புதன், 3 பிப்ரவரி, 2021

தனிமைபட்ட ராமதாஸ்! பள்ளத்தில் வீழ்ந்த பாமக!

தனிமைபட்ட ராமதாஸ்! தள்ளாடும் பாமக!
சாவித்திரி கண்ணன் : ஜெயிக்கிற கட்சியாகப் பார்த்து தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்து வந்த ராமதாசால் இந்த முறை திமுக கூட்டணிக்குள் நுழைய முடியவில்லை! பாமகவை உறுதியாக சேர்க்கமாட்டோம் என திமுக திட்டவட்டமாக முடிவெடுத்துவிட்டது! பேச்சுவார்த்தைக்கு கூட தயாராக இல்லை என பாமகவிற்கு உணர்த்தப்பட்டுவிட்டது! இது எந்த தேர்தல் காலத்திலும் பாமக பார்த்திராத அதிர்ச்சியாகும்! ராமதாஸ் நம் கூட்டணிக்கு வருவதால் பலன் கிடையாது என்பது மட்டுமல்ல, பாதகங்களும் அதிகம் என திமுக கணித்துள்ளதாம்! கடந்த பத்தாண்டுகளாக பாமக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கூட்டணி தோற்பது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது! அந்த அளவுக்கு சொந்த சாதியிலும் அவருக்கு எதிர்ப்பு தீயாக வளர்ந்துள்ளது! மற்ற சமூகங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது!
ராமதாஸ் என்ற பிம்பம் இன்றைய தினம் சந்தர்ப்பவாத – பிழைப்புவாத - அரசியலின் அடையாளமாகிவிட்டது!
இந்தப் பின்னணியில் நாம் டாக்டர். ராமதாசின் அணுகுமுறைகளை பார்க்க வேண்டும்!
கட்சி ஆரம்பித்து 31 ஆண்டுகளுக்கு மேலாகிறது! எத்தனையோ,வெற்றிகளையும் மகுடங்களையும் பார்த்த கட்சி தான் பாமக! 1980 களின் மத்தியில் பாமக கருக்கொள்ளாத காலகட்டத்தில் – அது வன்னியர் சங்கமாக இருந்த நிலையில் - அவர்களின் சட்டமன்ற, பாராளுமன்ற புறக்கணிப்பு சுவரெழுத்து கோஷங்களைக் கண்டு ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்!
பாராளுமன்றத்தை பன்றிகளின் தொழுவமாக சித்தரித்து சுவரெழுத்துச் சித்திரங்கள் தீட்டிய அவர்கள் வெகு சீக்கிரமாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக அவதாரமெடுத்து, 1989 தேர்தலில் நின்று 15 லட்சத்து சொச்சம் ஓட்டுகள் பெற்றதும், 1991 தேர்தலில் போட்டியிட்டு, அந்தக் கட்சியின் சார்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் யானை மீதேறி சட்டமன்றம் வந்ததும் வரலாறு!
அன்றைய தினம் பாமகவிற்கு ஒரு இடதுசாரி முற்போக்கு முகம் இருந்தது. அதனால் அதை வலுப்படுத்த பல முற்போக்கு அறிவுஜீவிகள் களம் கண்டனர்! அந்த களத்தில் நான் அன்று மிகவும் மதித்த தோழர்கள் அ.மார்க்ஸ்,பிரபஞ்சன்,வள்ளி நாயகம்,அரணமுறுவல்,பேராசிரியர். மூர்த்தி, பார்த்தசாரதி....உள்ளிட்ட பெரிய அறிவுஜீவிகள் படையே அவருக்கு இருந்தது! 1989 ல் இண்டியா டுடே மற்றும் நியூஸ் டைம்ஸ் அசைண்மெண்டுக்காக அவர்களுடன் திண்டிவனம் சென்று டாக்டர் ராமதாசைப் பார்த்த போது, பத்துக்கு பத்தடியுள்ள ஒரு கிளினிக்கில் டாக்டராக அமர்ந்து அவர் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை தந்ததையும், அவரது வெளிப்படையான பேச்சுக்களையும் பார்த்து வியப்படைந்தேன்!
கொங்கு தமிழ் இன்னிசைப் பெருவிழா என அவர் நடத்தி, தமிழிசைக்கும், தமிழ் மரபின் தொடர்ச்சிக்கும் ஆற்றிய அரிய பங்களிப்புகளை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது! செட்டி நாட்டு பாரம்பரியத்தில் வந்த பழ.கருப்பையா ராமதாசின் தலைமையேற்று பாமகவில் இணைந்தெல்லாம் வரலாறு!
அன்று அவர் வன்னியர் தலைவராக அறியப்பட்டிருந்தாலும் கூட, தமிழர் தலைவராக மதிக்கப்பட்டார்! காரணம், சமூகம் என்பது சாதிகளின் கலவையாகும்! சாதிகளுக்கு இடையில் இணக்கம் நிலவினால் தான் சமூக நல்லிணக்கம் என்பதும் சாத்தியப்படும்! ஒருவர் தன் சாதி மீது பற்றுள்ளவராக இருப்பது குற்றமல்ல, ஆனால், அதற்காக மற்ற சாதிகளின் வெறுப்பை சந்திப்பதாக அது அமைந்துவிடக் கூடாது என்ற புரிதல் கொண்ட பெருந்தகையாளராக அன்று ராமதாஸ் அறியப்பட்டார்! இது வெறும் வார்த்தையல்ல, சத்தியம்!
1987 ல் நடைபெற்ற மாபெரும் சாலைமறியல் போராட்டத்திற்குப் பிறகு 1989ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஆட்சி, வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20% ஒதுக்கியதே ராமதாசின் மாபெரும் வெற்றியாகும்! ஆனால், இங்கு ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்; டாக்டர்.ராமதாசின் வெற்றி என்பது அவரது தனி வெற்றியல்ல! அவரது சமூகத்தில் அவருக்கும் முன்பே வன்னிய சமூகத்தை அரசியல்மயப்படுத்தவும்,சமூக தளங்களில் முன்னேற்றவும் ராமசாமி படையாட்சி, ஏ.கோவிந்தசாமி, ஏ.கே.நடராஜன் போன்றவர்கள் ஏற்படுத்தியிருந்த விழிப்புணர்வைத் தான் இவர் ஒன்றுபடுத்தி வெற்றி கண்டார் என்பதை புறக்கணித்துவிடக் கூடாது!
ஆனால், அதற்குப் பிறகு இந்த வெற்றிக் கனியை வன்னிய ஏழை, எளிய மக்கள் சுவைத்துப் பயன்பெற அவர் எந்த முயற்சியிலாவது ஆக்கபூர்வமாக ஈடுபட்டாரா என்றால்...? இல்லை!
தமிழ்நாட்டில் மிகச் சிறுபான்மையாக இருக்கக் கூடிய செளராஷ்டிரா சமூகத்தினர் கூட பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறந்து அந்த சமூகத்தினர் முன்னேறப் பாடுபடுகின்றனர்! ஆனால் கல்வி வணிகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் தன் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகள் சிறப்பாக செயல்படவோ, அதன் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமையின் அவலத்தை சுட்டிக்காட்டி அவற்றை காப்பாற்றவோ கூட ராமதாஸ் செயல்படவில்லை!
பாமக தொடங்கப் பெற்ற பிறகான கடந்த 30 ஆண்டுகளில் வட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் இழுத்து மூடப்பட்ட தகவல்களாவது டாக்டர்.ராமதாசுக்கு தெரியுமா???!!@ தெரியவில்லை!
அவர் தலையெடுப்பதற்கு முன்பே, வன்னிய குலஷத்திரிய மகா சங்கம் என்ற ஒன்று அந்த சமூகத்திற்கு செய்து வந்த கல்விப் பணிகளை அவர் அறியாமல் இருக்க முடியாது! அந்த சங்கத்தின் கேட்பாரற்ற பெரும் சொத்துகளை தன் வசப்படுத்திய ராமதாஸ் அதன் பிறகு செய்தது என்ன? வன்னியர் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கடளை ஆரம்பித்த பொழுது அதற்கு லட்ச, லட்சமாக நன்கொடை கொடுத்த வன்னியப் பெருங்குடி மக்கள் எதற்காக கொட்டிக் கொடுத்தனர்? அதன் மூலம் எத்தனை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு எத்தனை லட்சம் ஏழை, எளிய பிள்ளைகள் தரமான கல்வி கற்றார்கள்..? ராமதாஸ் மனது வைத்திருந்தால் வட மாவட்டங்கள் முழுக்க பள்ளி, கல்லூரிகள் எனப்படும் கல்வி திருக்கோயில்கள் எழுந்திருக்குமே..!
அவர் அதற்கு சொந்தப் பைசா கூட செலவழிக்காமல் கொட்டும் நிதியைக் கொண்டு செய்திருக்கலாமே...!!! ஏன் செய்யவில்லை? வன்னியர்கள் கல்வி விழிப்புணர்வும், அதன் மூலம் வேலைவாய்ப்பு என்ற பொருளாதார வாய்ப்புகளும் பெற்றுவிட்டால் தனக்கு அடி பணிந்துவேலை பார்க்க ஆள் இல்லாமல் போய்விடுமே என்ற அச்சம் தானே!
வன்னியர்களைவிட பின்தங்கிய நாடார் சமூகத்தினர் ஊருக்கு, ஊர் கல்விக் கூடங்களும், திருமண மண்டபங்களும் திறந்து அந்த சமூகத்து ஏழை, எளியோருக்கு உதவுவது கண்கூடானதாகும்!
எப்பவோ வாழ்ந்த செங்கல்வராய நாயக்கர், வள்ளல் பச்சையப்ப முதலியார்… போன்றோர், இன்றும் மக்கள் மனங்களில் கொழுவீற்று இருக்கிறார்கள்!
அவர்களைவிட இன்று பெரும் செல்வம் குவித்துள்ள உங்களால், வன்னிய சமூகத்திற்கே தான் என்ன பயன்? வாழப்பாடி ராமமூர்த்தியார் வன்னிய சமூக மக்களுக்கு செய்த உதவிகளில் கால்வாசி கூட டாக்டர்.ராமதாசோ, அன்புமணியோ செய்ததில்லை!
சைதை துரைசாமி சத்தமில்லாமல் எத்தனை அரசு வேலைகளுக்கு, அதிலும் குறிப்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளுக்கு எவ்வளவு வன்னியர்களை தயார் செய்து அனுப்பியுள்ளார்! சைதையார் பொதுவாக அனைத்து பிரிவினருக்குமாக நடத்தினாலும், அதில் கணிசமாக பலனடைந்தவர்கள் வன்னியர்கள் என்பதை அந்த சமூகம் மறுக்காது! தனி மனிதரான அவரால் இவ்வளவு செய்யமுடியும் என்றால், நீங்கள் நினைத்திருந்தால், அவரைவிட நூறு மடங்கு செய்து, லட்சோபலட்சம் வன்னியர்கள் வாழ்வில் மாற்றம் காணச் செய்து அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று இருக்கலாமே! விசுவாசத்திற்கும், நன்றிக்கும் பேர் போன வன்னியர்கள் அவரை தெய்வமாக கொண்டாடி இருப்பார்களே!
கிடைத்த 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னிய பெருங்குடி மக்கள் பலன் பெறுவதற்கு எந்தத் துரும்பையும் இது வரை எடுத்துப் போடாத ராமதாஸ் மீண்டும் இடஒதுக்கீடு போராட்டம் என்று வன்னியர்களை தெருவில் இறக்கி போராடச் செய்து கொண்டு தானும், தன் மகனும் பாதுகாப்பாக வீட்டில் பதுங்கிக் கொண்டால் என்ன அர்த்தம்? ’’எது நடந்தாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம்… அரசை நாம் மிரண்டு போகவைக்க வேண்டும்’’ என்ற அவர் பேச்சைக் கேட்டு தற்போது வன்முறையில் இறங்க யாரும் தயார் இல்லை! ’’நானே களத்தில் இறங்கி போராடுவேன்’’ என்றவர் அரசின் பேச்சுவார்த்தைக்கு கூட அவரோ, அன்புமணியோ வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை!
ஆரம்பகால போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேரின் குடுபங்களுக்கும், சிறை சென்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் குடும்பங்களுக்கும் ராமதாஸ் என்ன மாதிரி உதவி செய்வார், பாதுகாப்பார் என்பது அனுபவபூர்வமாகத் தெரியும்! அதனால் தான் போராட்ட குணமுள்ள அவ்வளவு வன்னியரும் இன்றைக்கு அவருக்கு எதிராக நிற்கிறார்கள்!
சமூகநீதிப் போராட்டத்தில் ஐயா ஆனைமுத்துவைவிட பெரிய ஆளாக டாக்டர்.ராமதாஸ் தன்னை கருதிவிட முடியாது!
இன்றைக்கு தன் குடும்பத்திற்கும், தன் மகனுக்காகவும் தான், டாக்டர் ராமதாஸ் கட்சி நடத்துகிறார் என்பது வன்னியர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து மனதில் ஆழமாக பதிந்தும்விட்டது. ஒரு காலத்தில் டாக்டர்.ராமதாஸ் என்ற பெயரை பயபக்தியுடனும், பரவசத்துடனும் உச்சரித்த அனேகம் மக்களை பார்த்துள்ளேன். ஆனால், இன்று அவர் பெயரையோ, அவர் மகன் அன்புமணி பெயரையோ கேட்ட மாத்திரத்தில் உடனடியாக வன்னிய மக்கள் முகங்களில் ஒரு கசப்புணர்வு பீறீட்டு வெளிப்படுவதை அனைவரும் பார்க்கிறோம்!
முன்பு முக்கிய புரச்சினைகளில் அறிக்கைகளாவது விட்டுக் கொண்டிருந்தார், ஆனால் பாஜக சகவாசம் தற்போது விவசாயப் போராட்டம் உள்ளிட்ட பலவற்றில் அமைதி காக்கவைத்துவிட்டது!
உள் ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்துவிடுவதன் மூலம், தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற முயற்சிக்கிறார் டாக்டர்.ராமதாஸ்! ஆனால், யதார்த்ததில் அப்படி MBCயில் இருந்து வன்னியர்களுக்கு எடுத்து உள் ஒதுக்கீடு வழங்குவது அதற்குள் இருக்கும் மற்ற 107 சாதிகளான மீனவர், மறவர், குலாலர் உள்ளிட்டோரை ஆளும் கட்சிக்கு எதிராக திருப்பிவிடக் கூடியதாகும் என்பதால் யாருக்கும் தைரியம் வரும் என்று தோன்றவில்லை!
இப்பவே நாடார்கள் தங்களுக்கு 15 சதவிகிதம் கேட்கிறார்கள். அதே போல முக்குலத்தோர், கொங்கு வேளாளர் ஆகிய பெரும் சமூகங்களும் தங்களுக்கு கேட்பார்கள்! இது ஒட்டு மொத்த தமிழகத்தின் சாதி நல்லிணக்கத்திற்கே கேடாகமுடியும் வாய்ப்பும் உள்ளது! டாக்டர்.ராமதாசே முதலமைச்சர் ஆனால் கூட இதை சாத்தியப்படுத்துவது குதிரைக் கொம்பே!
ஆகவே, இந்த விவகாரத்தில் யதார்த்தத்தை வன்னிய மக்களுமே கூட புரிந்து வைத்திருக்கிறார்கள்! எடப்பாடி பழனிச்சாமி தன் கட்சிக்கு சசிகலாவால் ஏற்படவுள்ள பாதிப்புகளை சரிகட்ட, டாக்டர் ராமதாசுக்கு தேவைக்கும் மேல் முக்கியத்துவம் தருகிறார்! உண்மையில் இன்றைய நிலவரப்படி சரிபாதி வன்னியர்கள் பல கட்சிகளிலும் உள்ளனர். மீதமுள்ள பாதியில் மற்றொரு சரிபாதி வஞ்சிக்கப்பட்ட வன்னியர்கள் டாக்டர் ராமதாசையும் பாமகவையும் தோற்கடித்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு களமாடி வருகின்றனர்! ஆக, வன்னியர்களில் கால் பங்கினரே பாமகவை ஆதரிக்கின்றனர். அதே சமயம் பாமகவிற்கு எதிராக பெரும்பாலான சமூகங்கள் அணி திரண்டுள்ளனர். இதை திமுக துல்லியமாக கணித்து தான் பாமகவிற்கு கதவை சாத்திவிட்டது.
அதிமுகவிற்கு நல்ல காலம் இருக்குமானால் அவர்களுக்கும் புத்தி வரட்டும்! பாமகவை தனிமைப்படுத்துவது தான் வன்னியர்களுக்கும் நல்லது. வருங்கால தமிழ்நாட்டிற்குமே நல்லது!
தனிமைபட்ட ராமதாஸ்! பள்ளத்தில் வீழ்ந்த பாமக!
https://aramonline.in/.../pmk-dr-ramadhas-anbumani.../
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக