ஞாயிறு, 27 ஜூன், 2021

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் போலீஸார் மீது கூட்டுச் சதிப் பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்ய மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு

 .hindutamil.in  : cbi-refuses-to-file-charges-against-sathankulam-father-son-in-murder-case-cbi-appeals-to-hc
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி (கூட்டுச் சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீஸார் என 9 பேர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிந்து அவர்களைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது.



இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப். 25-ல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றச்சாட்டு பதிவின்போது ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேர் மீதும் இபிகோ 120 பி (கூட்டுச் சதி) பிரிவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீதும் 120 பி மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சிபிஐ ஏடிஎஸ்பி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், ''குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இந்தப் பிரிவுகளில் குற்றம் புரிந்தமைக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய குற்றப் பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யாததை விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இபிகோ 120 பி பிரிவிலும், மற்றவர்கள் மீது விடுபட்ட பிரிவுகளின் கீழும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதி குமார் சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கைத் தீர்ப்புக்காக நீதிபதி ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக