிறைப் படுத்தப் பட்டிருக்கும் சிந்தனையாளர்களை விடுவிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்," என்று கூறியுள்ளார்.

சமூக செயல்பாட்டாளரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், "நான் அறிந்தவரையில் மிகவும் மென்மையான மற்றும் கனிவான நபரின் இறப்பு, அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலையே தவிர வேறில்லை. துரதிருஷ்டவசமாக நமது நீதித்துறையும் இதற்கு துணை போயுள்ளது," என்று கூறியுள்ளார்.

எழுத்தாளர் மீனா கந்தசாமி, "நீதித்துறை, ஆர்எஸ்எஸ்-பாரதிய ஜனதா கட்சி, என்ஐஏ, மாநில அரசின் சார்பாக பரப்புரையை முன்னெடுத்த ஊடகங்கள், மோதியும் அமித் ஷாவும் இப்படி செயல்பட அனுமதித்த எதிர்கட்சிகளின் கரங்களில் ரத்தக்கறை, நம் அனைவரது கரங்களிலும் ரத்தம் படிந்துள்ளது," என்று தமது இரங்கலை பகிர்ந்துள்ளார்.

பீமா கோரேகான் வழக்கில் கைது

மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் வன்முறையை தூண்டியதாகக் கூறி ஸ்டேன் சுவாமியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.

83 வயதாகும் இவர் ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள பாகைய்சாவில் தனியாக வசித்து வந்தார்.

பீமா கோரேகான் வழக்கில் இவருக்கு தொடர்புள்ளது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவிலும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வந்த ஸ்டேன் ஸ்வாமியின் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கடுமையான சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஸ்டேன் சுவாமி

ஸ்டேன் சுவாமி

பட மூலாதாரம், Getty Images

1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தமிழகத்தின் திருச்சியில் பிறந்தார் ஸ்டேன் சுவாமி.

1970களில் இறையியல் படிப்பை முடித்த அவர் ஃபிலிப்பைன்ஸில் சமூகவியல் மேல் படிப்பை முடித்தார். அங்கு ஆளும் நிர்வாகத்துக்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார். அதன் பிந்தைய ஆண்டுகளில் பிரேசிலிய கத்தோலிக்க பேராயர் ஹெல்டர் காமராவின் வறியநிலை மக்களுக்கான சேவையால் ஈர்க்கப்பட்ட அவர் தாயகம் திரும்பியதும் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்தார்.

1975 முதல் 1986ஆம் ஆண்டுவரை அவர் பெங்களூரில் உள்ள இந்திய சமூகவியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். பழங்குடியின ஆலோசனை கவுன்சிலை அமைக்க அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்படுத்தாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

இதன் பிறகு, பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொலைதூர காடுகளில் வாழும் மக்களின் நில உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அங்கேயே இறை பணியையும் அவர் மேற்கொண்டார். உள்ளூர் மக்களால் அப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த அவர், பழங்குடியின உரிமைகளுக்கு இடைவிடாமல் குரல் கொடுத்து வந்ததால் பழங்குடியின மக்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களிடையே செல்வாக்கு மிக்க நபராகவும் அறியப்பட்டார்.

ஸ்டேன் சுவாமி

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மகாராஷ்டிராவின் புனேவில் நடந்த மாநாட்டில் இவர் ஆற்றிய உரை, மறுநாள் மேற்கு மகாராஷ்டிராவின் பீமா கோரேகான் நினைவிடத்தில் வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாகக் கூறி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு எல்கர் பரிஷாத் வழக்கு என்று அழைக்கப்படுகிறது. ஸ்டேன் சுவாமி பங்கேற்ற மாநாடு, மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டது முதலே ஸ்டேன் சுவாமியை மாவோயிஸ்டு என்று என்ஐஏ கூறி வருகிறது. இதனால் அவரது சார்பில் பிணை கோரி மனு தாக்கல் செய்தபோதெல்லாம் அதை என்ஐஏ கடுமையாக ஆட்சேபித்து வந்தது.

கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டபோது, உணவை மெல்லவும் விழுங்கவும் சவால் நிறைந்ததாக கருதப்படும் பார்கின்சன் நோய் உள்ளிட்ட நோய்கள் இருப்பதால் தனக்கு இரவு விருந்தின்போது உறிஞ்சும் குழாய் (ஸ்ட்ரா) தருமாறு ஸ்டேன் சுவாமி கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், நான்கு வார காத்திருப்புக்குப் பிறகு தலோஜா சிறை நிர்வாகம் அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலில் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை மோசம் அடைந்ததையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக