ஞாயிறு, 14 மார்ச், 2021

இயக்குநர் எஸ் பி ஜனநாதன் காலமானார்.. (வயது 61)

BBC : பேராண்மை, இயற்கை, ஈ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.
மூலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை (மார்ச்11) சேர்க்கப்பட்ட ஜனநாதனுக்கு, கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர் குணமடையவில்லை.
விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜனநாதன் அவரது வீட்டில் சுயநினைவின்றி கிடந்ததை அடுத்து, படக்குழுவினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த எஸ் பி ஜனநாதன், திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டு, அந்த வேலைக்காக கடும் சிரமங்களுக்கு மத்தியிலும் பணியாற்றியவர். எடிட்டிங் துறையில் புகழ்பெற்ற பி லெனின், வின்சென்ட் செல்வா உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியவர். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.


அவர் இயக்கிய முதல் படமான இயற்கை சிறந்த படத்திற்கான தேசிய விருதை(2004) பெற்றது. அதனை அடுத்து, ஈ, புறம்போக்கு என்னும் பொதுவுடைமை உள்ளிட்ட படங்களை அவர் இயக்கினார். பொதுவுடைமை சிந்தனைகளை மக்களுக்கு புரியும் வகையில் படங்களில் காட்சிப்படுத்தியவர் ஜனநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக