ஞாயிறு, 14 மார்ச், 2021

"நான் பெரிய ஜனநாதன் என்ற நினைப்பு" Sooriyaprathap Soori!

May be a black-and-white image of 1 person and beard
Sooriyaprathap Soori  :   இயற்கை படம் வெளியான போது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், சிறுவயது முதலே கடல் மீது அளவற்ற காதல் கொண்டவன் நான், இயற்கை படத்தில் கடலும், கடல் சார்ந்த இடமும் படமாக்கப்பட்ட விதத்தில் SP.ஜனநாதன் என்கிற படைப்பாளி மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது,
மேலும் அந்தப்படத்தில் வரும் "காதல் வந்தால் சொல்லியனுப்பு" பாடல் எனது பதின்பருவத்தின் நினைவுகளோடு எப்போதும் அலைமோதும் ஒரு பாடல்,
சிலவருடங்கள் கழித்து,
நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்று முடித்து சிலமாதங்கள் ஆன நிலையில், "நம்ம தனியாவே படம் பண்ணிவிடலாம்" என்கிற ஒரு அசட்டுத்தைரியத்துடன் பல தயாரிப்பாளர்களை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிவந்தேன்,
இப்போது இருப்பதைப்போல குறும்பட இயக்குநர்களுக்கு, அக்காலகட்டத்தில் அவ்வளவாக மதிப்பு கிடையாது,
எங்கு சென்றாலும், "யாரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தாய்?" என்கிற கேள்வி தான் எழும், சினிமாவுக்கு வந்த புதிதில் இரண்டு உப்புமாப்பட கம்பெனிகளில் வேலை பார்த்த அனுபவம் மட்டுமே இருந்தது,
அப்போது எனது நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்று குறும்படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு உறுதுணையாக இருந்த மைக்கெல் மாஸ்டரின் ஞாபகம் வந்தது, அவர் தான் ஈ, பேராண்மை என இயக்குநர் SP.ஜனநாதன் அவர்களின் இரண்டு படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர், அவரிடம் போய் ஜனா சாரிடம் என்னை சேர்த்து விடுங்கள்
ஒரே ஒரு படம் வேலை பார்த்தால் போதும் என்று கேட்டேன்,
ஒரு சினிமா படைப்பாளி தனது அரசியலை, தனது சினிமாவில் எவ்வாறு பேச வேண்டும் என்பதற்கு தேர்ந்த உதாரணம் இயக்குநர்  SP.ஜனநாதன் அவர்கள்,
அவர் வழியிலேயே, எனக்கு தெரிந்த அரசியலைச் சொல்வதற்கு, சினிமாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள, அவரிடம் பணிபுரிவதே சரியாக இருக்கும் என்று மாஸ்டரிம் கூற, அவரும் எனக்காக ஜனா சாரிடம் பேசிப்பார்த்தார்,
இப்போதைக்கு ஏதும் படம் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை, அந்தப் பையனை வேறு ஏதும் நல்ல படத்தில் சேர்த்துவிடு என்று சொல்லிவிட்டார்,
எனக்கோ பெரிய ஏமாற்றம், மைக்கெல் மாஸ்டரும், அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும், ஜனா சாரின் துணை இயக்குநரான ஆலயமணி அவர்களும், ஜனா சாரின் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான கதைகள் பலவற்றை என்னுடன் பகிர்ந்திருக்கிறார்கள்,  
எப்படியாவது அவரிடம் ஒரு படமாவது வேலை பார்க்க வேண்டும் என்கிற ஆவலில், ஜனா சார் எப்போது படம் ஆரம்பித்தாலும் பரவாயில்லை, நான் காத்திருக்கிறேன், என்று மாஸ்டரிடம் சொன்னேன்,
அப்போது மாஸ்டர் இன்னொரு சுவாரசியமான தகவலைச் சொன்னார், அதாவது, ஜனா சார், பேராண்மை படத்திற்காக ஒரு பெரிய சம்பளத்தை வாங்கியிருக்கிறாராம், அந்த சம்பளப்பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து எப்போது தீருகிறதோ, அப்போது தான் அடுத்த படத்தைப் பற்றி யோசிக்கவே ஆரம்பிப்பாராம்,
வங்கிக் கணக்கில் இருந்த பணத்தின் மதிப்பைக் கேட்டதும் எனக்கிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் போய்விட்டது,
ஏனென்றால் அது ரொம்பவே பெரிய தொகை,  "அது எப்போ தீர்ந்து, இவர் எப்போ அடுத்த படம் எடுத்து, நான் எப்போ வேலைக்கு சேர்ந்துன்னு" தளர்ந்து போய்விட்டேன்,
அதற்கு பிறகு மைக்கெல் மாஸ்டர், பீட்டர் ஹெய்னுக்கு பிரதியீடாக கோச்சடையானின் ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தமாக, அவர் மூலமாகவே நானும் கோச்சடையானில் பணிபுரிந்து, எனது சினிமாப்பயணம் வேறு வழியில் அழைத்து வந்து இங்கு நிற்க வைத்திருக்கிறது,
இனிமேல் எத்தனை இடங்களுக்குச் சென்றாலும், எவ்வளவு உயரம் தொட்டாலும், அவரிடம் ஒரு படம் பணிபுரியவில்லையே என்கிற ஏக்கம் இருந்து கொண்டே தானிருக்கும்,
சினிமாவுக்கு வந்த புதிதில், தலையில் எப்போதும் ஒரு தொப்பி அணிந்த படி தான் சுற்றிக் கொண்டிருப்பேன்,
நாளைய இயக்குநர் இறுதிச் சுற்றில் கூட தொப்பியோடு தான் மேடையேறினேன், சினிமா நண்பர்கள் பலரும் கிண்டல் செய்வார்கள், "இவனுக்கு பெரிய பாலுமகேந்திரானு நினைப்பு" என்று, ஆனால், எனக்கு மட்டும் தான் தெரியும், அது "நான் பெரிய ஜனநாதன் என்ற நினைப்பு" என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக