வெள்ளி, 28 மே, 2021

நடிகை சாந்தினியை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! 5 ஆண்டுகள் குடும்பம் . அப்புறம் கிரேட் எஸ்கேப் . பொதுவெளிக்கு வந்த மாண்பு

minnambalam : சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, ஏமாற்றிவிட்டு, தற்போது கொலை மிரட்டல் விடுக்கிறார் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்துள்ளார்.

இன்று (மே 28) அவர் அளித்த புகாரில், “நான் மலேசியா குடியுரிமை பெற்ற திருமணமாகாத பெண். சென்னையில் 2017ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். நான், மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்த போது அடிக்கடி என் பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம். கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழக தொழில் நுட்பத்துறை முன்னாள் அமைச்சரும், முன்னாள் ராமநாதபுர சட்டமன்ற உறுப்பினருமான மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சித் துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்குத் தெரிந்த நண்பர் பரணி என்பவர் மூலம் என்னிடம் கூறினார். அதனால் நான் அமைச்சரின் இல்லத்தில் 3.5.2017-ல் நேரில் மணிகண்டனைச் சந்தித்தேன்.

அன்றைய தினம் சுற்றுலாத் துறை சம்பந்தமாக என்னிடம் பேசிய மணிகண்டன், மலேசியாவில் தொழில் முதலீடு செய்யப் போவதாகவும் அந்த தொழில் முதலீடு சம்பந்தமாக நாம் இருவரும் கலந்து பேச வேண்டும். போன் செய்தால் எடுத்துப் பேசுமாறு என்னிடம் கூறி அனுப்பினார்.

அன்றைய தினம் மாலையில் எனக்கு அமைச்சர் மணிகண்டன் போனில் பேசினார். ஓரிரு தினங்களில் என்னிடம் தனிப்பட்ட முறையில் அமைச்சர் மணிகண்டன் பேச ஆரம்பித்தார்.

நான் அழகாக இருப்பதாகவும், , அவருக்கு என்னைப் பிடித்துவிட்டதாகவும், ஒரு கட்டத்தில் திருமணம்  செய்துகொள்வதாகவும் என்னிடம் கூறினார்.  மேலும் அவர் குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றும் மனைவி ஒரு கொடுமைக்காரி என்றும் உன்னைப் போன்ற ஒரு அழகான பெண் என் இல்லற வாழ்வில் இருந்தால் என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும் என்றார்.

நாளடைவில் காதலிப்பதாகக் கூறினார். அவரது காதலை மறுத்ததால்  சட்டப்படி திருமணம் செய்துகொள்ளுமாறு உறுதி அளித்தார். அவர் என்னைத் திருமணம் செய்துகொள்வார் என்ற நம்பிக்கையில் இருவரும் கணவன் மனைவியாக, ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தோம்.

சென்னையில் அவர் இருந்தால் இரவில் என்னுடன்தான் தங்குவார். நான் எங்கு வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் அமைச்சருடைய வாகனத்தைத்தான் (TN 65, AL 4777)  பயன்படுத்துவேன். அவருடைய ஓட்டுநர் ராம்குமார்தான் எனக்கும் ஓட்டுநராக இருந்தார்.

நான் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள அனைவருக்கும் நான் அவருடன் சேர்ந்து வாழ்ந்தது தெரியும். நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து கணவன் மனைவியாக ராமேஸ்வரம்,பாண்டிச்சேரி, திருநெல்வேலி, டெல்லி தமிழ்நாடு இல்லம் எனப் பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளோம்.

 2019ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் அவரை  முறைப்படி திருமணம் செய்ய வற்புறுத்தியபோது மணிகண்டன், அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு என்னை  திருமணம் செய்வதாக கூறிவந்தார். அதுவரை நாம் இந்த வீட்டில் கணவன் மனைவியாக வாழலாம் என்று கூறினார்.

நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தது அவருடைய வீட்டில் வேலை செய்தவர்களுக்கு எல்லாம் தெரியும். அவர் என் வீட்டுக்கு வந்து தங்கிச் சென்ற ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது.

மேலும் நாங்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பலனாக நான் மூன்று முறை கருவுற்றேன். நான் கருவுற்ற மூன்று முறையும் நான் உன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிறகு நாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று என்னை மூளைச்சலவை செய்தார். பிறகு மூன்று முறையும் அவருடைய நெருங்கிய நண்பரின் கோபாலபுரத்தில் உள்ள மருத்துவமனையில் என்னைக் கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு செய்ய வைத்தார்.

2019ஆம் ஆண்டு மூன்றாம் முறை கருவுற்றபோது, அவர் அமைச்சர் இல்ல வீட்டுக்குச் சென்று திருமணம் செய்ய வற்புறுத்தி என் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த சம்பவம் குறித்து அவருடைய காவலர் மணி நன்கு அறிவார்.

2019ம் ஆண்டுக்குப் பின் கருத்தடுப்பு உறையைக் கையாளச் செய்து என்னிடம் காப்பர்டியை போட வலியுறுத்தி என்னிடம் சந்தோஷமாக இருந்து வந்ததால் நான் பலமுறை உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளேன்.

எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் கூட என்னைப் பலவந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். நான் என் வருங்கால கணவர் என்ற முறையில் அனைத்து கொடுமைகளையும் சகித்துக் கொண்டேன். இந்நிலையில் என்னைத் திருமணம் செய்ய வேண்டி 2019ஆம் ஆண்டு அவரிடம் கேட்டபோது இரண்டு முறை அடித்து என் கண்களைச் சேதப்படுத்தினார். அதற்கு மருத்துவனிற்குச் சென்று நான் சிகிச்சை பெற்றேன்.

 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னைத் திருமணம் செய்வதாகக் கூறினார். அந்தச் சமயம் கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் ஊரடங்கு போட்டதால் அவர் அவருடைய சொந்த ஊர் சென்று திரும்பி சென்னைக்கு வரமுடியவில்லை என்ற காரணத்தை என்னிடம் கூறினார். நானும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உடல்நிலை சரியில்லாத என் தாய், தந்தையரைப் பார்க்க மலேசியா சென்று டிசம்பர் மாதம் மீண்டும் தமிழகம் வந்தேன். நான் திரும்பி வந்தவுடன் வீட்டிற்கு வந்து மணிகண்டன் சமாதானம் செய்தார். பிறகு 2021ஆம் ஆண்டு வருடம் எப்படியும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மீண்டும் என்னுடன் வாழ்ந்து வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை என்னுடன் வாழ்ந்து வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவருடைய சொந்த ஊருக்கு சென்ற பிறகு திடீரென என்னை மிரட்ட ஆரம்பித்தார். நான் ஏன் இவ்வாறு திடீரென்று மிரட்டுகிறீர்கள் என்று கேட்டபோது, ”ஒழுங்காக நீ உன் சொந்த நாட்டிற்கு சென்றுவிடு இல்லையென்றால் உனக்கு தெரியாமல் எடுத்த அனைத்து அரை நிர்வாண படங்களையும் சமூக வலைதளம் மற்றும் இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன்” என்று கூறினார்.

பிறகு நான் குளிக்கும் போது எனக்குத் தெரியாமல் எடுத்த ஆடையில்லாத ஒரு புகைப்படத்தை எனக்கு டெலிகிராம் மூலம் அனுப்பினார். உடனே நான் அந்த புகைப்படத்தை டெலிட் செய்ய வற்புறுத்தினேன். மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நான் அந்த புகைப்படத்தை ஸ்கீரின் ஸாட் எடுத்து வைத்துள்ளேன். தொடர்ந்து அவரை தொலைப்பேசியில் அழைத்தபோது என் தொலைபேசி எண்ணை எடுக்காமல் பரணி என்பவர் மூலம் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும் என்னை அவதூறாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பினார். என் மீது வழக்குப் போடுவதாகவும் எனக்குத் தெரியாமல் என்னிடம் இருந்து எடுத்த காசோலை ஒன்று அவரிடம் இருப்பதாகவும் அதை வைத்து என் மீது மோசடி வழக்குப் பதிவு செய்வதாகவும், அதுமட்டுமின்றி அவரது அரசியல் செல்வாக்கை வைத்து பல வழக்குகளைப் போட்டு என் வாழ்க்கையைச் சீரழித்துவிடுவதாகவும் மிரட்டினார்.  முரடர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

எனவே, 5 வருடமாக என்னை ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு, கட்டாய கருக்கலைப்பு செய்து என்னை ஏமாற்றிய மணி கண்டன் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த பரணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அவர் ஒரு அமைச்சராக இருந்தவர், அதுமட்டுமின்றி மருத்துவர் என்பதால் ஏமாற்றமாட்டார் என்று நம்பினேன். அவர் சென்ற இடத்திற்கெல்லாம் எனச் சென்றிருக்கிறேன்.  நாளடைவில் என்னைத் துன்புறுத்த ஆரம்பித்தார். கருவுறாமல் இருப்பதற்குப் பல மாத்திரைகளைக் கொடுத்தார். இடையில் அவரது பதவி போனதாலும், தேர்தலில் சீட் கொடுக்காததாலும்  மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து காவல்துறை என் கையில் இருப்பதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார். நீ என்ன சொன்னாலும் உன்னை நம்பமாட்டார்கள்.  இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பு கூட எனக்கு கால் செய்தார். ஆனால் என் வழக்கறிஞரின் அறிவுறுத்தலால் நான் அவரது போனை எடுக்கவில்லை.

3 வாரத்துக்கு முன்புதான் எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்து தெரிவித்தேன். எனக்கே தெரியாமல், என்னை ஆபாசமாக எடுத்த போட்டோவை அனுப்பி மிரட்டினார்.

இந்நிலையில் தான் அவர் குறித்து புகார் கொடுத்தேன். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நீதி வேண்டும். எனது  புகைப்படங்களை அவரது மொபைலில் இருந்து அழிக்க வேண்டும்” என்றார்.

அப்போது, மணிகண்டன் அடித்துத் துன்புறுத்தும் போதே ஏன் புகார் கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு, “அப்போது அவர் அமைச்சராக இருந்தார்.  அதிமுக ஆட்சி, அதிகார வர்க்கம் மணிகண்டனுக்குச் சாதகமாக இருந்தது. அதனால் என்னால் சட்டரீதியாக எதுவும் செய்ய இயலவில்லை. அதுமட்டுமின்றி எதாவது பிரச்சினை வந்தால் காலில் விழுந்து சமரசம் செய்வார்.  எல்லா வீட்டிலும் நடக்கிற ஒரு பிரச்சினையாகக் கருதி நான் இருந்துவிட்டேன். என்னால் அவருக்குப் பிரச்சினை வரலாம் என்பதால் தற்போது எனக்கும் எனது குடும்பத்துக்கும் மிரட்டல் விடுகிறார். எனவே அவர் மீது புகார் கொடுத்தேன்” என்று கூறினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக