ஞாயிறு, 7 மார்ச், 2021

25 பேர் கொண்ட தி.மு.க வேட்பாளர் உத்தேசப் பட்டியல் .. எந்தெந்த தொகுதிகளில் யார் யார் வேட்பாளர்கள்?

vikatan :சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், தி.மு.க ஒருபக்கம் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை அவசரசகதியில் முடித்துவருகிறது. மறுபுறம் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலை நடத்தி, வேட்பாளர் பட்டியலையும் இறுதி செய்து வருகிறது. மார்ச் 5-ம் தேதி நல்ல நாள் என்பதால் அ.தி.மு.க 6 பேர் அடங்கிய முதற்கட்டப் பட்டியலை வெளியிட்டுவிட்டது. தி.மு.க. ஒட்டுமொத்தமாக வரும் 10-ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட இருக்கிறது. 

வெளியாக இருக்கும் வேட்பாளர் பட்டி யலில் இறுதியாக யார் யார் மோதுகிறார்கள்? யார் யார் கன்ஃபார்ம் வேட்பாளர் என்பது குறித்து ஏற்கனவே 25 பேர் கொண்ட உத்தேச வேட்பாளர் பட்டியலை வெளியிட்டோம். நம்மிடம் அதனைக் கொடுத்த அதே அறிவாலயப் புள்ளி அடுத்த கட்டமாக 25 தொகுதிகளுக்கான உத்தேசப் பட்டியலைக் கொடுத்திருக்கிறார். இனி அதனைப் பார்ப்போம்.

1. கிருஷ்ணகிரி தொகுதியில், மாவட்டப் பொறுப்பாளர் செங்குட்டுவனுக்கும், ரஜினி மன்றத்திலிருந்து தி.மு.க. வந்த, மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகனுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

2. பர்கூர் தொகுதியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் சுகவனம் மற்றும் மதியழகனுக்கு இடையே சீட் பிடிப்பதில் ரேஸ் நடக்கிறது. செங்குட்டுவனுக்கு கிருஷ்ணகிரி தொகுதி உறுதியாகும்பட்சத்தில், மதியழகனுக்கு பர்கூர் நிச்சயம் கிடைக்கும்.

3. வேப்பனஹள்ளி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. முருகன் என சொல்லியிருந்தோம். ஆனால், இறுதிகட்ட பட்டியலில் மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ்தான் வேட்பாளர் என்கிறது அறிவாலயம்.

4. ஓசூர் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை தி.மு.க.வுக்கு என இறுதி ஆகும் பட்சத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் சீனிவாசன்தான் வேட்பாளராம்.

5. ஆலந்தூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தான் வேட்பாளர்.

6. பல்லாவரம் தொகுதியைப் பொறுத்தவரை, சிட்டிங் எம்.எல்.ஏ. இ.கருணாநிதிக்கே சீட்.

7. தாம்பரம் தொகுதியிலும் சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜாவுக்கே ராஜயோகம்.

8. திருப்போரூர் தொகுதிக்கு சிட்டிங் எம்.எல்.ஏ. இதயவர்மன் பெயர் அடிபடுகிறது. எனினும், மல்லிகா மோகன் என்பவரும் போட்டி போடுகிறார். துப்பாக்கிச் சூடு பிரச்னை காரணமாக பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்ததால், இதயவர்மனுக்கு ‘இதயத்தில் இடமுண்டு, தொகுதியில் இடமில்லை’ என்று சொல்லவும் வாய்ப்புள்ளது.

9 செய்யூர் தொகுதியை வி.சி.க-வில் இருக்கும் வெளிச்சம் டி.வி உரிமையாளர், பனையூர் பாபுவுக்காக திருமா கேட்டு வருகிறார். ஒருவேளை கொடுக்கப்படவில்லை என்றால் சிட்டிங் எம்.எல்.ஏ. ஆர்.டி.அரசுதான் வேட்பாளர்.

10. மதுராந்தகம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வான நெல்லிக்குப்பம் புகழேந்தி மீது புகார்கள் இருப்பதால், தொகுதியை வி.சி.க-வுக்கு கொடுத்துவிடலாமா? என தி.மு.க. தலைமை யோசிக்கிறது.

11. உத்திரமேரூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. சுந்தருக்குத்தான் சீட்.

12. காஞ்சிபுரம் தொகுதியிலும் சிட்டிங் எம்.எல்.ஏ. எழிழரசனுக்குத்தான் சீட்.

13. கன்னியாகுமரி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. ஆஸ்டினே களம் காண்கிறார்.

14. நாகர்கோவில் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜனுக்கே ராஜயோகம் அடிக்கிறது.

15. பத்மநாபபுரம் தொகுதியிலும் சிட்டிங் எம்.எல்.ஏ. மனோ தங்கராஜே வேட்பாளர்.

16. குளச்சல் தொகுதி இப்போது காங்கிரஸிடம் இருக்கிறது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை காங்கிரஸுக்கு விட்டுக்கொடுக்கும் தி.மு.க., அதற்குப் பதிலாக குளச்சல் தொகுதியை பெறுகிறது. இங்கு லோக்கல் நிர்வாகி ஜோசப் ஸ்டாலின் போட்டியிடவிருக்கிறார் என்கிறது அறிவாலய வட்டாரம்.

17. வாசுதேவநல்லூர் தொகுதிக்கு, முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பொன்ராஜ் என்பவர் பெயரை ரெக்கமெண்ட் செய்திருக்கிறார். இவர் மீது மோசடிப் புகார் உள்ளது என தலைமைக்கு எடுத்துக்கூறியும் இவர்தான் வேட்பாளர் ரேஸில் இறுதியில் நிற்கிறார்.

18. சங்கரன்கோவில் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.ராஜன் மகன் வி.பி.ஆர்.இளம்பரிதி, ராஜா மற்றும் சி.குமார் என மும்முனைப்போட்டி நிலவுகிறது. போட்டி அதிகமானால் தொகுதியை காங்கிரஸுக்குத் தள்ளிவிடவும் தி.மு.க. ரெடியாகிவிட்டது.

19. தென்காசி தொகுதியில் மாவட்டப் பொறுப்பாளர் சிவ.பத்மநாபன் முட்டி மோதி வருகிறார். இத்தொகுதி காங்கிரஸுக்குப் போகவும் வாய்ப்புள்ளது.

20. ஆலங்குலம் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வான பூங்கோதைக்கு இம்முறை நிச்சயம் சீட் இல்லை. ஒருவேளை தென்காசி காங்கிரஸுக்கு சென்றால், சிவ.பத்மநாபன் இங்கு போட்டியிடுவார். இத்தொகுதி காங்கிரஸுக்கு சென்றால், தென்காசியில் பத்மநாபன் போட்டியிடுவார். இரண்டில் ஒன்று கண்டிப்பாக உண்டு.

21. தூத்துக்குடி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும், மாவட்டச் செயலாளருமான கீதாஜீவனே வேட்பாளர்.

22. திருச்செந்தூர் தொகுதியிலும் சிட்டிங் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கே சீட்.

23. திருநெல்வேலி தொகுதிக்கு சிட்டிங் எம்.எல்.ஏ. லட்சுமணனே வேட்பாளர்.

24. பாளையங்கோட்டை தொகுதியைப் பெறுவதற்கு சிட்டிங் எம்.எல்.ஏ. டி.பி.எம்.மொய்தீன் கான் மற்றும் மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் ஆகிய இருவருக்குள்ளும் கடும் போட்டி நிலவுகிறது. மொய்தீன் கானுக்கு வயதாகிவிட்டது ஒரு பின்னடைவு. அப்துல் வகாப்புக்கு வயது இருப்பினும், ஏகப்பட்ட புகார்கள் இருப்பதால் இடிக்கிறது. இறுதி முடிவு 10-ம் தேதி தெரிந்துவிடும்.

25. நாங்குநேரி தொகுதியை இந்தமுறையும் காங்கிரஸ் கட்சி கேட்கிறது. ஒருவேளை கொடுக்கப்படவில்லை என்றால் ஆரோக்கிய எட்வின்தான் வேட்பாளர்.

இவ்வாறு 25 தொகுதிகளைக் கொடுத்துவிட்டு மீண்டும் அடுத்த பட்டியலுடன் வருகிறேன் என சிட்டாகப் பறந்துவிட்டார் அந்த அறிவாலயப் புள்ளி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக