புதன், 3 பிப்ரவரி, 2021

தோழர் டொமினிக் ஜீவா!.. ஜாதியால் ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டவர் . காதலையும் துறந்தவர்

Tholar - Opslag | Facebook
Sugan Paris : டொமினிக் ஜீவா குறித்து எழுதும்போது அவரோடு அவரது சாதியைப் குறித்துப் பேசுவதாக இரண்டு முகநூல் நண்பர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
அவர்கள் நல்லெண்ணம் நல்லது.
குறிப்பாக இருவரும் ஆதிக்க சாதிப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். சாதி அவமானத்தை சந்தித்திருக்க அவர்களுக்கு வாய்ப்பில்லை.
அவர்கள் சாதியால் கிடைத்த அனுகூலங்களை அவர்கள் ஒன்றும் மறுத்து வாழ்ந்துவிடவில்லை.
ஜீவா சாதி அவமான நெடுக்கடிகளாலேயே ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டவர்.
சாதியின் காரணமாக தன் காதல் வாழ்வை துறந்தவர். தன் காதலியுடன் சேர்ந்து வாழ்க்கை தொடங்கப்போகும் அந்த நாளில் தன் காதலிக்காகக் காத்திருக்க காதலியின் தாயார் தாங்கள் தூக்கில் தொங்கவேண்டிவரும் என்ற இறைஞ்சலைக் கேட்டு தன் காதலை தீய்த்தவர்.
ஒரு சாதிய சமூகத்தில் இது மிக மிக இயல்பானது. மீறி ஒருசில விதிவிலக்குகள் உண்டு.    கௌரவக் கொலை, சாதி வஞ்சக்கொலை வரை இவை இயல்பானவை. இத்தகு நெருக்கடிகளை அவர்கள் உணர்ந்தறிய வாய்ப்பில்லை.
நமது அருமைத் தோழர் சிவபாலன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. சாதி மறுப்புத் திருமணம் செய்த காரணமாய் அவர் தந்தையார் இறந்தபோது அவருக்கு அறிவிக்கவுமில்லை. மரண அறிவித்தலில் அவர் பெயருமில்லை.
 இப்படியான பெருவாரியான உதாரணங்கள் உண்டு.  டானியல் தனது "முருங்கையிலைக் கஞ்சி "
கதையில் நுட்பமாக எழுதியிருப்பார்.
ஜீவாவின் தண்ணீர் கதை கிணறு இறைக்கப்பட்ட கதையைச் சொல்லும்.
ஜீவா மட்டுமல்ல டானியல் ,நந்தினி சேவியர் ,தெணியான் என ஒடுக்கப்பட்ட சாதிப் பின்னணியில் இருந்து வந்த எழுத்தாளர்கள் தமது படைப்புகளில் சாதி ஒடுக்குமுறைத் தளங்களை மிக நுணுக்கமாக காட்டிப்போவார்கள்.
கல்வி மறுக்கப்பட்ட ஒரு மாணவன் பின்னொருகாலத்தில் தன் தாயின் மடியில் படுத்திருந்து தான் படித்த பாடசாலையின் சாதி அவமானத்தை நினைவுகூரும் கதை நெல்லிமரப் பள்ளிக்கூடம். இவையெல்லாம் வெறும் கதைகளல்ல. காயங்கள்.
சாதியச் சிக்கல்கள் குறித்துப் பேசும்போது
உண்மையில் பதட்டமடைவது ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்தான். தம்மை தாம் பிறந்த இழித்துரைக்கப்பட்ட சாதியின் அடையாளமாக முன் நிறுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் அதையும்மீறி தன் வரலாறுகளை எழுதுகிறார்கள். இப்படியான நெருக்கடிகள் ஆதிக்க சாதிப் பின்னணியில் இருந்து வந்த எழுத்தாளர்களுக்கு இல்லை. வாய்ப்புக்கிடைக்கும்போது நாசூக்காக மறைபொருளாக தம் சாதிப் பெருமையை எழுதிவிடவே செய்கிறார்கள்.
காலமும் மதிப்பீடுகளும் இப்போது முன்னரைப்போலில்லை.இப்படியான எழுத்துகளுக்கு கௌரவ ஏற்பும் மதிப்பும் இருக்கிறது. இவ் எழுத்துகளை கொண்டாடும் சூழல் இருக்கிறது .
முப்பதாண்டுகாலமாக ஆதிக்கம் செலுத்திய தலித் இலக்கியம் ,தலித் பண்பாடு இருக்கிறது. கறுப்பு இலக்கிய வகையை எப்படிப் படித்தறியமுடிகிறதோ இதுவும் அவ்வாறே.
மது போதையில்
மாரடைத்துப் போன
பரமேஸ்வரன் நாயருக்கு,
சவரம் செய்து
மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து
குளிப்பாட்டி பவுடர் போட்டு
கை கால்
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டி
உடை மாற்றி
சென்ட் அடித்து
பிரேதத்தை கருநீள பெஞ்சில்
நீளமாக படுக்கவைத்துவிட்டு
கொஞ்சம் அருசியுடன்
வந்தார் அப்பா
அன்னைக்கு ராத்திரி
வீட்டில சோறு.
பூரா பிண நாத்தம்.
( ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக