செவ்வாய், 4 மே, 2021

நாக்கை அறுத்து கொண்ட பெண்! திரு.ஸ்டாலின் : இது போன்ற செயல்களை செய்து துயரத்தை உண்டாக்க வேண்டாம் உங்களின் புன்னகையே நமது தேவை துயரம் அல்ல

minnambalam :"நாக்கை அறுத்துக் கொண்ட பெண்: நடுங்கிய ஸ்டாலின்" தொண்டர் ஒருவர் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய சம்பவம் தன்னை வருத்தமடைய செய்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா(32). இவர், சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதல்வரானால், தனது நாக்கை அறுத்து உண்டியலில் போடுவதாக வேண்டுதல் செய்துள்ளார். அதன்படி, திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. வனிதா, பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் நாக்கை துண்டித்து காணிக்கை செலுத்தியுள்ளார். இதையடுத்து வனிதா பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா என்கிற திமுக தொண்டர், தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக தன் நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்தியது குறித்து செய்தித்தாள்களில் படித்து நடுக்கமுற்றேன்.

தமிழக மக்கள் ஒரு துளி இரத்தம்கூட சிந்தாமல் மகிழ்ச்சியாகவும், மன நிறைவாகவும், மனித நேயத்துடனும் செழிப்பாக வாழ வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான் இந்தத் தேர்தலில் நாம் வாக்குறுதிகளை முன்வைத்தோம். நாம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சகோதரி ஒருவர் தன் நாக்கை இழந்திருப்பதை பற்றிக் கேள்விப்படும்போது விழிகள் குளமாகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக் கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னையே சிதைப்பதாக எண்ணி எனக்கு மனக்காயம் உண்டாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் இதைப் போன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளைச் செய்திட கூடாது எனக் கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. வனிதா என்ற சகோதரி விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக