ஞாயிறு, 7 மார்ச், 2021

ஸ்டாலின் வீட்டில் குண்டுராவ், அழகிரி: நடந்தது என்ன?

ஸ்டாலின் வீட்டில் குண்டுராவ், அழகிரி: நடந்தது என்ன?

 minnambalam :இன்று திருச்சியில் திமுக சிறப்புப் பொதுக்கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் அவசரமாகச் சென்றனர்.

ஸ்டாலினைச் சந்தித்த அவர்கள் சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தனர். அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்க, அவர் தினேஷ் குண்டுராவைக் காட்டினார். தொடர்ந்து தினேஷ் குண்டுராவ் பேசும்போது, “நான், அழகிரி, ராமசாமி ஆகியோர் எங்கள் மேலிடத்திடம் பேசிய பிறகு இன்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்தோம். தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு வந்திருக்கிறோம். அந்த ஒப்பந்தம் என்னவென்பது நாளை காலை 10 மணிக்கு கையெழுத்திடப்பட்டு அறிவிக்கப்படும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ஏற்கனவே இருமுறை திமுக பேச்சுவார்த்தைக் குழுவோடு காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திமுக ஒதுக்க முன்வந்த எண்ணிக்கை காங்கிரஸுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் மார்ச் 5ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ஆதங்கத்தையும் வேதனையையும் கண்ணீர் விட்டுப் பேசினார். இது காங்கிரஸ் வட்டாரத்திலும் திமுக வட்டாரத்திலும் பரபரப்பாகியது.

காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 41 இடங்களுக்குக் குறையாமல் கேட்க, திமுகவோ 15இல் இருந்து தொடங்கியது . பின் 18, 20, 22 என்று கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றியது. இன்று திமுக சிறப்புப் பொதுக்கூட்டத்துக்காக ஸ்டாலின் திருச்சி புறப்பட வேண்டிய நிலையில் இரு தரப்பிலும் விரைவில் முடிக்க வேண்டிய தேவையை உணர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை ஸ்டாலினுடன் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அதையடுத்து தினேஷ் குண்டுராவிடமும் பேசியிருக்கிறார் ராகுல். 25 இடங்கள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, ஒரு ராஜ்யசபா என்று திமுக வழங்க முன் வந்திருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே ப.சிதம்பரம் போன்றவர்கள், “இம்முறை காங்கிரஸ் மூன்றாவது அணி என்ற விபரீத முயற்சியில் இறங்கினால் காங்கிரஸின் இடத்தை பாஜக பிடித்துவிடும். பாஜக ஆளுங்கட்சியாக இருந்தபோதும் அதிமுகவிடம் அடித்துப் பிடுங்கலாம் என்ற நிலையில் இருந்தபோதும் தனது செல்வாக்கு அறிந்து 20 இடங்களை மட்டும் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் நிறைய இடங்களில் போட்டியிட்டு தோற்பதைவிட கணிசமான இடங்களைப் பெற்றாலும் கவனத்தை கூர்மைப்படுத்தி அனைத்தும் வெற்றி பெற வைக்கும் வேலையில் இறங்க வேண்டும்” என்று ராகுலிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ஸ்டாலின் - ராகுல் காந்தி பேச்சுவார்த்தைக்குப் பின் இன்று காலை ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. காலை 11 மணியளவில் ஸ்டாலின் திருச்சி சிறப்புப் பொதுக்கூட்டத்தில் கொடியேற்ற வேண்டிய நிலையில், காங்கிரஸுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டு உடனடியாக திருச்சி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக