சனி, 8 மே, 2021

சபாநாயகர் – எம்.அப்பாவு! துணை சபாநாயகர் - கு.பிச்சாண்டி!

சபாநாயகர் – எம்.அப்பாவு… துணை சபாநாயகர்- கு.பிச்சாண்டி!! | Malaimurasu
malaiamurasu : ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சபாநாயகராக  அப்பாவு நியமிக்கப்படவுள்ளார். துணை சபாநாயகர் பொறுப்பில் கு.பிச்சாண்டி அமர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. >தென்மாவட்டங்களில் முக்கியத்துவம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இந்த முறை அமைச்சர்கள் நியமிக்கப்படாதது குறித்து மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. மதுரைக்கு பிறகு தென்மாவட்டங்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக திருநெல்வேலி கருதப்படுகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் இந்த மாவட்டத்திலிருந்து ஒருவருக்கு அமைச்சர் பதவி கண்டிப்பாக கிடைக்கும். எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் சரி.. அமைச்சர் பதவி மிஸ் ஆகாது.

கடந்த 2006ல் கருணாநிதி அமைச்சரவையில் மைதீன்கான், பூங்கோதை ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதற்கு முன் 1996ல் ஆலடி அருணா இடம் பிடித்திருந்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையிலும் இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றிருந்தனர். கடந்த 2006-இல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவுடையப்பன் சபாநாயகராகப் பதவியேற்றார்.

ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அப்பாவு, வகாப் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலும் சபாநாயகராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட துரைமுருகன், சக்கரபாணி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வயது மூப்பினை காரணம் காட்டி அப்பாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில், அவருக்கே சபாநாயகர் பதவி என்ற தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், கீழ் பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற கு.பிச்சாண்டிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்காதது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியது. அவர் கடந்த 1989, 1996, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிக்கண்டவர்.

தற்போது இவருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் மேலும் சில விரிவாக்கம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக