வியாழன், 29 ஏப்ரல், 2021

கோவிட்19 2.0 இல் இருந்து மீண்ட தொழிலதிபரின் அனுபவங்கள்

Muralidharan Pb  :  நாம் நினைப்பதை விட வேகமாக முன்னேறி வருகிறது கோவிட்19 2.0
எத்தனையோ சந்தர்ப்பங்களில் தப்பித்த நான்,
இந்த முறையும் தப்பிக்க நினைத்து, இறுதியாக மாட்டிக் கொண்டேன். ஆம் கோவிட் இரண்டாவது அலை என்னை கவிழ்த்துவிட்டது.
2020 மார்ச்சில் இந்தியாவுக்கு கோவிட் வந்த புதிதில், எனக்கு காய்ச்சல், இருமல், சளி, கொடுமையை 21 நாட்கள்  அனுபவித்தேன். ஒருவேளை அதனால் எனக்கு கடந்த ஒருவருடமாக காய்ச்சல், ஜலதோஷம், இருமல் எதுவுமே அண்டாமல் இயற்கை அரணாக காத்தது என கருதினேன்.
இத்தனைக்கும் கட்டுப்பாடு என்பதை மிகக் கவனமாக கடைபிடித்தவன். தெரு முனை காய்கறி கடைக்கு செல்லும் போது கூட முகக் கவசம் இல்லாமல் சென்றதே இல்லை. இரண்டு வீடு தள்ளி, திரும்ப வீட்டுக்குள் வந்தாலும் சாண்டைஸ் பண்ணாம வருவதில்லை. அப்படியான கட்டுப்பாடு.
ஏப்ரல் 1 அன்று கோவிஷீல்ட் போட்டுக் கொண்டேன். ஆனால் ஏப்ரல் 14 மாலை குளிர் போல மெல்ல உடல் வெப்பம் அதிகமாக ஆனது. 15 ஆம் தேதி, மருத்துவமனை சென்று, ஆக்ஸிஜன் 100%, பல்ஸ் 100 மேல். ஆகவே மற்ற ரத்த பரிசோதனைகள் செய்து பார்த்துவிட எல்லாமே மறுநாளில் நெகட்டீவ். ஊசி கொஞ்சம் லேட்டாக வேலை செய்கிறது என மனதுக்குள் அற்ப ஆசை.
 அப்பவும் கோவிட் இருக்காது என நம்பியவன். 16ஆம் தேதி, டெஸ்ட் எடுத்து, 17 பாஸிட்டீவ் வந்தது. ஆனால் நல்ல யோசனையுடன் 14 முதல் தனி அறையில், தனிமைப்படுத்திக் கொண்டேன். வேறு ஒரு அறையை மனைவி தயார் செய்து, கொடுக்க 17 சனிக்கிழமை முதல், இங்கு தனிமை. இதுவரை இல்லாத தனிமை கொஞ்சம் கொடுமையாக இருந்தது.  


இரு நாட்கள் நல்லா போக, மனதுக்குள் மகிழ்ச்சி, செவ்வாய் அன்று, வெக்கை தாங்காமல் இரண்டு மணி நேர ஏசி போட்டது தான் பிரச்சனை. போன சனியனை வா என வெற்றிலை பாக்கு தாம்பூலம் வைத்து எனக்கு நானே தீமையை, தேடிக் கொண்டேன். நல்லா இருந்த உடல் காய்ச்சல் அதிகரித்து 102 வரை போனது. கடுமையான உடல்வலி பின்னி எடுத்துவிட்டது.
அண்ணன் Napa
  அவர்களது அன்பு மகள் மரு. காவியா பழனிச்சாமி தொலைபேசியில் பேசி, மாத்திரை பெயர் அனுப்ப. வாங்கி சாப்பிட்டபின்  மூன்று நாட்களில் சரியானது. ஏசி வேண்டவே வேண்டாம் என கூறிவிட்டார். பிறகு மெல்ல மெல்ல காய்ச்சல் குறைந்து சளி இருந்து ஒரே இருமல். இன்றுவரை. சிலருக்கு இப்படிப்பட்ட உடல்வாகு.
இதனிடையே மனைவிக்கும் பாஸிட்டீவ். அவரும் நானும் ட்வின் ஷேரிங் போல, அறையில் தங்கி பொழுதை ஓட்டுகிறோம்.
இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னோரு நண்பர் தம்பி Mansoor Alikhan
 . விடயம் கேள்விப்பட்ட அடுத்த நொடி, வாட்சப்பில் மருந்து பட்டியல் அனுப்பி, போன் செய்து தைரியம் சொன்னார்.
முக்கியமாக, ஆரம்பித்த முதல் எனக்கு Covid-19 Mild தான்.  ஒருவேளை Moderate, Severe வந்தால் மருத்துவமனையில் அனுமதி அவசியமாகி இருக்கும்.
அடுத்த முறை டெஸ்ட் செய்யும்போது, இதை எழுதி கேட்டால் போதும்.
ருசி, வாசம் இல்லாமல் ஒருவாரம் ஓடியது. இப்போது 28/04 நல்லா ருசி, வாசம் தெரிகிறது.
இன்னோரு செய்தி, ஆரம்பம் முதல் இன்றுவரை ஆக்சிஜன் அளவு 95% கீழே போவதில்லை. 98,99 சராசரியாக இருக்கும்.
ஆனால் அவதிக்கு மட்டும் குறைவே இல்லை. மூன்று நாட்களாக போன் கூட எடுக்காமல் தூங்கி தூங்கி தூங்கியே பொழுதை கழித்தேன்.
என் மீது அன்பும் பாசமும் கொண்ட நிறைய உறவினர், குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் போனில் எங்களது நிலையைக் கேட்ட வண்ணம் இருந்ததை என்னால் எப்படி மறக்கமுடியும்? மனதுக்குள் எவ்வளவு துணிவை உங்கள் போன் பேச்சு கொடுத்தது என்பதை என்னால் மட்டும் புரிந்துள்ள முடியும். அனைவருக்கும் உள்ளத்திலிருந்து நன்றி.
மேல் சொன்னவை ஏதோ தற்பெருமை பேச அல்ல. கோவிட் என்பது ஒரு பெருந்தொற்று. நாம் கவனமாக இருந்தால் நமக்கு வராது,  அப்படியும் வந்தால் துணிச்சல், மன வலிமையோடு  அணுகினால், மருத்துவத்தை மட்டும் நம்பினால் அதை சாதாரண ஜலதோஷம் போல கடந்து போய்விடலாம். கொஞ்சம் வீட்டு வைத்தியம் பார்க்கிறேன், பாட்டி வைத்தியம் பார்க்கிறேன் என தயவு செய்து ஆராயாமல் அறிவியலை மட்டும் நம்புங்கள்.  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்.
அனைவருக்கும் வைக்கும் வேண்டுகோள்.
கோவிட் தடுப்பூசி தயவு செய்து போட்டுக் கொள்ளுங்கள்.
நாம் போகாமல்விட்டால் தலை போய்விடும் என்ற வேலைக்கு மட்டும் போகவும். இல்லையேல் வீட்டோடு இருப்பது சாலச் சிறந்தது. காசு போனா வரும். உசுரு?
மாஸ்க் இல்லாமல் வெளியே போகவே வேண்டாம்.
கும்பலாக இருக்கும் இடத்தில் நிற்பதை தவிர்க்கவும்.
எத்தனை தடவை வெளியே சென்றாலும் சோம்பேறித்தனமாக இல்லாமல் கைகளை, சாணிட்டைஸ், சோப்பு போட்டு கழுவிவிட்டு வீட்டில் புழங்குங்கள். பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் வீடா? பத்து முறை பாதுகாப்பு அவசியம்.
எல்லாம் மீறி கோவிட்19 வந்தால் துணிவோடு சந்தியுங்கள். வீட்டில் மற்றவற்களுக்கு வராமல் கவனமாக பாதுகாப்போம்.
ஒருவேளை நமக்கே வந்தாலும் நாம் தனித்து நின்று கோவிட் சங்கிலியை உடைப்போம். சங்கிலி உடைத்தால் மட்டுமே அது காணாமல் போகும்.
உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  உங்கள் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு. இதனை கடைபிடித்தால் நன்று.
கவனமாக இருந்து, கோவிட்டையும் வெல்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக