ஞாயிறு, 7 மார்ச், 2021

திமுக மீது சுமத்தப்படும் அப்பட்டமான பொய் பிரசாரங்கள் .. “திமுக மோசம்ங்க; திமுக சரியில்லீங்க”

May be an image of text

LR Jagadheesan  :  தமிழ்நாட்டின் சாபக்கேடுகளிலேயே மிகப்பெரிய சாபக்கேடு  “அரசியல் நடுநிலை” என்பதும் “அறம்/நேர்மை/தூய்மை/இயற்கை பாதுகாப்பு உள்ளிட்ட இத்யாதி, இத்யாதி” எல்லாமே by default anti-DMKவாக இருக்க வேண்டும் என்பதும் இங்கே எழுதப்படாதவிதியாகவே இருப்பது தான்.
அதனால் தான் இங்கே அரசியலில் முழுநேர தரகுவேலையை செய்தவர்களும் மத்திய மாநில அரசுகளின் உளவுநிறுவனங்களுக்கு தொழில்முறை தகவல் சொல்லிகளாக இருந்தவர்களும் ஆனப்பெரிய காந்தியவாதியாகவும் ஊடகவியலாளனாகவும் உலாவரமுடிவதும் பத்மபூஷன் விருதுகள் பெற முடிவதும் நடக்கிறது.
அப்பேற்பட்ட ஒரு ஊடக ஜாம்பவானின் நம்பிக்கைக்குரிய “மூத்த ஊடகவியலாளர்” ஒருவர் தமிழ்நாட்டில் திமுக “கூட்டணி கட்சிகளை” எப்படி நடத்த வேண்டும் என்று இலவச பாடம் எடுத்திருக்கும் நீண்ட நெடிய கட்டுரையில் “தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் சதவிகிதம் 14% என்கிறார்கள்” என்பதாக எழுதிச்செல்கிறார். அந்த “என்கிறார்கள்” என்பது யார்? அவருக்கே வெளிச்சம்.
தன் தரப்பு வாதத்தின் அடிப்படை தகவலைக்கூட சரிபார்க்காமல் குன்சாக அடித்துவிடுவது என்பது இது தான்.


இந்த தகவல் அப்படி ஒன்றும் ரகசியத்தகவலும் இல்ல. அரசாங்கம் தொகுத்த மக்கள் தொகை புள்ளிவிவரம் இணையத்தில் ஒரே ஒரு சொடுக்கில் இலவசமாகவே கிடைக்கிறது.
அதைக்கூட தேட முயலாமல் இப்படி ஒரு பொய்யை எப்படி இவ்வளவு சுளுவாக அடித்துவிட முடிகிறது என்கிறீர்களா?
இங்கே தமிழ்நாட்டின் ஊடகத்துறையில் நீங்கள் நட்டநடுவுநிலையாளராக அங்கீகரிக்கப்படுவதற்கும் கொண்டாடப்படுவதற்கும் இத்தகைய இயல்புகள் தான் அடிப்படை. நடுநிலை ஊடகம் என்பதே தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக இயங்குவதே. நீங்கள் வேறு ஒன்றுமே பெரிதாக செய்யத்தேவையில்லை.
 “திமுக மோசம்ங்க; திமுக சரியில்லீங்க” இந்த இரண்டே இரண்டு சங்கதிகளை நீங்கள் நேரம் காலத்துக்கேற்ப புதுப்புது வடிவங்களில் கொஞ்சம் மானே தேனே சேர்த்து பரப்பினாலே போதும்.
நீங்கள் இயங்கும் தளம் எதுவானாலும் அங்கே தொடர்ந்து திமுகவை எதிர்த்தால் எல்லாவிதமான ஒளிவட்டங்களும் பரிவட்டங்களும் அங்கீகாரங்களும் உங்களைத் தேடிவரும்.
இந்த தேர்தலில் திமுக வென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் “நடுநிலையாளர்கள்” காட்டில் கனமழை காத்திருக்கிறது. கொஞ்சம் பொறுங்கள்.
பிகு: அரசியல் விமர்சனம் என்பது ஏதோ ஒன்றை ஆதரித்தும் மற்றதை எதிர்த்தும் தான் செய்யமுடியும். அரசியல் விமர்சனத்தின் அடிப்படை இலக்கணம் அது.
எனவே திராவிடர் இயக்கத்தையோ திமுகவையோ எதிர்ப்பதில் எந்த தவறும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அது அவசியமும் கூட. தேர்ந்த, கூர்மையான அரசியல் விமர்சனம் ஒரு இயக்கத்தை, ஒரு கட்சியை, ஒரு முதிந்த ஜனநாயக அரசியல் தலைமையை மேம்படுத்தி சீர்படுத்த உதவும்.
ஜஸ்டிஸ் கட்சி முதல் கலைஞர் தலைமை வரை அப்படியான இயக்கம்/கட்சி/தலைவர்களை கொண்டே திராவிடர் இயக்கம் வளர்ந்தது.
அதனாலேயே அது இன்றுவரை உயிர்ப்போடு இருக்கிறது. அதேசமயம் திராவிடர் இயக்கம், திமுக மற்றும் அதன் தலைமைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் வைக்கப்படும் அரசியல் விமர்சனங்களில் 90% அப்பட்டமான பொய்களை அடிப்படையாகக்கொண்டவை.
அவை அரசியல் விமர்சனமல்ல அடிப்படைகளற்ற அவதூறுகள்.
தமிழ்நாட்டின் முஸ்லிம் மக்கள் தொகை பற்றிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்துக்கான சுட்டி:    census2011.co.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக