செவ்வாய், 4 மே, 2021

BBC டிராஃபிக் ராமசாமி காலமானார்

`சமூக ஆர்வலர்' டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 88. `கோட் போடாத வக்கீல்' என்றழைக்கப்பட்ட டிராஃபிக் ராமசாமியின் மரணம் நீதித்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ென்னையில் விதிமீறிய கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வாகனங்கள், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, ஹெல்மெட் விவகாரம், அரசியல் கட்சிகளின் பேனர் கலாசாரம் என டிராஃபிக் ராமசாமி கையில் எடுத்த வழக்குகளில் எண்ணிக்கை மட்டும் ஐநூறை தாண்டும். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தையே தனது வீடாக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பரபரப்பாக வலம் வந்தவர். இவரது வாழ்க்கைக் கதை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்தது.

தனக்குப் பின்னால் பாதுகாவலராக வரும் பி.எஸ்.ஓ, சட்டைப் பையில் நீண்டிருக்கும் வழக்கு கட்டுகள் என எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவது அவரது வழக்கம். கடந்த ஓராண்டாக கொரோனா பெருந்தொற்று காரணமாக நீதிமன்றங்கள் முடங்கினாலும் ஆன்லைன் மூலமாக வழக்குகளை நடத்தி வந்தார். இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள வீட்டில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி சுயநினைவின்றிக் கிடந்தவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உதவியாளர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவரைச் சேர்த்தார்.

இதையடுத்து, அவசர சிகிச்சைப் பிரிவில் டிராஃபிக் ராமசாமி அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை அளவு அதிகரித்தது என பலவித உடல் உபாதைகளுக்கும் ஆளானார்.

அவரது சிறுநீரில் உள்ள யூரியா கிரியாட்டினும் 3,000 என்ற அளவைக் காட்டியது. இதன்பின்னர், மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையின் காரணமாக மெல்ல மெல்ல உடல்நலம் தேறி வந்தார்.

இடையில் ஒரே ஒருமுறை மட்டும் அவரது மகள் அவரைப் பார்க்க வந்துள்ளார். அதுவும், `உங்கள் தந்தை சீரியஸாக இருக்கிறார். கையெழுத்து போட வாருங்கள்' என மருத்துவமனையில் இருந்து தகவல் வந்ததால் பார்க்க வந்துள்ளார்.

டிராஃபிக் ராமசாமி

கடந்த இரண்டு வாரங்களாக வழக்கறிஞர் கணேசன் உள்ளிட்ட சிலர்தான் டிராஃபிக் ராமசாமியை கவனித்து வந்துள்ளனர். இடையில் சற்று உடல்நலம் தேறியது போலக் காணப்பட்டதும், ` வழக்குகளைப் பார்க்க வேண்டும். ஆபீஸ் போகலாம்' என டிராபிஃக் ராமசாமி கூறியுள்ளார். ஆனால், அவரால் எழுந்து நடமாடக் கூட முடியவில்லை என்கின்றனர் அவரது உதவியாளர்கள்.

இன்று காலை (மே 4) 9 மணியளவில் பால் அருந்தியுள்ளார். அதன்பிறகு 11 மணியளவில் அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. மிகவும் கவலைக்கிடமான சூழலில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் டிராஃபிக் ராமசாமி இறந்துவிட்டார்.

டிராபிஃக் ராமசாமியின் நண்பரும் அவரது வழக்குகளைத் தொடர்ந்து நடத்தி வந்தவருமான வழக்கறிஞர் `யானை' ராஜேந்திரனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`` நீதிமன்றங்களுக்கு அவர் வருவதற்கு முன்பாக, பட்டா மாறுதல் உள்ளிட்ட சில பொதுப் பிரச்னைகளில் அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். இதனால் அவருக்கு சில அதிகாரிகள் தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது அவரிடம், ` நீங்கள் அதிகாரிகளிடம் சண்டை போட வேண்டாம். நீதிமன்றத்தில் அவர்களை நிற்க வைத்துக் கேள்வி கேட்கலாம்' என்றதும் அதை சரியென ஏற்றுக் கொண்டார்.

இதன்பிறகு தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் 2007 ஆம் ஆண்டு போலீஸ் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தோம். சென்னையில் வரையறையில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் நான் ஆஜரானானேன். அதேபோல், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும் விவகாரத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இன்று பாண்டி பஜார் சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர் தொடர்ந்த அந்த வழக்குதான். தனக்குத் தவறு என்று தெரியவந்தால் அதைத் தட்டிக் கேட்க அவர் தயங்கியதில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் நாகேஸ்வர ராவ், பாப்டே ஆகியோர் கையாண்ட ஒரு வழக்கில், ` நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என டிராபிஃக் ராமசாமி கூறினார். அப்போது நீதியரசர்கள், ` உடல்நிலையை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். உண்ணாவிரதம் எல்லாம் வேண்டாம்' என அக்கறை காட்டினர்.

உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த பல வழக்குகளை நீதியரசர்கள் பாராட்டியுள்ளனர். இதில், அவர் தொடர்ந்த சில வழக்குகள் டிஸ்மிஸ் ஆகிவிடும். அதனால் சோர்ந்து போகாமல் அடுத்த வழக்கைக் கையில் எடுப்பார். அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றமும் சென்றோம். இந்த வழக்கில் ரஞ்சன் கோகாய் சிறப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

சமூகத்தின் நன்மைக்காகவே டிராஃபிக் ராமசாமி பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கதீட்ரல் சாலையில் அ.தி.மு.கவினர் வைத்த பேனரை நேரடியாகவே சென்று கிழித்தார். இதனால் வரக் கூடிய பிரச்னைகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவரது வழக்குகளில் அவரே வாதாடி வந்தார்.

`தமிழில் வாதாடுங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வாதாடுங்கள்' என்றேன். மனுதாரராக இருப்பதால் தனது வழக்குகளுக்கு அவரே ஆஜராவதில் ஆர்வம் காட்டினார். அவர் மீது பல்வேறு அவதூறு தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது. அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து விலகி தனியே வசித்து வந்தார்.

இந்த வயதிலும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். தெருவில் எங்காவது பேனர் வைக்கப்பட்டிருந்தால் உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, `உடனே அகற்றுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என எச்சரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

உடனே அந்த இடத்தில் இருந்து பேனர் அகற்றப்பட்டுவிடும். இதுவரையில் ஏராளமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட ஓர் அரசியல் கட்சிக்கு எதிராக வழக்கை நடத்துவது தொடர்பாக விவாதித்தோம். `இந்தநேரத்தில் வழக்கு தொடர்ந்தால் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக வழக்கு தொடர்கிறோம் எனப் பேசுவார்கள். அதனால் தேர்தல் முடிந்ததும் வழக்கை தாக்கல் செய்வோம்' என்றார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது" என்றார் வேதனையுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக