ஞாயிறு, 7 மார்ச், 2021

திமுக 10 ஆண்டு இலட்சிய பிரகடனம்.. திருச்சியில் பெரிய அறிவிப்பை வெளியிடும் ஸ்டாலின்.. இன்று பொதுக்கூட்டம்!

minnambalam : திருச்சி திருப்புமுனை மாநாடாகத் திட்டமிடப்பட்டு, தற்போது மாபெரும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் இன்று நடக்க இருக்கிறது திமுகவின் பெருந்திரள் கூடுகை. கடந்த பிப்ரவரி மாதமே திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையிலுள்ள சிறுகனூரில் சில நூறு ஏக்கர் நிலப்பரப்பை செம்மைப்படுத்தி வழக்கம்போல தேர்தலுக்கு முந்தைய மாநாடு அறிவிக்கப்பட்டது. அதை நடத்துவதற்கு ஏற்பாடுகளை செய்தார் திமுகவின் முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு. நிலம் கையகப்படுத்துதல், நிலத்தைச் சமன்படுத்துதல், குடீநீர் வசதிகள் செய்தல், உணவு ஏற்பாடுகள் என்று ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்த கே.என்.நேருவுக்கு மாநாட்டு தேதி தள்ளித் தள்ளி போனதில் வருத்தம் இருந்தது. ஒரு வழியாய் மார்ச் 14 என்று மாநாட்டுத் தேதி முடிவானது.

ஆனால் பிப்ரவரி 26ஆம் தேதி தேர்தல் ஆணையம் சட்டமன்றப் பொதுத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து தேர்தல் வேலைகளைக் கவனிக்க வேண்டிய காரணத்துக்காக மாநாட்டை ஒத்திவைத்தார் ஸ்டாலின். ஆனால் சிறுகனூரில் பெருகப் பெருக செய்த ஏற்பாடுகளை என்ன செய்வது?

இந்த நிலையில்தான் நேருவின் உழைப்பும், தொண்டர்களின் உழைப்பும் வீணாகிவிடக் கூடாது என்ற அடிப்படையில் அந்த மாநாடு சிறப்புப் பொதுக்கூட்டம் என்ற வடிவில் மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் என்று தனது பிறந்த நாளன்று அறிவித்தார் ஸ்டாலின்.

இதன்படி இன்று மார்ச் 7ஆம் தேதி காலை 11.30 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி சிறப்பு பொதுக் கூட்டத்தைக் கொடியேற்றி தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு பேரறிஞர் அண்ணா, கலைஞர் குறித்த காணொலிகள் பிரமாண்ட திரைகளில் திரையிடப்படுகின்றன.

உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் 2.30 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் என்கிற மாநாடு முறைப்படி தொடங்குகிறது. கே.என்.நேரு வரவேற்புரை ஆற்றிய பிறகு மாநாடுகளில் ஒவ்வொரு பொருள் குறித்தும் சொற்பொழிவு ஆற்றுவது போல இங்கேயும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி என ஒவ்வொரு பிரிவிலும் இருவர், மூவர் உரையாற்றுகின்றனர்.

இதில் பொருளாதாரம் பற்றி மின்னம்பலம் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் உரையாற்றுகிறார். அவரோடு திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுகிறார்.

நீர் வளம் என்ற பிரிவில் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோரும் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக எழிலன் நாகநாதன், மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள்.

கல்வி என்ற பிரிவின்கீழ் பிரின்ஸ் கஜேந்திரபாபு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் உரையாற்ற சமூக நீதி என்ற தலைப்பில் வே.மதிமாறன், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் உரையாடுகிறார்கள்.

சுகாதாரம் என்ற பிரிவில் மருத்துவர் ரவீந்திரநாத், மருத்துவர் கனிமொழி சோமு, மருத்துவர் கலாநிதி வீராசாமி ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.

இந்த உரை வீச்சுகள் முடிந்த பிறகு சிறிது நேரம் இளைப்பாறுவதற்காக மாலை கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதையடுத்து இதுவரை மாநாடுகளில் கடைப்பிடிக்காத பொதுக் கூட்டங்களில் கடைப்பிடிக்காத ஒரு புதிய உத்தியை ஸ்டாலின் செயல்படுத்துகிறார். அதாவது கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் திமுக தலைவர் பிரச்சாரப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் நிகழ்ச்சிக்கு வரும்போது கிட்டத்தட்ட அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் அனைவரையும் நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு கை கொடுத்து ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொண்டார்.

இது கட்சி நிர்வாகிகளிடத்திலும் கட்சி தொண்டர்களிடத்திலும் பொதுமக்களிடத்திலும் ஒரு இனம்புரியாத சிலாகிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதை இந்த பிரம்மாண்ட சிறப்புப் பொதுக் கூட்டத்திலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்து அதற்காக மாலை 5.30 முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கியுள்ளார் ஸ்டாலின். அதாவது இந்த பிரமாண்ட சிறப்பு பொதுக் கூட்டத்துக்கு வருகை தந்திருக்கும் பெரும்பாலானோரை நேரடியாக சந்தித்து அவர்களின் வாழ்த்துகளைப் பெறுவதற்காக அரைமணி நேரம் செலவிடுகிறார். இதற்காக கூட்டத்துக்குள் அவர் சென்று வர வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பிறகு மாலை 6.30 மணிக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தமிழகத்துக்கு தொலைநோக்குத் திட்ட அறிக்கையை வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார் ஸ்டாலின். மாநாடு என்ற பெயர் சிறப்புப் பொதுக்கூட்டம் என்று பெயர் மாற்றப்பட்டாலும் ஏற்பாடுகளை மாநாடு என்ற அளவிலேயே செய்திருக்கிறார் கே.என்.நேரு.

-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக