திங்கள், 5 ஜூலை, 2021

தடுப்பூசி கையிருப்பில் இல்லை: சுகாதாரச் செயலாளர்!

 மின்னம்பலம் : தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வமாக தடுப்பூசி முகாம்களின் வாசலில் காத்திருந்து, தடுப்பூசி இல்லாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அதனால், கடை ஊழியர்களுக்கும், வணிகர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி, இன்று(ஜூலை 5) சென்னை தியாகராய நகரில் வணிகர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், ”இன்று முதல் 5 நாட்களுக்கு வணிகர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன் மூலம் 5 ஆயிரம் வணிகர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 11 ஆம் தேதிதான் 8.5 லட்சம் தடுப்பூசிகள் வரும். தற்போது தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாத காரணத்தால் 11 ஆம் தேதிக்கு முன்பே தடுப்பூசிகள் வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளோம்.

தடுப்பூசி மற்றும் மதுரை எய்ம்ஸ் பணிகள் உள்ளிட்டவை குறித்து பேசுவதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இந்த வார இறுதியில் டெல்லி செல்லவுள்ளார்” என்று கூறினார்.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக