nakkeeran :தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல்
நடந்துமுடிந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப்
பதவியேற்றுக் கொண்டார். வெளியான தேர்தல் முடிவுகளின் பின் கடந்த 10
ஆண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எதிர்க்கட்சியாக தன்னை
நிலைநிறுத்தியது. இன்று மாலை அதிமுக எம்.எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரின்
வாக்குவாதத்தோடே கூட்டம் தொடங்கியது..... இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள்
கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாமல் கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் உடன் மீண்டும்
ஆலோசனை நடத்த இருப்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. பலம்வாய்ந்த
எதிர்க்கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ''திமுகவை விட 3 சதவீதம் குறைவான வாக்குகள்
தான் பெற்றுள்ளோம். அதிமுகவின் வாக்கு வங்கி சரிவு அடையவில்லை. வாழ்த்துத்
தெரிவிக்கும் கூட்டம் மட்டுமே இன்று நடைபெற்றது'' என ஜெயக்குமார்
தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எப்படி
விட்டுத் தருவது என ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள்
வெளியானது. தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்தது
யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம் எப்படி
விட்டுக் கொடுப்பது என்று இபிஎஸ் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் எத்தனை முறை விட்டுத் தருவது என ஓபிஎஸ்க்கு ஆதரவாகக் கடம்பூர் ராஜு
பேசியதாகவும் கூறப்படுகிறது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு
அறிவித்ததால்தான் தென்மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என ஓபிஎஸ்
பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா
நினைவிடத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மலரஞ்சலி செலுத்த இருதரப்பினரும்
வாக்குவாதத்துடனே கலைந்து சென்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக