சனி, 3 ஜூலை, 2021

ஒன்றிய அரசின் ஒளிப்பதிவு சட்டத் திருத்தம்! கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் பாசிச சட்டம்?

 BBC : ச. ஆனந்தப்பிரியா -      பிபிசி தமிழுக்காக :  மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், கார்த்திக் சுப்புராஜ் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ஏன் இந்த சர்ச்சை, இதன் பின்னணி என்ன?
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 என்ன சொல்கிறது?
பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்கு மூலமாக மக்களை சென்றடைவதற்கு முன்பு அதற்கு ‘யு, யு/ஏ அல்லது ஏ’ சான்றிதழை தணிக்கை குழு வழங்கும்.
தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வர இருக்கும் இந்த ஒளிப்பதிவு சட்டத் திருத்த வரைவு 2021 மூலம் மேற்கண்ட சான்றிதழ்களை வழங்கும் தணிக்கை குழு, நீதிமன்றம் இவை இரண்டையும் தாண்டி படங்கள் வெளிவருவதற்கு முன்பு, இந்த சட்டத்தின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு தலையிட முடியும். தணிக்கை குழு வழங்கிய சான்றிதழ்களில் மாற்றங்கள் செய்யவும், தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் மத்திய அரசுக்கு இதன் மூலம் அதிகாரம் கிடைக்கும்.



இந்த சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை இந்திய அரசு வெளியிட்டது. அதற்கான கடைசி நாள் இன்றுதான்.
என்னென்ன திருத்தங்கள்?

தணிக்கை குழு வழங்கும் சான்றிதழ்களோடு சேர்த்து வயது வாரியாகவும் சான்றிதழ்கள் அதாவது ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என வழங்க இருக்கிறது இந்த புதிய சட்டம். மேலும், இதில் படத்தின் கருவோ அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களோ மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும். இதுபோன்ற பல திருத்தங்களை இந்த சட்டம் முன் மொழிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதில் தங்களது கருத்துகளும், பரிந்துரைகளும் அடங்கிய 12 பக்கங்கள் கொண்ட கடிதத்தை படைப்பாளிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும், அதில் படைப்பாளிகள், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இது அச்சுறுத்தலாக இருப்பதோடு அரசின் முன் அடிபணிய வேண்டிய சூழலுக்கு தள்ளிவிடுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்க காரணம் என்ன?

திரைத்துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசின் தலையீடு அதிகரித்திருக்கிறது. ஒரு இனம் சார்ந்தோ குறிப்பிட்ட மதம் சார்ந்தோ, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகளையும், பிரசாரங்களையும் தாங்கியபடி படங்கள் வந்தால் படம் வெளியாவதற்கு முன்பே அதற்கு தடை விதிப்பது, வெளிவராமல் செய்வது என்பது சமீப காலத்தில் அதிகம் நடந்து கொண்டிருக்கிறது.

கலைத்துறையில் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையில் இத்தகைய தலையீடுகள் நடப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இப்போது அடுத்த கட்டமாக சென்சார், நீதிமன்றம் தாண்டியும் கலைப்படைப்பில் இந்திய அரசின் நேரடித் தலையீடு நிச்சயம் ஆபத்தானது என்பதே திரைத்துறையில் இதற்கு எதிர்ப்பு கிளம்ப காரணம்.

தணிக்கை குழுவில் படத்துக்கு சான்று பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் தணிக்கை குழுவை தாண்டி, திரைப்பட தணிக்கை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை முன்பு படைப்பாளிகள் அணுகலாம். ஆனால், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தீர்ப்பாய சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் மாதம் இது கலைக்கப்பட்டதால் தணிக்கை குழுவில் பிரச்னைகளை சந்திக்கும் போது படக்குழு நேரடியாக நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்படும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இப்போது நேரடியாகவே மத்திய அரசு தலையிடும் வகையில் சட்டவரைவு கொண்டுவரப்படுவது திரைத்துறையில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைத்துறையில் கிளம்பிய அதிருப்தி

இந்த சட்டத் திருத்தத்துக்கு திரைத்துறையில் கடுமையான அதிருப்தி கிளம்பியுள்ளது. நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, நந்திதா தாஸ், இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களில் முக்கியமான சிலரின் பதிவுகள்:
நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக மட்டுமே இருக்கவேண்டும் என்பதாகவும், அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்வதற்கான இணைப்பையும் ட்வீட் செய்துள்ளார் அவர்.

இதேபோல, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டால் அது கலை சுதந்திரத்துக்கு விழும் மிகப்பெரிய அடியாக இருக்கும் என்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக