ஞாயிறு, 27 ஜூன், 2021

ம பொ சி இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே அரசியல் நடத்தினார் .. .. இவரா தமிழ் தேசிய தலைவர்?

May be an illustration of 1 person
May be an image of 1 person

வெற்றிச்செல்வன்  :    ..இவரா தமிழ்த் தேசியத் தலைவர் ….!!!!!
சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்டு வந்த வகுப்புவாரி இட ஒதுக்கீட்டால் தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றும்,
வகுப்புவாரி இட ஒதுக்கீடானது அரசியல் அமைப்புச்சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு (உறுப்புகள் 15 மற்றும் 29(2)) எதிரானது என்றும்,
 செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் (அவர் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பதும், விண்ணப்பித்ததாகப் பொய்ப் பிரமாணப் பத்திரம் (False Affidavit) தாக்கல் செய்திருந்தார் என்பதும் வேறு விஷயம்).
இந்த வழக்கில், வகுப்புவாரி இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் 27.07.1950 அன்று தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் பார்ப்பனர்களின்  சார்பாக வாதாடியவர் வேறு யாருமில்லை, அரசியலமைப்பு வரைவுக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்.
ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்பாக ஏற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமை,


உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் மறுக்கப்பட்டதைக் கண்டு கொதிப்புற்ற தமிழகம், தந்தை பெரியாரின் தலைமையில் கிளர்ந்தெழுந்தது.
தமிழகம் முழுவதும் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி மக்களை அணிதிரட்டினார் பெரியார். ‘விடுதலை’ நாளேட்டில் தொடர்ந்து இது தொடர்பாகக் கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதினார். திருச்சியில் 03.12.1950 அன்று வகுப்புரிமை மீட்பு மாநாடு கூட்டினார்.
இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் அரசு அரசியல் சட்டத்தைத் திருத்த ஒப்புக் கொண்டது. முதல் சட்டத் திருத்தமாக வகுப்புரிமைக்கு உத்தரவாதம் கொடுக்கும் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்தின்போது நடைபெற்ற விவாதங்களின்போது அப்போதைய பிரதமர் நேரு 29.05.1951 அன்று நாடாளுமன்றத்தில் பேசியதாவது:
“The House knows very well and there is no need for trying to hush it up, that this particular matter in this particular shape arose because of certain happenings in Madras. Because the Government of the State of Madras issued a G. O. by making certain reservations etc., for certain classes or certain communities – rather for all communities – and the High Court of Madras said that the G.O. was not in order, was against the spirit or letter of the Constitution etc.,”

(சென்னை மாகாணத்தில் நடந்த சில நிகழ்வுகளின் காரணமாக இப்பிரச்சனை எழுந்துள்ளது என்பதை இந்த அவை நன்கு அறியும்.
இட ஒதுக்கீட்டிற்காகச் சென்னை மாகாண அரசு கொண்டு வந்த அரசாணையைச் சென்னை உயர்நீதிமன்றம் செல்லாததாக்கியுள்ளது என்பதே அது) என்கிறார் நேரு.
முதல் சட்டத் திருத்தத்திற்கான காரணம் வகுப்புவாரி அரசாணையை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கும்,
அதில் கொடுக்கப்பட்ட தீர்ப்பும், அதன் பின்னர் நடைபெற்ற போராட்டங்களும். இதுதான் முதல் சட்டத் திருத்தத்திற்கான பின்னணி.
ஆனால், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதிய ம. பொ. சிவஞானம் இந்த நிகழ்வைப் பற்றிக் குறிப்பிடும்போது எழுதியுள்ள வரிகள் பின்வருமாறு:

“நாடு சுதந்திரம் பெற்ற பின், 1950-இல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை சென்னை மாகாண உயர்நீதிமன்றத்தில் அடிபட்டுவிட்டது.
அப்போதிருந்த காங்கிரஸ் ஆட்சி அதற்குப் புத்துயிரளிக்க முயன்றது. அதற்காக, அரசியல் சட்டத்தையே திருத்தியது பிராமணரான நேருஜியின் தலைமையைப் பெற்றிருந்த மத்திய அரசு.

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஓராண்டுக்குள்ளாக அதில் செய்யப்பட்ட முதல் திருத்தம் சென்னை மாகாணத்திற்கே உரிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பற்றியதுதான்.

ஆம்; ஜஸ்டிஸ் கட்சி கோரியதும், சென்னை மாகாண சுயேட்சை அமைச்சரவை செய்ததும் ‘கம்யூனல் ஜி.ஓ’ என்ற அளவிலேதான்! ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேதான் வகுப்புரிமை நீதி இந்திய அரசியல் சட்டத்தில் ஏறியது.

இதனால், இந்தியா முழுவதிலுமே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் நடைமுறைக்கு வரவும் வழி பிறந்தது” (விடுதலைப் போரில் தமிழகம், பக்கம் 572)
முதல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கான வரலாற்றுப் பின்னணியையோ, அதற்கான போராட்டங்களையோ ஒரு வரியில்கூடத் தெரிவிக்க மனமில்லாதது மட்டுமல்ல, வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு உரிமைக்குக் காங்கிரஸ் கட்சி புத்துயிரளிக்க முயன்றதாகவும், அதற்காக அரசியல் சட்டத்தையே திருத்தியதாகவும், அதற்குக் காரணம் பிராமணரான நேரு என்று சொல்லியிருப்பதும் எவ்வளவு பெரிய வரலாற்றுத் திரிபு.

இந்த  ம.பொ.சி.தான், இப்போது கிளம்பியிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகளால் “தமிழ்த் தேசியத் தலைவர்களுள்” ஒருவராகக் கொண்டாடப்படுகிறார்.

போராட்ட வரலாற்றைத் தெரிவிக்காததற்கான நியாயமான காரணங்கள் ம.பொ.சி-க்கு இருக்கின்றன. ஏனென்றால் இட ஒதுக்கீட்டு உரிமைக்காகத் தமிழகமே போராடிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில்தான் (1950-51) தமிழகம் முழுக்கத் திராவிட எதிர்ப்பு மாநாடுகளை அவர் நடத்திக் கொண்டிருந்தார்.

 1982-இல் வெளிவந்த மேற்கண்ட நூலின் வரிகள் (1995-இல் ம.பொ.சி. மறைந்தார்) ம.பொ.சி. அவர்களின் இந்திய தேசியச் சார்பு மனப்பான்மையையும், பார்ப்பனியப் பாசத்தையுமே காட்டுகிறது. சுதந்திரத் தமிழரசு அமைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழரசுக் கழகம் அமைத்த ‘ம.பொ.சி.-யின் தமிழகம்’ பின்னாளில் இந்திய தேசியத்திற்கு உட்பட்ட தமிழ்த் தேசியமாகச் சுருங்கி, அதன்பின்னர் மத வழித் தேசியமாகிப் போனது. பேராசிரியர் சுபவீ அவர்களின் வார்த்தையில் கூறுவதானால், ‘பார்ப்பனிய – இந்துப் பண்பாட்டை ஏற்றுக் கொண்ட இந்திய தேசியத்தின் ஒரு பகுதியாகத் தமிழகம்’ என்பது தமிழரசுக் கழகத்தின் கோட்பாடானது.

அதுமட்டுமன்று, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியவர் இறுதியில் தி.மு.க, அ.தி.மு.க. ஆட்சிகளில் மாறி மாறிப் பதவி அனுபவித்தது வரலாற்று முரண்.

ஆனால், சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ செல்லாத தந்தை பெரியாரால் இந்தியாவில் வசிக்கும் அனைத்து பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரி உரிமை வழங்கப்பட்டது. பெரியார் மக்கள் மனங்களில் நிறைந்து நிற்கிறார். ம.பொ.சி. யோ சிலைகளில் மட்டும் வாழ்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக