செவ்வாய், 4 மே, 2021

6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

maalaimalar : சென்னை:    கொரோனா பரவலின் 2-வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதேபோல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

கொரோனா பரவலை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தினார். தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வருகிற 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

வருகிற 6-ந் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-

* அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், தனியார் பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.* 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இந்த மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்த தடையுமின்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். டீ கடைகள் பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள், டீ கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

* ஏற்கனவே, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

* அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமானநிலையம், ரெயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.

* பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்த நிறுவனங்களில் இரவு நேர பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

* தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், இரவு நேர பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* கிடங்குகளில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* இரவு நேர ஊரடங்கின் போதும், ஞாயிற்றுக்கிழமைகளில் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போதும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

* அத்தியாவசியப் பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது (ஞாயிற்றுக்கிழமை) அனுமதிக்கப்படும்.

* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, சோமட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

* மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.

* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

* தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

* முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும், திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும், அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையும் இல்லை.

* ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, எந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

* ஏற்கனவே ஆணையிட்டவாறு சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6 மணி முதல் 12 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அரசு கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக