புதன், 30 ஜூன், 2021

சிவசங்கர் பாபாவை பள்ளிக்கு அழைத்துவந்து விசாரணை செய்தனர்

 மின்னம்பலம் : சிவசங்கர் பாபாவை கைதியாக பள்ளிக்கு வந்த போலீசார்!
பள்ளி மாணவிகளை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் சிவசங்கர் பாபாவை முதன்முறையாக கைதியாக அவரது சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்றது போலீஸ்.
சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா ஜூன் 26 ஆம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிசிஐடி போலீஸார் வழக்கு நடக்கும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இதை விசாரித்த நீதிபதி சிவசங்கரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜூன் 28 ஆம் தேதி அனுமதி அளித்தார். இதையடுத்து சிவசங்கரை நேற்று (ஜூன் 29) காலை 11.30மணியளவில் அவரது சுஷில் ஹரி பள்ளிக்கே அழைத்துச் சென்றனர் போலீஸார்.



ஒவ்வொரு முறையும் பாபா அந்த பள்ளிக்கு வரும்போதும் பூஜையும் ஆரவார வரவேற்பும் சிவசங்கர் பாபாவுக்கு கிடைத்து வந்த நிலையில், நேற்று முதன் முறையாக கைதியாக மிகவும் சோர்ந்த நிலையில் தன் பள்ளிக்கு போலீஸ் புடைசூழ வந்தார் பாபா.

மாணவிகளை தனது சொகுசு அறையில் வைத்து பாபா துன்புறுத்தியதாக புகார்கள் அதிகமாக வந்திருக்கும் நிலையில், அந்த அறைக்கே பாபாவை அழைத்துச் சென்று விசாரணை செய்தனர் போலீஸார். பொதுவாக குற்றம் நடந்த இடத்துக்கு குற்றம் சாட்டப்பட்டவரை அழைத்துச் சென்று விசாரிப்பது போலீஸ் விசாரணையின் வழக்கமான ஒன்று. ஆனால் இம்முறை பாபாவை கைதியாக பார்த்து பள்ளி ஊழியர்கள், பக்தர்கள் சிலர் கூடி குரல் எழுப்பினார்கள்.

இரண்டு மணி நேரம் சிவசங்கர் பாபாவை பள்ளியில் அவரது சொகுசு அறை, பிரார்த்தனை மண்டபம், கணினி ஆய்வகம் என ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்துள்ளனர். அதன் பின் மீண்டும் அவரை சென்னை சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக