புதன், 30 ஜூன், 2021

ஹாலிவுட்டில் ஒரு தமிழ்ப் பெண்!

May be an image of 1 person and text
Never Have I Ever - Netflix - Home | Facebook

.hindutamil.in -அ.முத்துலிங்கம்  : சரியாக நாலு வருடங்களுக்கு முன்னர், ரொறொன்ரோவில் ஓர் ஏப்ரல் மாதம் அந்தச் சிறுமி தன் தாயாருடன் என் வீட்டுக்கு வந்தார்.
அப்பொழுது நாங்கள் தீவிரமாக ஹாவார்டு தமிழ் இருக்கைக்காக பணம் சேகரித்துக் கொண்டிருந்தோம். அதற்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்தார்.
சிறுமிக்கு வயது 14. கருப்பு டீசேர்ட்டுக்கு மேலே எளிமையான சாம்பல் மேலாடை. பல்லுக்கூடு மின்னியது; அவருடைய கூரான கண்களும் மின்னின. சிறுமியின் தமிழ்ப் பற்றும், ஆர்வமும் என்னை அப்போதே ஆச்சரியப்படுத்தின.
புறப்பட்டபோது நான் சொன்னேன். ’நீங்கள் வந்தபோது வசந்தம் உள்ளே வந்தது. அதை இங்கேயே விட்டுவிட்டுப் போனால் நல்லாயிருக்கும்.’ ஒரு கணம்கூட நேரம் எடுக்காமல் சிறுமி ‘யோசிப்போம்’ என்றுவிட்டு துள்ளி மறைந்தார்.
இன்று அவருக்கு வயது 18; பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன். உலக நடிகையாகிவிட்டார்.
உலகின் பல பாகங்களிலிருந்து அவருக்கு புகழ் மாலைகள் வந்து குவிகின்றன. சமீபத்தில், புகழ் பெற்ற நடிகையும், எழுத்தாளருமான Mindy Kaling இன் உருவாக்கத்தில் வெளிவந்த Netflix தொடரான Never Have I Ever படத்தை ஓர் இரவில் நானும் மனைவியும் பார்த்து முடித்தோம். இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் தோன்றிய மைத்திரேயியின் நடிப்பு எங்களை பிரமிக்க வைத்தது. கனடாவில் அவர் படித்த உயர்நிலைப் பள்ளியில் பல நாடகங்களில் நடித்தும், சிலவற்றை எழுதி இயக்கியுமிருந்தார். ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவருடைய பெற்றோர் கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். முறையாக நடிப்பு பயிற்சி பெறாத ஒருவரால் எப்படி இத்தனை சிறப்பாக நடிக்க முடிந்தது என்பதுதான் ஆச்சரியம்.



மைத்திரேயியை வாழ்த்தலாம் என தொடர்புகொள்ள முயற்சித்தேன். முடியவில்லை. இவருக்கு பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரை நெட்ஃபிளிக்ஸ் நியமித்திருந்தது. டெலிபோனில் அழைத்தபோது மெசின் குரல் பதில் சொன்னது. ஓன்றுக்குப் பின் ஒன்றாக ஆறு கடிதங்கள் எழுதியும் நேர்காணலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. திருப்பித் திருப்பி என்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. இப்படியான சமயங்களில் கடைசித் தீக்குச்சி ஒன்று என்னிடம் இருக்கும். அதைப் பயன்படுத்தியதில் ஒருவாறு கதவு திறந்தது.

குறித்த தேதி, குறித்த நேரத்தில் தொடர்பு கிடைத்தது. மைத்திரேயியின் குரலில் அதே இனிமையும் பண்பும். அவருடைய நடிப்புக்கு பாராட்டு தெரிவித்தேன். நன்றி என்றார். சில கேள்விகள் கேட்கப் போகிறேன், உங்களுக்கு சம்மதமானால் பதில் சொல்லுங்கள். ஏதாவது கேள்விக்கு பதில் கூறுவது அசௌகரியமாகத் தோன்றினால் நீங்கள் தவிர்க்கலாம் என்றேன். சரி என்றார்.


நீங்கள் கனடாவில் படிக்கும் உயர்நிலைப்பள்ளி மாணவி. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கப்போகும் இளம் நடிகை தேர்வுக்கு விண்ணப்பிக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
என்னுடைய சிநேகிதி ஒருத்தி விண்ணப்பம் அனுப்பினார். என்னையும் அனுப்பச் சொல்லி வற்புறுத்தினார். நானும் சும்மா அனுப்பிவைத்தேன்.

15,000 மாணவிகள் விண்ணப்பித்ததாக அறிகிறேன். இதிலே நீங்கள் எப்படித் தேர்வாகினீர்கள்?

எனக்கு இதில் நம்பிக்கையே கிடையாது. எல்லாவற்றையும் விளையாட்டுத் தனமாக எடுத்துக்கொண்டேன். அவர்கள் முதலில் ஓர் எழுத்துப் பிரதியை அனுப்பி அதில் ஒரு பாத்திரத்தை தேர்வுசெய்து, வசனத்தை பேசி நடித்து, வீடியோவாகப் பதிவு செய்து அனுப்பச் சொன்னார்கள். அனுப்பினேன். பின்னர் மறந்துபோனேன். இன்னொரு பிரதி வந்தது. அதையும் நடித்து வீடியோவாக அனுப்பிவைத்தேன். இன்னொன்று வந்தது. இப்படி ஆறு பிரதிகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்துசேர்ந்தன. எல்லாவற்றையும் நடித்து அனுப்பினேன்.

எனக்குத் தெரியாது ஒவ்வொரு சுற்றிலும் 1000, 2000 பேர்கள் நீக்கப்பட்டார்கள் என்று. இறுதிச் சுற்றிலும் தேர்வாகி என்னை லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நேர்முகத்தேர்வுக்கு வரச்சொன்னார்கள். நானும் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றுமில்லாமல் போய் கலந்துகொண்டேன். எனக்குத் தெரியும் இறுதித் தேர்வில் என்னுடன் பலர் போட்டியிட்டார்கள் என்று. ஆனால் நான் ஒருவரையும் சந்தித்தது கிடையாது. ஒரு பிரதியை கொடுத்து காமிரா முன் நடிக்கச் சொன்னார்கள். எனக்கு பயமாக இருக்க வேண்டும், ஆனால் உவகை என்னை நிறைத்தது. நடித்துக் கொடுத்தேன். பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் நடித்தேன். எல்லாம் முடிந்த பின்னர் சரி என்று தொலைபேசியில் முடிவை கூறுவதாகச் சொல்லி என்னை திருப்பி அனுப்பினார்கள்.

பின்னர் என்ன நடந்தது?

நான் நினைத்தேன் அவர்கள் செலவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைப் பார்த்துவிட்டேன். பெறுபேறு எப்படியிருந்தாலும் எனக்கு ஒன்றுமே இல்லை. நான் இறகுமேல் பறந்து கொண்டிருந்தேன். என் உடம்பை மகிழ்ச்சி நிரப்பியிருந்தது. கனடா திரும்பி என் வாழ்க்கை வழக்கம்போல ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் நான் குடும்ப அறையில் அமர்ந்து புத்தகம் படித்தேன். என் அம்மாவும் ஏதோ வசித்தார். அப்பாவும் அங்கே இருந்தார். தொலைபேசி அடித்தது. அதை எடுத்து காதில் வைத்து அவர்கள் சொன்ன வார்த்தைகளை கேட்டேன். ’அவர்களுக்கு பைத்தியம். அவர்களுக்கு பைத்தியம்’ என்று நான் கத்தினேன். என் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தைகள் அவைதான். என் வீட்டில் எல்லோரும் துள்ளிக் குதித்தார்கள். ஆடினார்கள், பாடினார்கள். என் தேர்வை அப்படி குடும்பம் கும்மாளமிட்டு கொண்டாடியது.

நீண்ட நீண்ட வசனங்கள் பேசும் காட்சிகள் எல்லாம் வந்தனவே. அவற்றையெல்லாம் எப்படி கையாண்டீர்கள்?

படப்பிடிப்பு என்பது மேல்நிலைப்பள்ளி வகுப்பறை போலத்தான். பெரிய வித்தியாசம் இல்லை. முதல் நாள், அடுத்தநாள் நடக்கப் போகும் படப்பிடிப்புக்கான பிரதியை தந்துவிடுவார்கள். படப்பிடிப்பு சரியாக காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். இரவிரவாக உட்கார்ந்து நான் என் பங்கு வசனங்களை மனப்பாடம் செய்வேன். காமிரா முன் நிற்பது எனக்கு பிரச்சினையே அல்ல. சில வேளை காட்சி ஒரு படப்பிடிப்பிலேயே அமைந்துவிடும். 25 தடவைகள் ஒரே காட்சியை திருப்பி திருப்பி எடுத்ததும் நடந்திருக்கிறது. காட்சி தானாக அமையட்டும் என இயக்குநர் பொறுமையுடன் காத்திருப்பார். ஓரொரு சமயம் இப்படியும் செய்யலாம் என்று சொல்லுவார். இன்னொரு சமயம் இப்படி நகர்ந்தால் நல்லாயிருக்கும் என்பார். காட்சி திருப்தியாக அமையும் வரைக்கும் படப்பிடிப்பு தொடரும்.

நீண்ட வசனங்கள் பேசி நடித்ததில் உங்களுக்கு சிரமமே கிடையாதா?

அது எப்படி? இது பள்ளிக்கூடப் பாடம் என்று நினைத்துக் கொள்வேன். மூன்றாவது, நாளாவது நாள் எல்லாம் பழகிவிடும். You have to train your brain. மூளையை பழக்கவேண்டும்.

நாலு மாதம் தொடர்ந்து ஒரு கட்டுப்பாட்டுடன், கடினமான பள்ளிக்கூடத்துப் பாடத்தை கற்றுத் தேர்வது போல கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். ஒரு நாளாவது ’இது போதும்’ என்று விரக்தி அடைந்தது இல்லையா?

இப்படியான சந்தர்ப்பத்துக்கு நான் தவமல்லவா கிடந்தேன். ஒவ்வொரு நாளும் ஒரு புது மகிழ்ச்சி என்னை ஆட்கொள்ளும். ஏதாவது புதிய விசயம் கற்கும்போது அது பிரமிப்பூட்டும். இவை எல்லாம் எனக்கு இலவசமாக கிடைக்கின்றன என்பதும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கும். எந்தக் கடினமான காட்சி என்றாலும் அதை திருப்தியாக நடித்து முடிக்கும்போது கிடைக்கும் பரவசத்துக்கு அளவே இல்லை. அடுத்த நாள் படப் பிடிப்பை நினைக்கும்போது மனது துள்ளத் தொடங்கிவிடும்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? நடிப்பா அல்லது படிப்பா?

நடிப்பு என் மனதுக்கு கிட்டவாக இருக்கிறது. நடிக்கும்போது நான் என்னைப் பூரணமாக கண்டுகொள்வதாக உணர்கிறேன். ஆனால் என் படிப்பை எப்படியும் தொடர்ந்து முடிப்பேன். எவ்வளவு அனுபவம் இருந்தாலும் படிப்பை ஈடுகட்ட அது போதாது. நான் பள்ளிக்கூடத்தில் எப்பவும் முதல் நிலையில் இருந்தேன். பியானோ பழகினேன்; பாடக்கூடச் செய்தேன். எந்தவிதமான தடங்கலையும் மீறி ஓர் இளநிலை பட்டம் பெற்றுவிடுவேன். Knowledge is power. அறிவுதான் ஆட்சி.

Never Have I Ever இரண்டாம் பாகம் இருக்கிறதா? மக்கள் பெரிய எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்களே?

தெரியவில்லை. இருந்தால், அவர்கள் என்னை மறுபடியும் தேர்வு செய்தால், நடிப்பேன்.

நீங்கள் கனடிய தமிழ்ப் பெண். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள். ஆனால் நீங்கள் நடித்தது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய தமிழ்த் தம்பதிகளின் மகள் பாத்திரம். அதற்கு தக்கவாறு நடிப்பை அமைப்பதில் உங்களுக்கு பிரச்சினை இருந்ததா?

அதுதானே நடிப்பு. இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடிப்பதில் என்ன சிறப்பு. பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உச்சரிப்பு கொஞ்சம் வேறுபடும். நடை, உடை பாவனையில் சின்ன மாற்றம். அவ்வளவுதான்.

இந்தக் கதை ஓர் அமெரிக்க இந்தியத் தமிழ்ப்பெண், வெள்ளைக்காரர்கள் படிக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் தன்னை நிரூபிக்க பாடுபடுவதை சொல்கிறது. அந்தப் பெண்ணுக்கு தாயாருடன் பிரச்சினை; நண்பர்களுடன் பிரச்சினை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பொய்க்கு மேல் பொய் சொல்கிறாள்.

உங்கள் உண்மை வாழ்க்கை இந்தப் பாத்திரத்திலிருந்து பெரிதாக மாறுபடுகிறதா?

நான் நீதிக்காகவும், சம உரிமைக்காகவும் போராடும், கல்விக்கு முதலிடம் கொடுக்கும் பெண். அந்த வகையில் என் வாழ்க்கையுடன் பாத்திரம் ஒத்துப் போகிறது. பொய் பேசுவதும், பெற்றோரிடம் சண்டை போடுவதும், பையனுக்காக அலைவதும் என் வாழ்க்கையில் இல்லை.

ஒரு காட்சி எல்லோரையும் அழவைத்தது. கடலிலே உங்கள் தகப்பனின் அஸ்தியை கரைக்கும் இடம். அதற்கு எப்படித் தயாரானீர்கள்?

நான் கனடிய தமிழ்ப் பெண். எனக்கு உறவினர்கள் அமெரிக்காவிலும், கனடாவிலும், ஜேர்மனியிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ளனர். நான் நிறைய சாவுகளை கண்டிருக்கிறேன். சாவை எதிர்கொள்வதில் ஒரு குடும்பத்துக்கு உள்ள சங்கடம் எனக்குத் தெரியும். சாம்பலை கடலில் கரைத்து என் அப்பாவுக்கு விடுதலை கொடுத்தேன். அவர் என்னை விட்டு பிரிந்த கோபத்தை ஆற்ற எனக்கு ஒரு வழி கிடைத்தது. அவர் இயற்கையோடு கலந்த அந்த நேரம் எனக்கு இயல்பாகவே அழுகை வந்தது.

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் முதன்முறை என் வீட்டுக்கு வந்தபோது ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி சேர்த்துக் கொண்டிருந்தோம். அது வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. இப்பொழுது அதேபோல ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் வேலை நடக்கிறது. நிதியும் கணிசமான அளவு சேகரித்தாகிவிட்டது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிக்க மகிழ்ச்சி. தமிழ் உன்னதமான மொழி. அதற்கு தமிழ் இருக்கை எங்கள் சொந்த பல்கலைக்கழகத்தில் அமைய இருப்பது எத்தனை பெருமையான விசயம். வாழ்த்துக்கள்.

உங்களுக்கு உலகத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை எங்குமே ரசிகர் பட்டாளம். அவர்களுக்கு ஏதாவது அறிவுரை உள்ளதா?

அறிவுரையா? அந்தளவுக்கு தகுதி ஒன்றும் கிடையாது. வாழ்க்கை ஒருமுறைதான். உங்கள் மனது தெரிவு செய்வதை செய்யுங்கள். உங்களுக்குள் பூட்டிக் கிடப்பதை வெளியே வர அனுமதியுங்கள். எத்தனை கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு களைப்பே தெரியாது. மகிழ்ச்சியால் உங்கள் உள்ளம் என்றென்றும் குளிர்ந்தபடி இருக்கும்.

நாலு வருடங்களுக்கு முன்னர் பேசியதுபோலவே இப்பவும் மைத்திரேயி புத்திக்கூர்மையுடன் உடனுக்குடன் பதில் சொல்கிறார். சமீபத்து பேட்டியில் ஒருவர் கேட்டார். ’நீங்கள் இரவு நேரம் அந்த ஓநாயை சந்திக்க அவ்வளவு கிட்டத்தில் போனீர்களே, ஆபத்தல்லவா?’ மைத்திரேயியின் பதிலுரை சட்டென்று வெளிப்பட்டது. ’கிட்டவா? இல்லை, ஆறு அடி தூரம் இருந்ததே!’ என்று கொரோனாவை மனதில் வைத்து சாமர்த்தியமாகப் பேசினார்.

புலம்பெயர்ந்தவர்களில் அநேகர் தமிழ்ப் பெயரை விரும்புவதில்லை. எப்படியோ அதை சிதைத்து விடுவார்கள். தமிழ் என்ற அடையாளத்தை அழித்துவிடுவதில் குறியாக இருப்பார்கள். வேலாயுதன் என்பவர் தன் பெயரை Velay Don என மாற்றிவிடுவார். ராகவன் என்பவர் தன் பெயரை Ra.Ghavan என எழுதுவதையும் காணலாம். இந்த Netflix தொடரில் மைத்திரேயி நடிக்கத் தொடங்கியபோது பலர் அவருடைய நீண்ட பெயரை சுருக்கி விடச்சொன்னார்கள். இன்னும் சிலர் இலகுவான பெயராக மாற்றச் சொல்லி ஆலோசனை கூறினர். இந்தப் படத்தை உருவாக்கியவரின் பெயர் Mindy Kaling. அவருடைய உண்மையான பெயர் சொக்கலிங்கம். அதைத்தான் முன்னுக்கும் பின்னுக்கும் வெட்டி Kaling என மாற்றி தனது தமிழ் அடையாளத்தை மறைத்திருந்தார். ஆனால் மைத்திரேயி தன் பெயரை எந்தக் காரணம் கொண்டும் மறைப்பதாக இல்லை. ‘நான் ஏன் மாற்ற வேண்டும். இது என் பெற்றோர் இட்ட பெயர். இது என் அடையாளம். இந்த நீண்ட தமிழ் பெயரில் நான் பெருமை அடைகிறேன்.’
எத்தனையோ நடிகைகள் வருவார்கள், போவார்கள். உலக மேடையில் தமிழை பெருமையுடன் நிறுத்தக்கூடிய நடிகைகள் கிடைப்பார்களா? அதுதான் மைத்திரேயி ராமகிருஷ்ணனின் பெருமை.

பேட்டியாளர், கனடா வாழ் தமிழ் எழுத்தாளர், தமிழறிஞர்.

தொடர்புக்கு: amuttu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக